தேடுதல்

ஆண்டவரின் திருமுழுக்கு  ஆண்டவரின் திருமுழுக்கு  

ஆண்டவரின் திருமுழுக்கு : திருமுழுக்கு அனுபவம் பெறுவோம்!

அடிமைத்தளைகளை அறுத்தெறிவதும், ஆதிக்கத்தனங்களை அழித்தொழிப்பதும், வேறுபாடுகளை வீழ்த்தி, அனைவரையும் ஒற்றைக்குடையின்கீழ் ஒன்றுசேர்க்க வாழ்வையே அர்ப்பணிப்பதும், இயேசுவின் வழியில் நாம் பெறும் திருமுழுக்கு அனுபவங்களே!
ஆண்டவரின் திருமுழுக்கு : திருமுழுக்கு அனுபவம் பெறுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள்  I. எசா 42: 1-4, 6-7       II. திப 10: 34-38       III. மத்  3: 13-17)

ஹவாய் தீவுகளில் வாழ்ந்தவர்கள் நடுவே தொழுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு, அருகில் இருந்த மொலக்காய் தீவுக்கு அனுப்பப்பட்டனர். அந்தத் தீவுக்கு அனுப்பப்படுவது, ஏறத்தாழ மரணதண்டனைத் தீர்ப்புக்குச் சமம். ஏனெனில், அந்தத் தீவில், மருத்துவர், மருந்துகள், குடியிருப்பு என்று எதுவும் கிடையாது. அங்குச் செல்லும் அனைவரும், பகலில் சுட்டெரிக்கும் வெயிலிலும், இரவில் கடும் குளிரிலும் துன்புற்று, விரைவில் சாக வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு அனுப்பப்பட்டனர். அத்தீவில், ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கு, இளம் அருள்பணியாளர், டேமியன் தெ வூஸ்டர் அவர்கள், ஆயரால் அனுப்பப்பட்டார். அந்த இளையவர், தச்சுவேலையில் திறமை பெற்றவர் என்பதால், மொலக்காய் தீவில் ஒரு சிற்றாலயம் நிறுவுவதற்கென அங்கு அனுப்பப்பட்டார். அந்தச் சிற்றாலயம், ஏற்கனவே கட்டைகளால் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ஆலயத்தை குறிப்பிட்ட ஓரிடத்தில் பொருத்திவிட்டு திரும்பி வந்துவிட வேண்டும் என்று அருள்பணியாளர் டேமியனிடம் ஆயர் கூறியிருந்தார். தீவில் உள்ள தொழுநோயாளர் யாருடனும், எவ்வகையிலும் அவர் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையுடன் ஆயர் அவரை அங்கு அனுப்பினார்.

தன் 33-வது வயதில் மொலக்காய் தீவை அடைந்த இளம் அருள்பணியாளர் டேமியன் அவர்கள், கோவிலை வடிவமைத்துக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த மக்களின் நிலையைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மரக்கட்டைகளைக் கொண்டு இந்த ஆலயத்தை உருவாக்குவதைவிட, அங்குள்ள மனிதர்களைக் கொண்டு, இறைவனுக்கு உயிருள்ள ஆலயத்தை உருவாக்குவது முக்கியம் என்று அவர் எண்ணினார். ஆயரின் அனுமதியுடன், அருள்பணி டேமியன் அங்கு தங்கினார். விரைவில், அவர், அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். அவர்களுக்கு இல்லங்கள் அமைத்துத் தருவதில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு சில நாட்கள், அல்லது, மாதங்கள் தங்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பமான அவர் பணி, 16 ஆண்டுகள் தொடர்ந்தது. 11 ஆண்டுகள் சென்றபின், ஒருநாள், அவர் குளிக்கச் சென்ற வேளையில், தன் கால்களைக் கொதிக்கும் நீரில் தவறுதலாக வைத்தார். அவரது கால்களில் கொப்பளங்கள் உருவாயின; ஆனால், அவர் அந்த வலியை உணரவில்லை. அன்று, அவர், தானும் தொழுநோயால் பாதிக்கப்பட்டதை உணர்ந்தார்.

வழக்கமாக அவர் திருப்பலியில் மறையுரை வழங்கும்போது, 'தொழுநோயுற்றோர்' என்று பொதுவாகக் குறிப்பிட்டுப் பேசுவார். தனக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அடுத்த நாள், அவர் கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபோது, "தொழுநோயாளிகளாகிய நாம்" என்று, அவர்களோடு தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொண்டார். ஐந்து ஆண்டுகள் ஒரு தொழுநோயாளியாக அவர்கள் நடுவே வாழ்ந்த அருள்பணி டேமியன் தெ வூஸ்டர் அவர்கள், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி தன் 49-வது வயதில் இறைபதம் அடைந்தார். ஒவ்வோர் ஆண்டும், புனித டேமியன் திருவிழா (மே 10ம் தேதி), சிறப்பிக்கப்படுகிறது.

