அனைத்துலகளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
ஓபன் டோர்ஸ் (Open Doors) எனப்படும் அனைத்துலக கிறிஸ்தவத் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான உலகக் கண்காணிப்புப் பட்டியலில், உலகம் முழுவதும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 38 கோடியே 80 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், இது கடந்த ஆண்டை விட 80 இலட்சம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை கடுமையாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அந்நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ்டியன் நானி அவர்கள், "இதில் பெண்களும் குழந்தைகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றும், "அவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் நபர்களில் 20 கோடியே 10 இலட்சம் பேர் பெண்கள் அல்லது சிறுமிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்தப் பாதிக்கப்பட்டவர்களில் 11 கோடி பேர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள்" என்றும், "கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான துன்புறுத்தல்கள் நிலவும் நாடுகளின் எண்ணிக்கை 13 -லிருந்து 15-ஆக அதிகரித்துள்ளது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
"கிறிஸ்தவர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக வடகொரியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது" என்றும் "அதனைத் தொடர்ந்து சோமாலியா, எரித்திரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, பாகிஸ்தான், ஈரான், இந்தியா, சவுதி அரேபியா, மியான்மார் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகள் அதிக ஆபத்துக்களை எதிகொள்ளும் நாடுகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன" என்றும் இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
"சிரியாவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களால் அங்குள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 3 இலட்சமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு சிரியா நாடு அதிகப் பாதிப்பு என்ற நிலையிலிருந்து மிகக் கடுமையானத் துன்புறுத்தல் நிலவும் நாடுகளின் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்துள்ளது அதன் அறிக்கை.
"கடந்த ஆண்டில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 4,476-லிருந்து 4,849-ஆக உயர்ந்துள்ளது" என்றும் "உலகளவில் நடைபெறும் இத்தகைய கொலைகளில் ஏறத்தாழ 70 விழுக்காட்டை கொண்டுள்ள நைஜீரியா, இன்றும் வன்முறையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறது" என்றும் எடுத்துரைக்கின்றது இவ்வறிக்கை.
"கைதுகள் மற்றும் கடத்தல்கள் போன்ற சம்பவங்கள் நிலையாக இருந்தபோதோ அல்லது குறைந்திருந்தபோதோ, உடல்ரீதியான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் வல்லுறவு மற்றும் கட்டாயத் திருமணங்கள் போன்ற சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன" என்றும் குறிப்பிட்டுள்ளது இவ்வறிக்கை.
உரோமையில் உள்ள இத்தாலிய மேலவையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, நைஜீரியாவிலிருந்து வந்தவர்களின் நேரடி சாட்சியங்களும் முன்வைக்கப்பட்டன. அத்துடன் அந்நாட்டில் தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஓபன் டோர்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்