தேடுதல்

தாய்லாந்து கிறிஸ்தவர்கள் தாய்லாந்து கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

தேர்தலில் தாய்லாந்து கத்தோலிக்கர் பொறுப்புடன் பணியாற்ற அழைப்பு!

எதிர்வரும் தேர்தலில், கத்தோலிக்கர்கள் இறைவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு, நம்பகமான, திறமையான மற்றும் இறையச்சம் கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை அறிக்கையொன்றில் எடுத்துக்காட்டியுள்ளனர் தாய்லாந்து ஆயர்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தாய்லாந்தின் கத்தோலிக்கர்கள் வரும் பிப்ரவரி 8, ஞாயிறன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பொறுப்புடன் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ள அந்நாட்டின் ஆயர் பேரவை, சமூகத்தில் ஒரு "தார்மீக வலிமை" மற்றும் "சமூகத்தின் மனசாட்சி" என்றும் அவர்களின் பங்கை வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 27, செவ்வாயன்று வெளியிலிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த அழைப்பை விடுத்துள்ள அந்நாட்டின் ஆயர்பேரவைத் தலைவர் பேராயர் பிரான்சிஸ் சேவியர் விரா அர்போன்ட்ரதானா அவர்கள், "வாக்களிப்பது என்பது, திருஅவையின் சமூகப் போதனையில் வேரூன்றிய ஒரு தார்மீகக் கடமை" என்று விவரித்துள்ளார்.

மேலும் "மனித மாண்பை மதிக்கும், பொது நன்மைக்கு முன்னுரிமை அளிக்கும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மீது உண்மையான அக்கறை காட்டும் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்" என்று விசுவாசிகளை வலியுறுத்தியுள்ளார் பேராயர் விரா.

"பொது நன்மைக்காக வாக்களிப்பது ஒரு தார்மீகக் கடமை என்பதை அங்கீகரிக்க அனைத்துக் கிறிஸ்தவர்களையும் திருஅவை அழைக்கிறது" என்று சுட்டிக்காட்டியுள்ள பேராயர் விரா அவர்கள், "மக்களாட்சி என்பது சட்ட நடைமுறைகளில் மட்டுமல்ல, அறநெறிமுறை மதிப்பீடுகளிலும் செழித்து வளர்கிறது" என்று கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மக்களாட்சி பங்கேற்பு என்பது வாக்களிப்பதைத் தாண்டி, தேர்தல் செயல்முறை முழுவதும் ஒருமைப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் நிலைநிறுத்துதல் வரை நீண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ள ஆயர்கள், ஊழல், பணம்கொடுத்து வாக்குகளை வாங்குதல் மற்றும் அரசியல் பிரிவினைக்கு எதிராகவும் எச்சரித்துள்ளனர்

கத்தோலிக்கர்கள் இறைவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு, நம்பகமான, திறமையான மற்றும் இறையச்சம் கொண்ட  தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை அந்த அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளனர் ஆயர்கள்.

கத்தோலிக்கர்கள் ஞானம், தெளிந்து தேர்தல் மற்றும் நல்லொழுக்க நிர்வாகத்திற்காக இறைவேண்டல் செய்ய  ஊக்குவிக்கும் அதேவேளையில், "அரசியல் தலைவர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும்" என்றும் அவ்வறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர் ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஜனவரி 2026, 13:02