இறைவேண்டல் செய்யும் கிறிஸ்தவர்கள் இறைவேண்டல் செய்யும் கிறிஸ்தவர்கள்   (ANSA)

அமைதி மற்றும் ஒன்றிப்புக்காக அறைகூவல் விடுக்கும் கிறிஸ்தவச் சமூகங்கள்!

கோவில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் சமூகப் பதட்டங்களுக்கு மத்தியில், இணைந்து இறைவேண்டல் செய்வது ஒப்புரவிற்கான ஒரு வலிமையான சான்றாக அமையும் என்று இந்தக் கூட்டத்தின்போது தலத் திருஅவைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

இந்தியாவில் உள்ள பல்வேறு கிறிஸ்தவச் சபையினர் ஜனவரி 18 முதல் 25 வரை இடம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் வாரத்திற்கான தயாரிப்பு நிகழ்வொன்றை மிகச் சிறப்பாகக் கடைப்பிடித்தனர். சமூகத்தில் நிலவும் பதட்டமான சூழல்களுக்கு மத்தியில், அமைதி, ஒன்றிப்பு மற்றும் ஒருவருக்கொருவர்மீதான ஒத்துழைப்பை வலியுறுத்தும் வகையில் இந்தத் திருச்சபைகளுக்கு இடையிலான கூட்டங்கள் அமைந்தன.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மறைமாவட்டத்தில், ஜனவரி 20, செவ்வாய்க்கிழமையன்று  இடம்பெற்ற முக்கிய கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான ஒரு கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்களும், பிற கிறிஸ்தவச் சபையினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

சிறப்பாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ரீகாகுளம் மறைமாவட்டத்தின் ஆயர் விஜய குமார் ராயராலா அவர்கள், இந்தியாவின் தற்போதைய சமூக மற்றும் மதச் சூழலில், கிறிஸ்தவ ஒன்றிப்பின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ  2.3 விழுக்காடு மட்டுமே உள்ள கிறிஸ்தவர்கள், பெரும்பாலும் வன்முறை, தவறான புரிதல்கள் மற்றும் தங்களுக்குள்ளான உட்பிரிவுப் பூசல்களை எதிர்கொள்கின்றனர் என்று கூட்டத்தில் உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டினர்.

பல்வேறு கிறிஸ்தவப் பிரிவினரிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதை மையமாகக் கொண்ட உரையாளர்களின் சிந்தனைகள், மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் அமைதியான சகவாழ்வை வலியுறுத்தும் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் 'நோஸ்த்ரா ஏத்தாத்தே' (Nostra Aetate)  அதாவது, "நமது காலத்தில்" என்றும் பொருள்படும் ஆவணத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன.

இந்தியக் கிறிஸ்தவம் வளமையான பன்முகத்தன்மை மற்றும் உண்மையான பிரிவினைகள் ஆகிய இரண்டையும் கொண்டிருப்பதாக விவரித்த இறைவார்த்தை சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் ஜான் சிங்கராயர் அவர்கள், "ஒன்றிப்பிற்கு மன்னிப்பும், நம்பிக்கையிலான ஒரு கூட்டுப் பயணமும் அவசியம்" என்று வலியுறுத்தினார்.

பல உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட்ட வழிபாட்டுச் சடங்குகள், கிறிஸ்தவர்களின் பொதுவான திருமுழுக்கையும் அவர்களது அறப்பணிகளையும் வெளிப்படுத்தின. முக்கியமாகக் கல்வி, மருத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பணிகளில்  அவர்கள் இணைந்து பணியாற்றுவதை இவை மீண்டும் உறுதிப்படுத்தின.

கோவில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் சமூகப் பதட்டங்களுக்கு மத்தியில், இணைந்து இறைவேண்டல் செய்வது  ஒப்புரவிற்கான ஒரு வலிமையான சான்றாக அமையும் என்று தலத் திருஅவைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஜனவரி 2026, 13:32