தேடுதல்

நைஜீரியாவில் உள்ள ஓர் ஆலயம் நைஜீரியாவில் உள்ள ஓர் ஆலயம்   (AFP or licensors)

நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் விடுவிப்பு!

நைஜீரியாவில் இரண்டு மாதங்கள் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்த கத்தோலிக்கப் பங்குத்தந்தை பாபோ பாஸ்கல் விடுவிப்பு

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

வட-மத்திய நைஜீரியாவின் கடுனா மாநிலத்தின் குஷே குட்கு ககர்கோ உள்ளூர் அரசுப் பகுதியில் உள்ள புனித ஸ்தேவான் பங்குத்தளத்தின் அருள்பணியாளர் பாப்போ பாஸ்கல் அவர்கள், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு, நவம்பர் 17 அன்று அதிகாலையில் தனது பங்கு இல்லத்திலிருந்து அவர் கடத்தப்பட்டார். அப்போது அங்கு நிகழ்ந்த தாக்குதலின் போது, கடத்தல்காரர்கள் அவரது  சகோதரரையும் கொலை செய்தனர்.

கடுனா உயர்மறைமாவட்டத்தின் செயலர் அருள்பணியாளர் கிறிஸ்டியன் ஓகெவு இம்மானுவேல் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், அருள்பணியாளர் பாஸ்கல் அவர்கள் ஜனவரி 17, சனிக்கிழமையன்று,  எந்தக் காயமும் இன்றி விடுவிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறப்பாக, அருள்பணியாளர் பாஸ்கலின்  விடுதலைக்காக உழைத்த பாதுகாப்பு நிறுவனங்கள், மற்றும் இறைவேண்டல் செய்த இறைமக்கள் மற்றும் குடிமக்களுக்கு கடுனா உயர்மறைமாவட்டப் பேராயர் மேத்யூ மான்-ஓசோ நடகோஸோ அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். 

கடத்தப்பட்ட உடனேயே, அருள்பணியாளர் பாஸ்கல் அவர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் கடுனா உயர்மறைமாவட்டம் பின்னர் அவற்றை அதிகாரப்பூர்வமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் அருள்பணியாளர் பாஸ்கல் அவர்களின் விடுதலைக்கான சூழல்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்த எதனையும் வெளியிடவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜனவரி 2026, 12:57