தேடுதல்

நைஜீரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நைஜீரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்கள்   (Stringer)

நைஜீரியாவில் புத்தாண்டு தினத்தன்று 42 பேர் படுகொலை

நைஜீரியாவில் தொடரும் தாக்குதல்கள் அப்பாவி பொதுமக்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்து வருவதால், இப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற அவசரத் தேவையை இந்த அண்மைய வன்முறை நிகழ்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

நைஜீரியாவில் புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற வன்முறை செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  ஏனெனில் கொடூரமான ஆயுதமேந்திய கொள்ளையர்கள் நாட்டின் மத்தியப் பகுதி முழுவதும் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களைத் நடத்தினர் என்றும், இதன் தொடச்சியாக கசுவான் டாஜி என்ற கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு மாபெரும் படுகொலையில் முடிந்தது என்றும் ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 3, சனிக்கிழமையன்று, தாக்குதல் நடத்தியவர்கள் கிராமத்தைச் சூறையாடி, அம்மக்களின் கைகளைப் பின்னால் கட்டிச் சுட்டுக் கொன்றதில் ஏறத்தாழ 42 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் என்றும், இறந்தவர்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இருபிரிவினரும் அடங்குவர் என்றும் கூறும் அச்செய்தி,  எண்ணிலடங்கா பெண்கள் மற்றும் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

கொள்ளையர்கள் சந்தையையும் சுற்றியுள்ள வீடுகளையும் தீ வைத்து கொளுத்தியதுடன், கிராமத்தைச் சூறையாடிச் சென்றுள்ளனர். தீயிலிருந்து எழுந்த புகையை ஒன்பது மைல்களுக்கு அப்பால் இருந்தும் பார்க்க முடிந்தது என்று அப்பகுதி மக்கள் கூறினர். இப்பகுதியில் நிகழ்ந்துள்ள பல்வேறு தாக்குதல்களில், இதுவே மிகப்பெறும் வன்முறைகள் நிகழ்ந்த ஒரு பகுதியாகும். இப்பகுதியில் மட்டும் கடந்த டிசம்பர் 28, முதல் ஜனவரி 3, வரை மொத்தம் 50 நபர்கள் பல்வேறு வன்முறை செயல்களால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல் குறித்து ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பிற்குத் தெரிவித்த, கோன்டகோராவின் ஆயர் புலஸ் தௌவா யோஹான்னா அவர்கள், இந்த வன்முறையை “மனித உயிர் மற்றும்; மனித மாண்பின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொடூரமான உரிமை மீறல்" என்று கண்டித்துள்ளார்.

மேலும் நைஜிரிய மாநிலத்தின் வடக்குப் பகுதிகள் மற்றும் தெற்கு கெப்பி மாநிலத்தில் கொள்ளையர்கள் தண்டிக்கப்படாமல்  தொடர்ந்து பயங்கரவாதத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும், பாதுகாப்புப் படையினரால் கூட  தடுக்கமுடியாத அளவிற்கு, கொள்ளையர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள் என்றும் ஆயர் யோஹான்னா கூறியுள்ளார்.

கொள்ளையர்களை எதிர்கொள்ள உடனடியாக அரசு தலையிட்டு வலிமையான ஆயுதம் ஏந்திய ஒரு இராணுவப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும் என்று ஆயர் அழைப்பு விடுத்துள்ளார். இத்தகைய நடவடிக்கை எடுக்காவிட்டால், “தொடர்ச்சியான உயிரிழப்புகளும் பரவலான இடப்பெயர்வுகளும் ஏற்படும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்

ஜனவரி 1, வியாழக்கிழமையன்று, இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட சம்பவத்தில், இக்கொள்ளையர்கள் சோக்கோம்போராவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தை இலக்கு வைத்து, மதப் பொருட்களைச் சேதப்படுத்தி, கைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட விலைமதிப்பில்லா பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் கால்நடைகளையும் கொன்று, உள்ளுர் குடியிருப்புகளைக் கைப்பற்றி, அங்கு வசிப்பவர்களை வேறு இடங்களுக்கும் விரட்டியடித்துள்ளனர்.

தொடரும் தாக்குதல்கள் அப்பாவி பொதுமக்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்து வருவதால், இப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற அவசரத் தேவையை இந்த அண்மைய  வன்முறை நிகழ்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜனவரி 2026, 15:12