இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்  

திருக்குடும்ப பெருவிழா : குடும்பங்களின் மாண்பைப் பேணுவோம்!

கணவன்-மனைவிக்கிடையே இருக்க வேண்டிய உறவுகளையும் பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே இருக்க வேண்டிய பொறுப்புணர்வுகளையும் திருக்குடும்பத்திடம் கற்றுக்கொள்வோம்
திருக்குடும்ப பெருவிழா : குடும்பங்களின் மாண்பைப் பேணுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

வாசகங்கள்    I.   சீரா 3: 2-7, 12-14a   II.   கொலோ 3: 12-21    III.   மத் 2: 13-15, 19-23)

நம் அன்னையாம் திருஅவை இந்நாளில் திருக்குடும்ப பெருவிழாவைச் சிறப்பிக்கின்றது. முதலில், இத்திருவிழாவின் வரலாற்றுப் பின்புலத்தை அறிந்துகொண்டு நமது மறையுரை சிந்தனைகளை ஆழப்படுத்துவோம் பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள், தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக, துறவறச் சபைகளால் வளர்க்கப்பட்டு வந்தது. 1893-ஆம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்களால், இத்திருவிழா, திருஅவையின் வழிபாட்டு காலத்தில் இடம்பெற்றது. ஒரு சில ஆண்டுகளில், இத்திருவிழா, திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்டது. 1921ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், இத்திருவிழா மீண்டும் திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ம் ஆண்டு முடிவுக்கு வந்த உலகப்போரினால், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள், ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கின. அக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில், திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக் கட்டியெழுப்ப, திருஅவை முயன்றது. 1962-ஆம் ஆண்டு துவங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது, திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களை, திருஅவை, மீண்டும் புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், 60களில் நிலவிய உலகின் நிலை. முதலாம், மற்றும், இரண்டாம் உலகப் போர்களால், கட்டடங்கள் பல சிதைந்தது உண்மை. ஆனால், அதைவிட, அதிகமாகச் சிதைந்திருந்தன, குடும்பங்கள். வேறு பல வடிவங்களில், குடும்பங்கள், தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று, பல வழிகளில், உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலை குலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், வீட்டுக்கு வெளியே நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த நிம்மதியை, அன்பை வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச் சொன்னது, திருஅவை. அனைத்து குடும்பங்களுக்கும் எடுத்துக்காட்டாக, திருக்குடும்பத்தை முன்னிறுத்திய திருஅவை, கிறிஸ்மஸ் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாக, 1969ம் ஆண்டு அறிவித்தது. இதன் அடிப்படையில், இன்று நாம் இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம்.

கணவனும் மனைவியும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். ஏனென்றால், அன்று அவர்களின் 25 ஆவது ஆண்டு திருமண நாள். முன்பு போல் இல்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து, நேரத்தை செலவிடுவது குறைந்து போய் விட்டது. அவர்களுக்கு இடையே ஏன் இந்த இடைவெளி அதிகரித்து வருகிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது மனைவி மௌனத்தை கலைத்து, "உங்களிடம் நான் நிறைய சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நாம் இருவரும் சேர்ந்து உட்காரக்கூட நேரம் இல்லை" என்றாள். மேலும் "இதைப் பற்றி நான் நிறைய யோசித்து இந்தச் சூழ்நிலையை சமாளிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளேன். நீங்கள் ஒப்புக் கொண்டால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றாள். கணவர் “சரி” என்று தலையை அசைத்தார். மனைவி மேசையின் மீது இரண்டு நாள்குறிப்பேட்டைக் (diary) கொண்டு வந்து வைத்துவிட்டு, "இந்த இரண்டு நாள்குறிப்பேடுகளில் ஒன்று உங்களுக்கு, மற்றொன்று எனக்கு. இனிமேல் நம் இருவருக்குள் ஏதேனும் புகார்கள் இருந்தால் அவற்றை நாம் இந்த நாள் குறிப்புபேடுகளில் எழுதி வைப்போம்" என்றாள். மேலும், "அடுத்த ஆண்டு நமது திருமண நாள்னறு நாம் அவற்றைத் திறந்து படிப்போம். ஒருவருக்கொருவர் பிடிக்காத விடயங்களைப் புரிந்து கொள்ள இது உதவும். மேலும் அவற்றை மேம்படுத்தவோ அல்லது தீர்வு காணவோ நாம் முயற்சிக்கலாம்" என்றாள்.