மாற்றம் தரும் திருமுழுக்கு அனுபவம்

இன்று அன்னையாம் திருஅவை ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்தச் சமுதாயத்தை மாற்றிய புரட்சியாளர்களாக இருந்தாலும் சரி அல்லது இறையழைத்தல் பெற்று திருஅவையிலும், இறைமக்கள் மத்தியிலும் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதோவொரு நிலையில் இந்தத் திருமுழுக்கு அனுபவம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது திண்ணம்.  நான் யார், நான் எதற்காக இவ்வுலகிற்கு வந்திருக்கிறேன், நான் எதைநோக்கிப் பயணிக்கிறேன், எனது பயணத்திற்கான பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தத் திருமுழுக்கு அனுபவம் ஏற்படுத்துகிறது. ஆக, அனுபவம்தான் நல்வாழ்விற்கான நோக்கத்தையும், இலட்சியத்தையும், அர்ப்பணத்தையும், தியாகத்தையும் நமக்கு வழங்குகிறது. அந்த அனுபவம்தான் கடவுள். இந்த அனுவத்தைதான் கடவுள் வழங்கிய ஒரு அழைப்பாக அருள்பணியாளர் டேமியன் அவர்கள் பெற்றார்.  

இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் திருமுழுக்கு நிகழ்வில் இதைத்தான் காண்கின்றோம். இயேசு திருமுழுக்குப் பெறும் நிகழ்வை ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவருமே கொடுத்துள்ளனர் (காண்க. மாற் 1:9-11; லூக் 3:21-22). மாற்குவும் லூக்காவும் ஆண்டவரின் திருமுழுக்குக் குறித்து மிகச் சுருக்கமாகக் கூறியுள்ள நிலையில், மத்தேயு மட்டும் சற்று நீட்டியிருக்கிறார். அதேவேளையில் மற்ற இருவரும் சொல்லாத கருத்தையும் சொல்லியிருக்கிறார். முதலாவது, மாற்குவும் லூக்காவும், “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று தந்தை தனது திருமகனிடம் நேரிடையாகச் சொல்வதுபோல் கூறியிருக்கின்றனர். ஆனால், மத்தேயு மட்டும், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று யோர்தான் ஆற்றின் கரையில் இருக்கும் மக்களுக்கும் இவ்வுலக மக்களுக்கும் தன் மகனை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளது சிறப்பு. அவ்வாறே, மாற்குவும் லூக்காவும், இயேசுவுக்கும் திருமுழுக்கு யோவானுக்கும் இடையே எவ்வித உரையாடலும் இன்றி இயேசு திருமுழுக்குப் பெற்றதாகப் பதிவுசெய்துள்ளனர். ஆனால் மத்தேயு இதில் சற்று வேறுபடுகிறார். அதாவது, 'இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார். இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்' (வச. 13-15) என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமுழுக்கு யோவான் இயேசுவைத் தடுப்பதற்கு முக்கிய காரணம், அவரை உண்மையான மெசியா என்று அவர் அறிந்துகொண்டதுதான். இதைத்தான் யோவான் நற்செய்தியில் காண்கின்றோம். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார் (யோவா 1:19-20). ஆனால் அவர்கள் நீர் யார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்ததால், திருமுழுக்கு யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” (வச. 26-27) என்று கூறுகின்றார். மேலும் “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால், தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்” (வச 32-34) என்கின்றார். குறிப்பாக, "இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது" என்று இருமுறை கூறுகின்றார் (காண்க வச.31,33). ஆக, யாரென்றே தெரியாத இயேசுவை தூய ஆவி வழியாக இன்னாரென்று அறிந்துகொண்டதால்தான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் அதேவேளையில், “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” என்று இயேசு கூறிய வார்த்தைகள் அவருக்குத் திருமுழுக்குக் கொடுக்க யோவானை அனுமதிக்கின்றன. மேலும் இவ்வுலகை மீட்க வேண்டும் என்பதற்காக, பாவமற்ற இயேசு பாவமுள்ள மனிதருடன் திருமுழுக்கின் வழியாக தம்மை ஒன்றுபடுத்திக்கொள்கின்றார் என்பதையும் இங்கே நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இறைத்தந்தையின் வார்த்தைகள்

அடுத்து, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. என்று கூறுகின்றார் மத்தேயு. இங்கே தந்தை, மகன், தூய ஆவி என மூவொரு கடவுளின் பிரசன்னத்தையும் பார்க்கின்றோம். இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்கும் முன் தந்தையாம் கடவுள் தனது ஒரே திருமகனாகிய இயேசுவை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். மேலும் அவரை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதிலே தான் மிகுந்த அளவில் மகிழ்வடைவதாகவும் உரைக்கின்றார். அவ்வாறே இயேசு கல்வாரியில் தனது இன்னுயிரைக் கையளிப்பதற்கு முன் பெற்ற தோற்றமாற்ற நிகழ்விலும், “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” (காண்க. லூக் 9:35) என்று தந்தையின் குரல் ஒலிப்பதைக் காண்கின்றோம்.

