தேடுதல்

வழிபாட்டில் பங்கேற்கும் ஒடிசா கத்தோலிக்கர் (கோப்புப் படம்) வழிபாட்டில் பங்கேற்கும் ஒடிசா கத்தோலிக்கர் (கோப்புப் படம்) 

ஒடிசாவில் புதிய ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் உருவாகி வருகின்றனர்!

"ஒடிசாவில் நிகழ்ந்த துன்புறுத்தல்கள் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை, மாறாக, நீதி மற்றும் சமூக நலப்படுத்தல் இன்னும் முடிவுறாத நிலையிலும், அமைதி மற்றும் ஒப்புரவில் கவனம் செலுத்தும் புதிய பணியாளர்களை அது ஊக்கப்படுத்தியுள்ளது" : ஒடிசா தலத்திருஅவைத் தலைவர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் ஒடிசாவிலிருந்து புதிய அருள்பணியாளர்களும் ஆயர்களும் உருவாகி வருவதாகக் கூறியுள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.

அம்மாநிலம் நான்கு புதிய அருள்பணியாளர்களையும், ஒரு புதிய துணை ஆயரையும் வரவேற்றுள்ளதாகவும், இச்சூழல், கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறையால் பேரழிவிற்குள்ளான ஒரு மாநிலத்திலிருந்து நம்பிக்கை மற்றும் புதுப்பித்தலின் வலிமைவாய்ந்த அடையாளத்தை வழங்குவதாகவும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

“வன்முறையில் இருந்து தப்பிய நான்கு புதிதாகத் திருப்பொழிவு பெற்ற அருள்பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், வீடுகளை இழந்தனர் அல்லது குழந்தைகளாக காடுகளுக்குள் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றும், “அவர்களுடைய பணி மன்னிப்பு மற்றும் மன உறுதியைக் காட்டுகிறது” என்றும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி.

2007-2008-ஆம் ஆண்டில் நடந்த கொடூரமான தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் ஜனவரி 28,புதன்கிழமையன்று இந்தத் திருப்பொழிவு நிகழ்வுகள் இடம்பெற்றன.  

இந்தக் குருத்துவ அருள்பொழிவு விழாவை, கந்தமாலைச் சேர்ந்த துணை ஆயர்  இரவீந்திர இரணசிங் அவர்கள் தலைமையேற்று  நடத்தினார். மேலும் அவரது அண்மைய திருஅவை நியமனம் உள்ளூர் கிறிஸ்தவச் சமூகத்திற்கு அர்த்தத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

ஒடிசாவில் நிகழ்ந்த துன்புறுத்தல்கள் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை, மாறாக, நீதி மற்றும் சமூக நலப்படுத்தல் இன்னும் முடிவுறாத நிலையிலும், அமைதி மற்றும் ஒப்புரவில் கவனம் செலுத்தும் புதிய பணியாளர்களை அது ஊக்கப்படுத்தியுள்ளது என்று இதுகுறித்துத் தலத்திருஅவைத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 ஜனவரி 2026, 12:37