தேடுதல்

அணுகுண்டு வெடிப்பு அணுகுண்டு வெடிப்பு   (©lukszczepanski - stock.adobe.com)

உலகளாவிய அமைதிக்கு கத்தோலிக்கத் தலைவர்கள் அழைப்பு!

"எண்பது ஆண்டுகளாக நீடிக்கும் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் மிகவும் நீண்ட காலம்" என்றும் "இது இனியும் தொடரக்கூடாது. மேலும் அணு ஆயுதத் தடை ஒப்பந்தமானது நாடுகள் மற்றும் எல்லைகளைக் கடந்த ஒரு மிக உயர்ந்த தார்மீக செல்வாக்கைக் கொண்டிருக்கிறது" அணு ஆயுதம் குறித்த கூட்டறிக்கை

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்திற்கான கூட்டாண்மை நடைமுறைக்கு வந்த ஐந்தாம் ஆண்டைக் குறிக்கும் வகையில், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஜனவரி 21, புதன்கிழமையன்று, வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையில், இன்னும் பல நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

உலகளாவிய அணு ஆயுத ஒழிப்பை நோக்கிய ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக இந்த ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கை, "அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ் தாங்கள் ஏற்றுக்கொண்ட கடமைகளை மதித்து நடக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளது.

"2021- ஆம் ஆண்டு ஜனவரி மதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த ஒப்பந்தம், அணு ஆயுதங்களை உலகிலிருந்து முற்றிலுமாக அகற்றுவதை தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது" என்றும், "2017-ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் முதன்முதலாகக் கையெழுத்திட்ட திருப்பீடம், அணு ஆயுத ஒழிப்பிற்கான தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது" என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அணு ஆயுத வல்லரசு நாடுகள், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தத் தவறிவிட்டன என்று அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்திற்கான கூட்டாண்மை (TPNW)  கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக, உக்ரைனில் இரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் போன்ற உலகளாவியப் பதட்டங்களுக்கு மத்தியில், இந்த நாடுகளின் மெத்தனப் போக்கு கவலையளிப்பதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

சாண்டா ஃபே (Santa Fe), சியாட்டில் (Seattle), ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய மறைமாவட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டாண்மை, அணு ஆயுதங்களை நவீனமயமாக்குவதை கடுமையாகக் கண்டித்துள்ளது.

மேலும், உலகத் தலைவர்கள் அணு ஆயுத ஒழிப்பில் வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், உறுதியான முன்னேற்றத்தை காட்ட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

"எண்பது ஆண்டுகளாக நீடிக்கும் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் மிகவும் நீண்ட காலம்" என்றும் "இது இனியும் தொடரக்கூடாது" என்றும் கூறும் அதன் அறிக்கை, "அணு ஆயுதத் தடை ஒப்பந்தமானது நாடுகள் மற்றும் எல்லைகளைக் கடந்த ஒரு மிக உயர்ந்த தார்மீக செல்வாக்கைக் கொண்டிருக்கிறது" என்றும்   வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க மற்றும் ஜப்பானிய பேராயர்களான மேதகு ஜான் சி. வெஸ்டர் (John C. Wester) மற்றும் மேதகு ஜோசப் மிட்சுவாக்கி தகாமி (Joseph Mitsuaki Takami) ஆகியோர், ஜப்பானில் அணு குண்டு வீச்சினால் ஏற்பட்ட பேரழிவுகளை நினைவு கூர்ந்ததோடு, அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஜனவரி 2026, 13:44