இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறையால் பாதிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது புது தில்லி தேவாலயம் ஒன்றிற்குச் சென்றது கிறிஸ்தவத் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் அதிகரித்து வரும் கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறை மத்தியில், அவரது இத்தகைய அடையாளம் மட்டுமே போதாது என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில், மோடி அமைதியாக இருப்பதற்குப் பதிலாக, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இந்திய ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திருவாளர் ஏ.சி. மைக்கேல்.
கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நாள்களின் போது, கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடும் பாடகர்கள், கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள், மற்றும் உத்தரபிரதேசத்தில் ஒரு கத்தோலிக்க மையம் கூட தாக்கப்பட்டுள்ளன என்றும், இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பெரும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், திருச்சூர் உயர்மறைமாவட்டப் பேராயருமான ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் இந்த வெறுப்பு செயல்களைக் கண்டித்துள்ள அதேவேளை, மோடியும் மாநிலங்களின் தலைவர்களும் இவற்றுக்கு எதிராகப் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறுவிதமான தாக்குதல்கள் நடந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்து அடிப்படைவாதிகளின் அழுத்தம் காரணமாக கேரளாவில் உள்ள பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இரத்து செய்துள்ளன.
ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பு, கடந்த 2024-ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 834 வன்முறை சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதுடன், இது 2023-ஆம் ஆண்டில், 733 ஆக இருந்ததை விட அதிகமாகும் என்றும், இது போன்ற தாக்குதல்கள் சமூக நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்