ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா: அன்பால் இருளகற்றி ஒளியேற்றுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 60: 1-6 II. எபே 3: 2-3a,5-6 III. மத் 2: 1-12)
மன்னர் ஒருவருக்குப் பெரிய கேள்வி ஒன்று எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய பொருள் எது என்பதே அவரது கேள்வி. “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அமைச்சர்கள், அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம்” என்ற செய்தியை அறிவித்த மன்னர், “அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் மண்டபத்தில் வைத்து விடுங்கள்” என்று கூறினார். மேலும், “யாருடைய பொருள் மன்னருடைய கேள்விக்குச் சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும்” எனவும் அறிவித்தார். மக்களும் வெகுவாகச் சிந்தித்து, அவர்களுக்குத் தெரிந்து மகிழ்ச்சியைத் தரும் பொருள்கள் எவையோ அவற்றைக் கொண்டு வந்து அரண்மனையின் மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காகக் காத்திருந்தார்கள். மறுநாள், மன்னர் மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருள்கள் மண்டபத்தில் நிரம்பி வழிந்தன. ஒவ்வொரு பொருளாக மன்னர் பார்த்துக் கொண்டே வந்தார். முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “ஏழைகளுக்கும், நோயாளார்களுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியைத் தரும்? அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” என அதை நிராகரித்தார் மன்னர். அடுத்ததாக, ஒரு அழகான இசைக் கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “காது கேளாதோருக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும்? என சிந்தித்த மன்னர் அதையும் நிராகரித்தார். அடுத்து, அழகான மலர்கள் இருந்தன. அதன் கீழே. “மலர்கள் மட்டுமே மகிழ்வைத் தரக்கூடியவை” என எழுத்தப்பட்டிருந்தது. இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியைத் தர முடியும்?. அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் மன்னர்.
அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தன. “நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியைத் தரும்?” என்று கூறி அதனையும் நிராகரித்தார் மன்னர். இறுதியாக அங்கே ஒரு பெரிய சிற்பத்தைக் கண்ட மன்னர் அதனருகில் வந்தார். அந்தச் சிற்பத்தில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிற்பத்தின் கீழே “அன்பே கடவுள்” என்று எழுதப்பட்டிருந்தது. உடனே மன்னர், "இந்தச் சிலையை செதுக்கிய சிற்பியை அழைத்து வாருங்கள்" என்றார். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார். அந்தச் சிற்பியிடம் “நீங்கள்தான் இந்தச் சிற்பத்தை வடித்தீர்களா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாகச் சொல்லுங்கள்.” என்றார் மன்னர். “மன்னரே, இந்தச் சிற்பத்தில் ஒரு தாய் அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள். இந்த உலகில் கண் தெரியாதவர்ளும், காது கேளாதவர்களும், வாய் பேச முடியாதவர்களும், நோயாளர்களும், ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களும் உணரக் கூடிய ஒன்று மகிழ்ச்சி மட்டுமே. இந்த மகிழ்ச்சிதான் அன்பை வெளிப்படுத்துகிறது. அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது அன்பு ஒன்றுதான். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது. அன்பில்லாமை அமைதியற்ற உலகத்தையே உருவாக்கும். அந்த உயர்ந்த அன்பாக ஒளிர்பவர்தான் இறைவன். அதனால்தான் தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை ஒரு குழந்தைக்கு உணவூட்டுவது போன்று வடிவமைத்து, ”அன்பே கடவுள்” என்று எழுதி வைத்தேன்.” என விளக்கினார் சிற்பி. இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர், “உலகத்திலேயே எவ்வித வேறுபாடுமில்லாமல் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கத்தைக் கொடுத்துவிட்டீர்கள். இனி என்னுடைய அரசில் எல்லாருக்கும் என் முழுமையான அன்பை வெளிப்படுத்துவேன். என் அன்பும் அரவணைப்பும், இரக்கமும் எல்லா இனத்து மக்களுக்கும் சொந்தம்” என்று கூறிய மன்னர் அந்தச் சிற்பிக்குப் பரிசளித்து அவரது வாழ்க்கையை உயர்த்தினார்.
