எருசலேமுக்கு மீண்டும் திருப்பயணங்களைத் தொடங்குங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனித பூமியின் பாதுகாவலரான, பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் பிரான்செஸ்கோ இல்போ அவர்கள், தலத்திருஅவையின் கிறிஸ்தவச் சமூகத்தை ஆதரிப்பதிலும், சிரமமான காலங்களில் நம்பிக்கையை வழங்குவதிலும் அவர்களின் முக்கிய பங்கை வலியுறுத்தி, எருசலேமுக்கு திருப்பயணங்களை மீண்டும் தொடங்குமாறு விசுவாசிகளை வலியுறுத்தியுள்ளார்.
ஜனவரி 7, புதன்கிழமையன்று, திருப்பயணிகளிடம் பேசிய அருள்பணியாளர் இல்போ அவர்கள், புனித பூமிக்கு வருகை தருவது என்பது, பொருளாதார உதவியை வழங்குவது மட்டுமல்லாமல், வாழும் திருஅவையை வலுப்படுத்துகிறது என்பதை எடுத்துரைத்தார்.
தலத்திருஅவை கிறிஸ்தவர்களின் அதிகரித்து வரும் குடியேற்றத்தைக் குறிப்பிட்ட அருள்பணியாளர் இல்போ அவர்கள், திருப்பயணங்கள் நம்பிக்கையை அளிக்கின்றன மற்றும் இப்பகுதியின் சமூகங்களை நிலைநிறுத்த உதவுகின்றன என்பதை எடுத்துக்காட்டினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட சவால்கள் தொடரும்போதிலும், இங்கு நிலைமை சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்றும், பெத்லகேமின் உணவகங்கள் முழுவதும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார் அருள்பணியாளர் இல்போ.
மேலும் திருப்பயணங்களின் போது, யூத எதிர்ப்புக்கு எதிராகப் போராடுவதன் முக்கியத்துவத்தையும், மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார் அருள்பணியாளர் இல்போ.
காப்பாளர் அல்லது பாதுகாவலரின் (Custos) பணி
புனித பூமியில் உள்ள பிரான்சிஸ்கன் துறவற சபையின் அனைத்து செயல்பாடுகளையும் மேற்பார்வையிடுவது, புனித இடங்களைப் பாதுகாப்பது, கிறிஸ்தவத் திருப்பயணிகளுக்கு உதவுவது மற்றும் தலத்திருஅவை கிறிஸ்தவ சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவது போன்ற பொறுப்புகளை காப்பாளர் அல்லது பாதுகாவலர் (Custos) கொண்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்