தேடுதல்

காங்கோவில் நல்மேய்ப்பர் அருள்சகோதரி காங்கோவில் நல்மேய்ப்பர் அருள்சகோதரி   ((c) Missio Österreich)

பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் நல்மேய்ப்பர் சபை சகோதரிகள்!

மால்ட்டா மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய இரு நாடுகளிலும், நல்மேய்ப்பர் சபை சகோதரிகள், எங்கு அன்பு அதிகம் தேவைப்படுகிறதோ, அங்கே இருக்க வேண்டும் என்ற தங்களது வாழ்நாள் இலட்சியத்தை வாழ்ந்து காட்டி வருகின்றனர்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

நல்மேய்ப்பரின் அன்னை மரியா பிறரன்பு சபை பெண் துறவிகள் மால்ட்டா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் குடும்ப வன்முறை மற்றும் சமூகப் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் புதிய நம்பிக்கையை வழங்கி வருகின்றனர்.

தங்கள் நிறுவனர் புனித மேரி யூப்ரேசியா பெல்லிடியரின் ஆன்மிகப் பாதையில் பயணிக்கும் நல் மேய்ப்பர் சபை சகோதரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடம், உளவியல் ஆதரவு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கி வருவதன் வழியாக, பாதிக்கப்பட்டவர்களின் மாண்பை மீட்டெடுப்பதில் தங்களின் நீண்டகாலப் பணியைத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.

மால்ட்டாவில், நல்மேய்ப்பர் சபையின் இயக்குநராக, அருள்சகோதரி டோரிஸ் சாலிபா 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு, உணவு, ஓய்வு, மனநல ஆலோசனை, சட்ட உதவி மற்றும் வேலைவாய்ப்பு அல்லது வீட்டு வசதிக்கான ஆதரவு ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

இந்த இல்லம் சமூக நலப்பணிகள் மற்றும் காவல்துறையுடன் இணைந்து செயல்படும் அதேவேளையில், இவ்வில்லம்  பொதுமக்களின் நன்கொடைகளையே பெரிதும் நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ச்சுக்கலில், அருள்சகோதரி மரியா ரொசாரியோ அவர்கள், புறக்கணிப்பு மற்றும் வறுமையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் அன்னையர்களைப் பராமரித்து வருகிறார். அவர்கள் வயது வந்தவர்களாக மாறும் வரை, அவர்களுக்கு நிலையானதொரு குடும்பச் சூழலையும், கல்வியையும், உணர்வுப்பூர்வமான ஆதரவையும் வழங்கி வருகிறார்.

மால்ட்டா மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய இரு நாடுகளிலும், நல்மேய்ப்பர் சபை சகோதரிகள், எங்கு அன்பு அதிகம் தேவைப்படுகிறதோ, அங்கே இருக்க வேண்டும் என்ற தங்களது வாழ்நாள் இலட்சியத்தை வாழ்ந்து காட்டி வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஜனவரி 2026, 12:07