நமது அன்னையாம் திருஅவை ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவை இன்று கொண்டாடி மகிழ்கின்றது. கடவுள் தன்னை அனைவருக்கும் அதாவது, பிற இனத்தாருக்கும் வெளிப்படுத்திய விழாவைத்தான் திருக்காட்சிப் பெருவிழா என்று அழைக்கின்றோம். நம் தமிழகத்தில் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இன்றும்கூட கிராமப்புறங்களில் இதனை மூன்று இராஜாக்கள் விழா என்றே அழைக்கின்றனர். அதிலும் கூட ஒரு அருமையான பொருள் பொதிந்துள்ளது. இந்த மூன்று அரசர்களும் அல்லது ஞானிகளும் வெவ்வேறு நாடுகளையும், மொழிகளையும், கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் பின்னணியாகக் கொண்டவர்கள். இவர்கள் மூவரும் இறைவன் காட்டிய ஒற்றை விண்மீனால் ஒரே கடவுளின் பிள்ளைகளாக ஒன்றிணைக்கப்படுகிறார்கள். ஒரு தாய் எத்தனைப் பிள்ளைகளைக் கொண்டிருந்தாலும் அத்தனை பிள்ளைகளுக்கும் அவர் ஒரே மாதிரியான அன்பைத்தான் வெளிப்படுத்துவார். மனிதர் தங்களின் சுயநலத்தாலும் பேராசையாலும் தனக்கொத்த மனிதரை நாடு, இனம், நிறம், மொழி, சாதி, மதம் என வேற்றுமைப்படுத்தினாலும், கடவுள், தனது சாயலாகப் படைத்த மானிடரை எப்போதும் சமமாகவே நடத்துகிறார் என்பதும் இப்பெருவிழா வெளிப்படுத்தும் கருத்தாக அமைகிறது. இன்றைய முதல் வாசகம் இதனைத்தான் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இதனைத்தான் நேர்மையும் இறைப்பற்றும் கொண்ட சிமியோன் எடுத்துரைக்கின்றார். யோசேப்பும் அன்னை மரியாவும் குழந்தை இயேசுவைக் கோவிலுக்குக் கொண்டுவந்தபோது, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன்போகச் செய்கிறீர். ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” (லூக் 2:29-32) என்று கூறி மகிழ்கின்றார். ஆக, கிறிஸ்து என்னும் அரசர் அனைத்து மக்கள்மீதும் ஒளிவீசக்கூடியவர். அனைவருமே அவரது அரசுக்கு உட்பட்டவர்கள் என்பது இதன் உண்மைப் பொருளாகிறது. இதன் காரணமாகவே, இயேசுவும் “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்கிறார் (யோவா 8:12). விண்ணகக் கடவுள், மண்ணக மாந்தரின் மீட்புக்காகத் தன்னை மிகவே தாழ்த்திக்கொண்டு மனுவுருவெடுத்தார். இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் மறைபொருள் என்கிறார் புனித பவுலடியார். மேலும், நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள் என்றும் விவரிக்கின்றார். இப்போது ஒளியையும் இருளையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். வெளிச்சம் அல்லது ஒளி என்பது பாதுகாப்பான உணர்வைத் தருகிறது. இருள் திகிலையும் பயத்தையுமே ஏற்படுத்துகின்றது. வெளிச்சம் நம்பிக்கையை அளிக்கிறது. இருள் தவிப்பையும், தடுமாற்றத்தையும், தத்தளிப்பையும் தருகிறது. வெளிச்சம் உற்சாகத்தைத் தருகிறது. இருள் மனச்சோர்வை உண்டாக்குகிறது. வெளிச்சம் மகிழ்ச்சியை விளைவிக்கிறது. இருள் துயரத்தைக் கொண்டு வருகிறது. வெளிச்சம் புத்துணர்ச்சியைத் தருகிறது. இருள் ஒட்டுமொத்த வாழ்வையும் முடக்கி ஊனமாக்கிவிடுகிறது. ஆகவே, இருள் அகல வேண்டுமெனில் ஒளி உதிக்க வேண்டும். நமது உடல் என்பது தூயதொரு கோவில். அதில் உள்ளம் என்பது ஒரு விளக்கு. இறைமையின் ஊற்றில் மூழ்குபவர்களுக்கு அந்த விளக்கிலுள்ள எண்ணெய் நற்சிந்தனைகளாகச் சுரக்கிறது. வாழ்க்கை என்னும் திரி எண்ணையில் தோயும்போது நற்செயல்கள் தீபமாக எரிந்து எப்போதும் பிரகாசிக்கிறது. எடுத்துக்காட்டா, நாம் இருள் சூழ்ந்த சாலையில் தனியாக நடக்கும்போது மனம் பதற்றமடைகிறது. தெருமுனை முடிந்து வீட்டின் வெளிச்சம் கண்டவுடன் மனதில் நிம்மதி பிறக்கின்றது. நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். அவ்வாறே, கடலில் மீன்பிடித்துவிட்டு நள்ளிரவில் வீடுதிரும்பும் மீனவர்கள் கலங்கரை விளக்கின் வெளிச்சம் காணும்வரை அச்சத்தின் பிடியில் இருப்பார்கள். அதனைக் கண்டதும் உள்ளத்தில் நம்பிக்கையும் உற்சாகமும் பிறக்கின்றன. மலைகளின் மீது அமைந்த நகரம் வெளிச்சத்தில் அழகாகக் காட்சியளிக்கிறது. பொன்னிற ஒளியில் அது மனதை மகிழ்விக்கிறது. ஆக, பாதுகாப்பு, நம்பிக்கை, உற்சாகம், புத்துணர்வு, மகிழ்ச்சி ஆகியவற்றை இழந்து தவிக்கும் பலரின் வாழ்வில் ஒளிதரும் விண்மீனாக, கலங்கரை விளக்கமாக நமது இயேசு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தியதுதான் இந்தத் ததிருக்காட்சிப் பெருவிழா.
