கிறிஸ்தவக் கல்லூரி கிறிஸ்தவக் கல்லூரி  

மியான்மாரில் மோதல்களுக்கு மத்தியிலும் கல்விப் பணி!

தொடர் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கல்வி வழியாக சமுதாயத்திற்குப் பணியாற்றும் தனது நோக்கத்தை இக்கல்லூரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அதேவேளையில், இன்னல்களுக்கு இடையிலும் தங்கள் கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைத்ததற்காக பட்டதாரி மாணவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

மியான்மாரில் உள்நாட்டுப் போர் தொடங்கி ஐந்தாவது ஆண்டை நெருங்கியுள்ள நிலையில், அந்நாட்டின் கல்வித் துறை மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. இந்தப் பாதிப்பால் 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஏறத்தாழ  50 லட்சம் மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க இயலவில்லை என்றும், இது அந்நாட்டின் கல்வி நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது என்றும் பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 10, சனிக்கிழமையன்று, புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி நடத்திய தனது ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில், 30 மாணவர்களுக்குப் பட்டங்களும் பட்டயங்களும் வழங்கப்பட்ட நிலையில், இந்தச் சாதனையை மீண்டெழும் திறனின் வெளிப்பாடு என்று குறிப்பிட்ட அக்கல்லூரியின் முதல்வர் ஜோசப் வின் ஹலைங் ஓ அவர்கள், போர்ச் சூழல், இடப்பெயர்வு மற்றும் பாதுகாப்பற்ற நிலை ஆகியவை மாணவர் சேர்க்கையை வெகுவாகக் குறைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், சாதாரணச் சூழல் நிலவியிருந்தால், இந்தப் பட்டமளிப்பு விழாவில்100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்திருப்பார்கள் என்றும் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

யங்கூன் மறைமாவட்டத்தின் துணை ஆயர் நோயல் சா நாவ் அய் (Noel Saw Naw Aye) அவர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இக்கல்லூரியின் கல்வித் திட்டங்களையும், மதங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும் தனது உரையில்எடுத்துக்காட்டினார்.

சாதாரண குடிமக்கள், நடைமுறை சார்ந்த துறைகளுடன் இணைந்து இறையியலையும் படிப்பதற்கு இக்கல்லூரி வழங்கும் அரிய வாய்ப்பை மியான்மாரின் கெங்டங் மறைமாவட்டத்தின் ஆயர் ஜான் சா யா ஹான் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

தொடர் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கல்வி வழியாக சமுதாயத்திற்குப் பணியாற்றும் தனது நோக்கத்தை இக்கல்லூரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அதேவேளையில், இன்னல்களுக்கு இடையிலும் தங்கள் கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைத்ததற்காக பட்டதாரி மாணவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜனவரி 2026, 14:26