தேடுதல்

அனைத்திந்தியக் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்கள் அனைத்திந்தியக் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்கள்  

இந்தியாவில் வெறுப்பு மற்றும் பாகுபாட்டிற்கு எதிராக நடவடிக்கைத் தேவை!

சிறுபான்மையினரைப் பாதிக்கும் தேர்தல் முறைகேடுகள், வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான கவலைகள், கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளில் தலையீடு, மற்றும் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் உள்ள கட்டுப்பாடுகள் (FCRA) குறித்தும் எச்சரித்துள்ளது அனைத்திந்தியக் கத்தோலிக்கச் சங்கம்.

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

ஜனவரி 10, சனிக்கிழமையன்று, கிறிஸ்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் எதிராக நிலவும் வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்ளவும், அனைத்துக் குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்கவும் 2026-ஆம் ஆண்டில், புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அனைத்திந்தியக் கத்தோலிக்கச் சங்கம் (AICU) வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க ஒன்றிப்பு, கல்வி மற்றும் அரசியலமைப்புக்கான மாண்பு ஆகியவை இன்றியமையாதவை என்று அனைத்திந்தியக் கத்தோலிக்கச் சங்க தலைவர் எலியாஸ் வாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள கிறிஸ்தவச் சமூகங்கள், குறிப்பாக, 2025-ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் காலத்தில், அதிகரித்த அச்சுறுத்தல்களையும் வன்முறையையும் கடுமையாக எதிர்கொண்டன என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

புத்தாண்டு அறிக்கையில், அரசியலமைப்பின் 25–28 பிரிவுகளின் கீழ் உள்ள மதச் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக, நாடு தழுவிய கிறிஸ்தவத் தளத்தை உருவாக்க அனைத்திந்திய கத்தோலிக்கச் சங்கம் முன்மொழிந்துள்ளது.

மேலும், சிறுபான்மையினரைப் பாதிக்கும் தேர்தல் முறைகேடுகள், வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான கவலைகள், கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளில் தலையீடு, மற்றும் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் உள்ள கட்டுப்பாடுகள் (FCRA) குறித்தும் அது எச்சரித்துள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ  2.3 விழுக்காடு மட்டுமே உள்ள கிறிஸ்தவர்கள் சம உரிமைகளை மட்டுமே கோருவதாகக் கூறிய  செய்தித் தொடர்பாளர் ஜான் தாயல் அவர்கள், இந்தியாவின் பன்மைத்துவ அமைப்பைப் பாதுகாக்க, சிறிய செயல்களுக்கும் உறுதியான அரசியல் நடவடிக்கைகள் துணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜனவரி 2026, 12:10