மறையுரை வழங்கும் கர்தினால் தாக்லே மறையுரை வழங்கும் கர்தினால் தாக்லே 

ஆயர் பணி என்பது மேய்ப்புப் பணியாற்றுவதற்கான ஓர் அழைப்பு!

ஜனவரி 17, சனிக்கிழமையன்று, பிலிப்பீன்சின் சான் ஜோஸ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற ஆயர் சாமுவேல் நசீனோ அகாரகர் அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டு திருப்பலியில் வழங்கிய மறையுரையில் ஓர் ஆயருக்கு இருக்கவேண்டிய கடமைகளையும் பொறுப்புணர்வுகளையும் எடுத்துக்காட்டினார் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

"திருத்தூதர் வழிவருகை என்பது அடிப்படையில் ஒரு பணிப் பொறுப்பின் தொடர்ச்சியே அன்றி, அது கௌரவம் அல்லது தகுதிநிலையைச் சார்ந்தது அல்ல" என்று கூறினார் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே

ஜனவரி 17, சனிக்கிழமையன்று, பிலிப்பீன்சின் சான் ஜோஸ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற ஆயர் சாமுவேல் நசீனோ அகாரகர் அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டு திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார் கர்தினால் தாக்லே.

"இயேசு கிறிஸ்து தனது திருத்தூதர்களிடம் ஒப்படைத்த அதே பணி எந்த மாற்றமும் இன்றி இன்றுள்ள ஆயர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது, அதாவது மீட்புச் செய்தியை அறிவிப்பதும், மக்களை உண்மையான சீடர்களாக மாற்றுவதும் அவர்களின் கடமையாகும்" என்றும் கூறினார்.

மேலும், "ஆயரின் பணி என்பது ஒரு வெகுமதியோ அல்லது பதவி உயர்வோ அல்ல, மாறாக அது மேய்ப்புப் பணியாற்றுவதற்கும், நற்செய்திப் பணிக்காக அனுப்பப்படுவதற்குமான ஓர் அழைப்பு" என்றும் சுட்டிக்காட்டினார் கர்தினால் தாக்லே.

மத்தேயு நற்செய்தியை மையமாக வைத்து உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், "ஆயர்கள் கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதற்கும், நற்செய்திப் பணிக்காக அனுப்பப்படுவதற்கும் இடையே உள்ள அந்தப் புனிதமான பிணைப்பில் வாழ அழைக்கப்படுகிறார்கள்" என்றும் எடுத்துரைத்தார்.

இறுதியாக, "ஆயரின் அதிகாரமானது கிறிஸ்துவின் அதிகாரத்திற்கு மாற்றானது அல்ல, மாறாக மனித பலவீனங்களுக்கு மத்தியிலும் அந்த அதிகாரத்தில் பங்கேற்பதுதான்" என்று குறிப்பிட்ட கர்தினால் தாக்லே  அவர்கள், "ஒவ்வொரு ஆயரும் அனைத்துலகத் திருஅவையோடு இணைந்து நின்று, தங்களது தலத் திருஅவைகளுக்குப் பணியாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது" என்று நினைவூட்டி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜனவரி 2026, 12:52