புனித பூமியில் உலக அமைதிக்காக அறைகூவல் விடுக்கும் கத்தோலிக்கர்கள்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
யோர்தான் நதிக்கரையில் அமைந்துள்ள இயேசுவின் திருமுழுக்குக் கோவிலில் 5,000-க்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் ஒன்று கூடி இயேசுவின் திருமுழுக்கு பெருவிழாவைக் கொண்டாடினர்.
இந்த விழாவில் 10 நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் மற்றும் பல்வேறு கத்தோலிக்கச் சமூகங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவை யோர்தானுக்கான இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை ஆயர் இயாத் த்வால் (Iyad Twal) அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இவருடன் யோர்தானுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் ஜொவானி பியத்ரோ தால் தோசோ அவர்களும் இணைந்து வழிபாட்டில் பங்கேற்றார். இந்த வழிபாட்டின் போது யோர்தான் நதியிலிருந்து எடுக்கப்பட்ட புனித நீர் திருப்பயணிகள்மீது தெளிக்கப்பட்டது.
மேலும், ஆயர் த்வால் அவர்கள், புனித பூமிக்காகவும், குறிப்பாக, காசாவிற்காகவும் திருப்பலியின் போது இறைவேண்டல் செய்ததுடன், போர் மற்றும் வன்முறைகள் நீங்கி, ஒரு நிலையான, நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும், மக்கள் தங்களிடம் உள்ள அச்சத்தை அகற்றி புனித பூமிக்கு வருகை தந்து, இங்குள்ள புனித தலங்களைத் தரிசிக்குமாறு உலகெங்கிலுமுள்ள திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார் ஆயர் த்வால்.
இந்த நிகழ்வை யோர்தானின் திருமுழுக்குத் பங்குத்தள நிர்வாகம், சுற்றுலா அமைச்சகம், சுற்றுலா வாரியம் மூன்றும் ஒருங்கிணைத்து வழிநடத்தியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்