யூபிலி ஆண்டு அமைதிக்கான நம்பிக்கையைப் புதுப்பித்துள்ளது!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்கள் அங்குள்ள மக்களிடையே எதிர்நோக்கைப் புதுப்பித்துள்ளதுடன், அமைதிக்கான அர்ப்பணிப்பையும் வலுப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.
ஜனவரி 8, வியாழனன்று பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமூகத் தொடர்புக்கான தேசிய ஆணையத்தின் செயலர் அருள்தந்தை கைசர் பெரோஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.
கிறிஸ்துவே நேற்றும், இன்றும், என்றும் நமது எதிர்நோக்காக இருக்கிறார் என்பதை இந்த யூபிலி ஆண்டு கத்தோலிக்கர்களுக்கு நினைவூட்டியுள்ளது என்று கூறியுள்ள அருள்தந்தை பெரோஸ் அவர்கள், இது பாகிஸ்தானிலும், அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனும் அமைதியை நிலைநாட்டத் தொடர்ந்து இறைவேண்டல் செய்யவும், முயற்சிகளை முன்னெடுக்கவும் தூண்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அன்றாட வாழ்க்கையில் காணப்படும் நம்பிக்கையின் அடையாளங்களைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை பெரோஸ் அவர்கள், குறிப்பாக, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின்போது நிலவிய மதங்களுக்கிடையேயான ஒன்றிப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்த இளைஞர்களின் தன்னார்வத் தொண்டு மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் நற்செய்தியைப் பறைசாற்றியது குறித்தும் எடுத்துக்காட்டினார்.
மேலும் பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்களின் கூற்றை மேற்கோள்காட்டிப் பேசிய அருள்தந்தை பெரோஸ் அவர்கள், கத்தோலிக்கர்கள் இப்போது இரக்கத்தின் சாட்சிகளாகவும் மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாகவும் இருக்க அழைக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.
வறுமை மற்றும் துன்பங்களுக்கு மத்தியிலும், கத்தோலிக்கக் குடும்பங்கள் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வதையும் , தேவையில் இருப்போருக்கு உதவுவதையும், தங்கள் குழந்தைகளை அமைதி வழியில் வளர்ப்பதையும், இயற்கையைப் பாதுகாப்பதையும் தொடர்கின்றனர் என்றும், இவை அனைத்தும் பாகிஸ்தானில் 'கிறிஸ்துவின் ஒளி ஒளிர்கின்றது' என்பதற்கான தெளிவான அடையாளங்கள் என்றும் சுட்டிக்காட்டினார் அருள்தந்தை பெரோஸ்.
அனைத்து மறைமாவட்டங்களிலும் கொண்டாடப்பட்ட இந்த யூபிலி ஆண்டு, நற்செய்தி அறிவிப்பிலும் மேய்ப்புப் பணிகளிலும் எதிர்நோக்கை மையமாக வைத்தது என்றும், இது மோதல்கள், இன ரீதியான பதற்றங்கள், வேலையின்மை மற்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் மக்களின் விசுவாசத்தைப் புதுப்பித்தது என்றும் உரைத்தார் அருள்தந்தை பெரோஸ்.
நன்றி வழிபாடு மற்றும் எதிர்காலத்திற்கான இறைவேண்டுதல்களோடு இந்த யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழாவன்று இனிதே நிறைவடைந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்