மியான்மார் கிறிஸ்தவச் சமூகங்கள் அமைதியின் இல்லங்களாக மாற வேண்டும்!
செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்
தொடரும் மோதல் மற்றும் நிலையற்ற தன்மையின் மத்தியில் ரங்கூனில் இடம்பெற்ற அந்நாட்டிற்கான ஆயர் பேரவையில், நாட்டின் எதிர்காலத்திற்கு அமைதி மற்றும் கல்வி அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர் மியான்மார் கத்தோலிக்க ஆயர்கள்
புனிதக் கதவை மூடும் திருநிகழ்வு மற்றும் யூபிலி ஆண்டின் நிறைவைக் குறிக்கும் வகையில், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், தலைமையில் ரங்கூன் பேராலயத்தில் நிகழ்ந்த திருப்பலியுடன் மியான்மார் ஆயர் பேரவையின் கூட்டம் நிறைவடைந்தது.
பாதுகாப்பின்மை, இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் கடுமையான பயண நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், ஆயர்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவியர், திருத்தொண்டர்கள் மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான விசுவாசிகள் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.
நான்கு நாள்கள் இடம்பெற்ற ஆயர் பேரவையின் கூட்டத்தில், “ஆயுதங்களற்ற மற்றும் ஆயுதங்களைக் களையும் அமைதிக்கு அழைப்பு விடுத்திருந்த திருத்தந்தை லியோ அவர்களின் 59-வது உலக அமைதி நாள் செய்தியை மையமாகக் கொண்டு விவாதங்களும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டன.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் கிறிஸ்துமஸ் சிறப்புச் செய்தியில் மியான்மாரின் நல்லிணக்கத்திற்காகவும், இளைஞர்களுக்கான நம்பிக்கைக்காகவும், பாதுகாப்பற்ற சூழலில் வாழும் மக்களின் ஆதரவிற்காகவும் இறைவேண்டல் செய்தமைக்காக தங்களின் நன்றிகளையும் பாராட்டுகளையும் அவருக்குத் தெரிவித்துக்கொண்டனர் ஆயர்கள்.
உள்நாட்டுப் போர் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மியான்மாரில் கத்தோலிக்கத் திருஅவை அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு வலிமையாகத் தொடர்ந்து செயல்படவேண்டியதன் அவசியத்தையும் தேவையையும் ஆயர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
அண்மைய நிலநடுக்கத்தால் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருஅவை வழங்கிய உடனடி ஆதரவு குறித்தும் நினைவுகூர்ந்த ஆயர்கள், மதம் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கத்தோலிக்க நிறுவனங்கள் செய்த உதவிகள் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டனர்.
இவ்விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களின் விளைவாக கல்வி முக்கியமானதாக முன்னிலைப்படுத்தப்பட்டது. திருத்தந்தை லியோ அவர்களின் "நம்பிக்கைக்கான புதிய பாதைகளை உருவாக்குதல்" என்ற திருத்தூது மடலைக் குறிப்பிட்டு, ஆயர்கள் கல்விக்கும் நற்செய்தி அறிவிப்பதற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை வலியுறுத்தினர்.
பல்வேறு மோதல்களின் விளைவாக பல பகுதிகளில் கல்வித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்கள் படிப்பை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கிவரும் முறைசாரா கல்வி செயல்திட்டங்களைக் குறித்தும் பாராட்டிப் பேசினர்.
அமைதி என்பது அடைய முடியாத ஒரு இலட்சியம் அல்ல, மாறாக அது அனுதினமும் வாழ்ந்து காட்டப்பட வேண்டிய ஒரு பொறுப்பும் என்ற கருத்தினை முன்வைத்து இந்த நான்கு நாள் கூட்டத்தை நிறைவு செய்துள்ள மியான்மார் ஆயர்கள், உரையாடல், நீதி மற்றும் மன்னிப்பின் வழியாக சமூகங்கள் “அமைதியின் இல்லங்களாக" மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்