இதன் பின்னணியில்தான் இன்றைய முதல் வாசகத்தில் 'என் அன்பார்ந்த மகன்' என்பது 'என் ஊழியர்' என்ற அர்த்தத்தில் இறைவாக்கினர் எசாயாவின் நூலில் மெசியாவின் பண்புநலன்கள் தந்தையின் குரலில் வெளிப்படுகிறது.  "இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்." ஆகவே, இதன்வழியாக மெசியா என்னும் மீட்பர் தனது தூய்மைமிகுப் பாடுகள் வழியாக இவ்வுலகை ஆட்சிசெய்பவர் என்ற பேருண்மை தொடக்கத்திலேயே திண்ணமாக உணர்த்தப்படுகிறது. இதுமட்டுமன்றி, வரலாற்றின் முழுவதிலும் திருமகன் இயேசுவுடன் இறைத்தந்தை மற்றும் தூய ஆவியாரின் உடனிருப்பு தொடர்கின்றது என்பதையும் பார்க்கின்றோம்.

ஓடிப்பாயும் யோர்தான் ஆறு

இயேசுவின் திருமுழுக்கு இன்னொரு அடையாளத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அதுதான் ஓரிடத்தில் மட்டுமே தங்கிவிடும் தண்ணீராய் இருந்துவிடாமல், ஓடிப்பாயும் அருவிநீராய் இரு என்பதுதான். குளம், குட்டை, ஏரி போன்று ஓரிடத்தில் தேங்கியிருக்கும் நீர்நிலைகளைவிட, நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் போன்று ஓடிப்பாயும் தண்ணீர்தான் எவ்வித வித்தியாசமுமின்றி எல்லா மக்களின் வாழ்விலும் பசியையும், பட்டினியையும், வறுமையும் போக்கி நீடித்த வளமையைத் தரும். அவ்வாறே இயேசு என்ற வற்றாத ஆறும் பல்வேறு இடங்களுக்கும் சென்று, எல்லா வகையான மக்களுக்கும் பணியாற்றி அன்பையும், நீதியையும், நேர்மையையும், சமத்துவத்தையும், அமைதியையும் வழங்கினார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு, அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார் (காண்க. மாற் 1:36-39) என்று மாற்கு நற்செய்தியில் வாசிக்கின்றோம்.  மேலும். "கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பேதுருவும் இயேசுவின் திருமுழுக்கிற்கும் அவரது பணிவாழ்விற்கும் சான்று பகர்கின்றார்.

இயேசுவின் திருமுழுக்கத் தரும் பாடங்கள்

இயேசுவின் திருமுழுக்கு நமக்கு சில படிப்பினைகளைத் தருகின்றது. முதலாவது, உண்மையான தலைமைத்துவம் என்பது பணிவிலும் பணியிலும் வேரூன்றியுள்ளது என்பதையும், கடவுளுக்குக் கீழ்ப்படிதல் தேவையற்றதாகவோ அல்லது கடினமாகவோ உணர்ந்தாலும் கூட முக்கியமானது என்பதையும் இது காட்டுகிறது. இரண்டாவதாக, மனிதகுலத்துடன் தன்னை அடையாளம் காண்பதன் வழியாக, இயேசு மற்றவர்களுடன், குறிப்பாக வலுக்குறைந்தவர்களுடன் இரக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் மாதிரியாகக் காட்டுகிறார். மேலும் அவரது திருமுழுக்கு விசுவாசத்திற்கான ஒரு பொது அர்ப்பணிப்பைக் குறிக்கிறது, விசுவாசிகள் தங்கள் மதிப்பீடுகளை வெளிப்படையாக வாழ நினைவூட்டுகிறது. மூன்றாவதாக, இயேசுவின் திருமுழுக்கு புதிய தொடக்கங்களை எடுத்துரைக்கின்றது மற்றும் தகுதிநிலை அல்லது வெற்றியை அல்ல, கடவுளின் அன்பை அடிப்படையாகக் கொண்ட மனித மதிப்பை உறுதிப்படுத்துகிறது. இறுதியாக, தூய ஆவியின் பிரசன்னமும் மூவொரு கடவுளின் ஒன்றிப்பும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூகத்திலும் ஆன்மிக வலிமை, ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிப்புக்கான அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே, இவற்றை நம் மனங்களில் நிறுத்தி இயேசுவின் திருமுழுக்கை அர்த்தம் பொதிந்த வகையில் கொண்டாடி மகிழ்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஜனவரி 2026, 13:50