இந்தியப் பொதுநிலையினரின் பாதுகாவலர் புனித தேவ சகாயம் பிள்ளை!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
இந்தியாவின் பொதுநிலையினருக்கான முதல் பாதுகாவலராக புனித லாசரஸ் தேவ சகாயம் அறிவிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், ஜனவரி 14, புதன்கிழமையன்று, ஆரல்வாய்மொழியின் காற்றாடிமலையிலுள்ள தேவ சகாயம் திருத்தலத்தில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வில் 10,000-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் ஒன்று கூடினர்.
இந்த விழாவின் நன்றித் திருப்பலியை இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருப்பீடத் தூதர் பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார். அவருடன் 16 ஆயர்கள், 200 அருள்பணியாளர்கள் மற்றும் ஏராளமான இருபால் துறவியரும், பொதுநிலை விசுவாசிகளும் பங்கேற்றனர்.
"புனிதத்துவம் என்பது அன்றாட குடும்ப வாழ்க்கையிலும் பொதுவாழ்விலும் வாழப்பட வேண்டிய ஒன்று என்பதை புனித தேவ சகாயத்தின் வாழ்க்கை நிரூபிக்கிறது" என்று பேராயர் ஜிரெல்லி அவர்கள் குறிப்பிட்டார்.
"இந்தப் புனிதரின் துணிவும், ஆழமான விசுவாசமும், இன்றைய சவால்களுக்கு மத்தியில் கத்தோலிக்க பொதுநிலையினர் தங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தவும், சமூகத்திற்குப் பணியாற்றவும் ஊக்கமளிக்கின்றன" என்று கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆயர் நசரேன் சூசை அவர்கள் கூறினார்.
18-ஆம் நூற்றாண்டின் மறைச்சாட்சியான புனித தேவ சகாயத்தை, இந்தியாவின் பொதுநிலையினருக்கான பாதுகாவலராகத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், 2025-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதியன்று அறிவித்தார்.
1712-ஆம் ஆண்டு ஓர் இந்துவாகப் பிறந்த தேவ சகாயம், மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் அரசவையில் பணியாற்றி வந்தபோது, 1745-ஆம் ஆண்டு கத்தோலிக்க மதத்திற்கு மாறினார். தமது விசுவாசத்தைக் கைவிட மறுத்ததால் அவர் சிறைவாசம், துன்புறுத்தல்கள் மற்றும் நாடுகடத்தப்படுதல் போன்றவற்றை அனுபவித்தார். இறுதியில், 1752-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாளன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்