திரு. நெல்சன் மண்டேலா அவர்கள், 27 ஆண்டுகள் கொடும் சிறைவாசம் அனுபவித்த பிறகு விடுதலையானர். அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அரசுத் தலைவரானார். அவர் பதவியேற்ற பிறகு பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் ஒருவர், “மண்டேலா அவர்களே, "இப்போது நீங்கள் இந்நாட்டின் அரசுத் தலைவராகி இருக்கிறீர்கள். ஆட்சி அதிகாரம் இப்போது உங்கள் கையில் இருக்கின்றது. இத்தனை ஆண்டு காலம் உங்களை ஒடுக்கிய வெள்ளையினத்தவரை பழிதீர்ப்பீர்களா" என்று கேட்டார். அப்போது புன்முறுவல் பூத்த நெல்சன் மண்டேலா, “நான் யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த அரசுத்தலைவர் பொறுப்பை ஏற்கவில்லை. அப்படி பழிவாங்கும் எண்ணமும் இப்போது என்னிடத்தில் இல்லை. நான் இப்போது விரும்புவதெல்லாம் கறுப்பினத்தவரும் வெள்ளை இனத்தவரும் ஒன்றிணைந்து ஒரே சகோதரர் சகோதரிகளாக வாழவேண்டும் என்பதே. இதையே நான் எப்போதும் விரும்புகின்றேன். எனது அரசு எல்லாருக்குமானது. எல்லா இனத்தவரையும் ஒன்றிணைக்க கூடியது” என்றார். எத்தனை உண்மையான வார்த்தைகள் இவை என்பதை நாம் இத்தருணத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்றைய நம் இந்தியாவில் எத்தனையோ வேறுபாடுகள் நிலவுவதைப் பார்க்கின்றோம். வறுமை, பஞ்சம் பட்டினி, ஏற்றத்தாழ்வு, சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளால் மக்கள் படும் அவதிகள் ஏராளம். இருள்படர்ந்த மக்கள் வாழ்வில் ஒளிபாய்ச்சுவோம் என்று வாய்ச்சவடால் விட்டு ஆட்சி அரியணையில் ஏறியவர்கள், இன்றும் இருளின் பிடியில்தான் மக்களைத் தொடர்ந்து நிலைபெறச் செய்துள்ளனர். ‘இந்தியா ஒளிர்கிறது’ என்றார்கள். ஆனால் இந்தியா ஒளிரவில்லை, அது ஒழிகிறது என்று தேசத்தின் அனைத்துச் சமூக நலன்விரும்பிகளும் கூறி வருகிறார்கள். இது அப்பட்டமான உண்மை என்பதையே நாட்டில் நிகழும் பல்வேறு சம்வங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நமக்கான நல்ல தலைவன் இனிமேலாவது வரமாட்டானா என்ற இந்திய மக்களின் ஏக்கப் பெருமூச்சு இன்னும் நின்றபாடில்லை. அதேவேளையில் நமக்கான நல்ல தலைவர்களை நம்மிடையே தேடுவதை விட்டுவிட்டு திரைத் துறையில் தேடிக்கொண்டிருக்கின்றது இன்றைய நம் இளைய சமுதாயம். அதேவேளையில், அமைதியாய் வாழும் மக்கள் மத்தியில் மதத்தின் பெயரால் பிரிவினைகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தத் துடியாய் துடிக்கும் சில அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தனமான பொறுப்பற்ற பேச்சுக்கள் நம்மைத் துயரத்தின் உச்சத்திற்குக்கே கொண்டு செல்கின்றன. எனவே மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற்று பிறர் வாழ்வில் ஒளியேற்றிட முயலவேண்டும். கடவுள் பிரிவினைகளை அல்ல ஒன்றிப்பையே விரும்புகின்றார் என்பதை இந்நாளில் உணர்ந்து செயல்பட இப்பெருவிழா நம்மை அழைக்கின்றது.
காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசா 9:2) என்று எசாயா நூலில் வாசிக்கின்றோம். ஆகவே, அனைத்துலக மக்களுக்கும் ஒளியாய் உதித்த இயேசுவைப்போல, இருள் படர்ந்துள்ள மக்களின் வாழ்வில் நாமும் நம்பிக்கை ஒளியேற்றுவோம். ஒளியும், வழியும், உண்மையும், வாழ்வுமான இயேசு நமக்கு உதவிட இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்