பெத்லகேமின் திருப்பிறப்புக் குகையின் மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனித நாட்டில் உள்ள கிறிஸ்தவத்தின் புனிதத் தலங்களில் ஒன்றான பெத்லகேமின் திருப்பிறப்புக் குகை, 600 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது என்று செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.
புனித பூமியின் பாதுகாவல,ர் எருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை மற்றும் ஆர்மீனிய அப்போஸ்தலிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தைக்கு இடையேயான கூட்டு முயற்சியான இந்தத் திட்டம், பாலஸ்தீன அரசுத்தலைவரின் ஆதரவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாறை, பளிங்குத் தரைகள், தூண்கள் மற்றும் இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் சின்னமான நட்சத்திரம் ஆகியவற்றின் மறுசீரமைப்பு பணிகள், அண்மையில் திருப்பிறப்பு பெருங்கோவிலில் புதுப்பித்தல்களை முடித்த ஓர் இத்தாலிய நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மறுசீரமைப்பில் பயிற்சி பெற்ற உள்ளூர் பெத்லகேம் குடும்பங்களைப் பணியமர்த்தும், மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்று அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாலஸ்தீன அரசுத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், இந்த மறுசீரமைப்பை "முழு புனித பூமிக்கும் பெரும் நம்பிக்கை மற்றும் மறுபிறப்பின் அடையாளம்" என்று விவரித்துள்ளதுடன், "இது இப்பகுதிக்கு ஆன்மிக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டம் பல்வேறு கிறிஸ்தவத் திருச்சபைகளிடையே கிறிஸ்தவ ஒன்றிப்பை வெளிப்படுத்துகிறது. எதிர்கால சந்ததியினருக்காக புனிதத் தலத்தைப் பாதுகாக்கிறது, அதேவேளையில், புனித பூமியில் நீடித்த கிறிஸ்தவ இருப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று அச்செய்திக் குறிப்பில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்