மோதல்களுக்கு மத்தியில் மியான்மாரில் அமைதி திரும்பட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மியான்மாரில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு மத்தியில் அமைதி மற்றும் ஆயுதக் குறைப்புக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ரங்கூன் பேராயரும் மியான்மார் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCM) தலைவருமான கர்தினால் சார்லஸ் மவுங் போ.
ஆண்டிற்குக்கொரு முறை வழங்கும் கிறிஸ்து பிறப்பு செய்தியொன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் போ அவர்கள், அங்கு நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் மீண்டும் அமைதி திரும்பட்டும் என்றும் உரைத்துள்ளார்.
"போர், பயங்கரவாதம் மற்றும் சமத்துவமின்மையால் நம்பிக்கை தளர்வுற்றாலும், அமைதி மனிதகுலத்தின் மறுக்க முடியாத தேவையாகவே உள்ளது" என்றும், குறிப்பாக, கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இத்தருணத்தில் அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார் அவர்.
மேலும் "உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அமைதி, ஆயுதங்கள் இல்லாத அமைதி" என்பதை நினைவுபடுத்தியுள்ள அவர், உலக மோதல்களுக்கு வன்முறையற்ற தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அனைத்து மக்களையும் ஊக்குவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டில் 2,71,800 கோடி அமெரிக்க டாலர்களை எட்டிய இராணுவச் செலவினங்களின் உலகளாவிய உயர்வைக் குறித்து கவலை தெரிவித்த கர்தினால் போ அவர்கள், நாடுகளின் வளர்ந்து வரும் அச்சம் வன்முறை சுழற்சியை நிலைநிறுத்தும் ஆயுதக் குவிப்புக்கு பங்களிக்கிறது என்றும், "ஆயுதங்களை குவிப்பதற்குப் பதிலாக, நாடுகள் ஒன்றுக்கொன்றுமீதான மரியாதை மற்றும் ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றும் விண்ணப்பித்துள்ளார்.
மேலும் அமைதியைக் கட்டியெழுப்புவதில் மதத்தின் அத்தியாவசிய பங்கை எடுத்துக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், இறைவேண்டல், மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் நீதிக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அமைதி என்பது இதயத்திற்குள் தொடங்க வேண்டும் என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டியுள்ள அவர், "வெறுப்பும் வன்முறையும் மனித பலவீனத்திலிருந்து எழுகின்றன, ஆனால் மன்னிப்பும் இரக்கமும் மனிதகுலத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பாலங்களாக அமைந்துள்ளன" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மியான்மாரில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் உலகளவில் நீடித்த அமைதிக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அழைப்பை எடுத்துக்காட்டியுள்ள கர்தினால், 2026 ஆம் ஆண்டுக்கான திருத்தந்தையின் முதல் உலக அமைதி நாள் செய்தி, அதிகரித்து வரும் வன்முறையால் அச்சுறுத்தப்படும் உலகில் "ஆயுதங்களற்ற மற்றும் ஆயுதங்களைக் களைந்த" அமைதிக்கான அவசியத்தை மையமாகக் கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மார் மற்றும் பிற பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், நீடித்த அமைதிக்காக உரையாடல், ஒருவருக்கொருவர்மீதான மரியாதை மற்றும் ஆயுதக் குறைப்பின் அவசரத் தேவையை கர்தினால் போ அவர்களின் கிறிஸ்து பிறப்புக் கால செய்தி தெளிவாக நினைவூட்டுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்