கணவருக்கு மனைவியின் யோசனை பிடித்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் நாள்குறிப்பேடுகளில் எழுதத் தொடங்கினர். நாள்கள் விரைந்தோடின. அடுத்த ஆண்டு அவர்களின் 26-வது திருமண நாள் வந்தது. கணவன் மனைவி இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் நாள்குறிப்பேடுகளை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டனர். தேநீர் அருந்தி முடிப்பதற்கு முன் கணவர் தனது மனைவியின் நாள்குறிப்பேட்டைப் படிக்கத் தொடங்கினார். அதில் பல புகார்கள் எழுதப்பட்டிருந்தன. "என்னை ஓர் உணவகத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தீர்கள். ஆனால். அதை நிறைவேற்றவில்லை. இன்று என் பெற்றோரின் வீட்டிலிருந்து விருந்தினர்கள் வந்தார்கள். நீங்கள் அவர்களிடம் நன்றாகப் பேசவில்லை. பல மாதங்களுக்குப் பிறகு, நீங்கள் எனக்கு ஒரு புடவையை வாங்கி வந்தீர்கள். ஆனால் அது பழைய வடிவமைப்பைக் (style) கொண்டிருந்தது. இன்று நான் எனக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நீங்கள் செய்தி சேனலை மாற்றினீர்கள். இன்றைக்கு நமது இருக்கையில் ஈரமான துண்டை விட்டுவிட்டுப் போய்விட்டீர்கள்" என்று கணவரின் பல குறைபாடுகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. கணவர் அவற்றை படித்தபோது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. அவர் மனம் திருந்தி தனது மனைவியிடம், " என்னை மன்னித்துவிடும்மா.... இந்தத் தவறுகளை நான் முன்பு உணரவில்லை. ஆனால், இப்போது நான் அவற்றை உணர்கிறேன். இனிமேல் அவற்றை நான் மீண்டும் செய்ய மாட்டேன் என்று உனக்கு உறுதியளிக்கிறேன்" என்றார்.

இப்போது மனைவி தன் கணவரின் நாள்குறிப்பேட்டைத் திறக்கும் முறை வந்தது. பல பக்கங்களைப் புரட்டினாள் மனைவி. ஆனால், அதில் எதுவும் எழுதப்படாமல் முற்றிலும் காலியாக இருந்தது. உடனே வியப்படைந்த மனைவி, "நீங்கள் எதுவும் எழுதவில்லையா?" என்று கேட்டாள். அதற்குக் கணவர், "கடைசி பக்கத்தை பார். நான் அங்கே ஏதோ எழுதினேன்" என்று பதிலளித்தார். உடனே கடைசிப் பக்கத்தைப் பார்த்தாள் மனைவி. அதில் இவ்வாறு எழுதியிருந்தது. "இத்தனை ஆண்டுகளாக நீ எனக்காகவும், நமது குடும்பத்திற்காகவும் நிறைய தியாகம் செய்துள்ளாய். எங்களுக்கு மிகுந்த அன்பைக் கொடுத்து இருக்கிறாய். இந்த நாள்குறிப்பேட்டில் உனக்கு எதிராக எதையும் எழுத முடியாது. மேலும் உன்னிடம் குறை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு எப்போதும் இருந்ததில்லை. உன்னிடம் எவ்வித குறைகளும் இல்லை என்பதல்ல.. ஆனால் உன் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுடன் ஒப்பிடும்போது உன் குறைகள் எங்களுக்கு ஒன்றுமில்லை. என்னுடைய எண்ணற்ற தவறுகளைப் பொருட்படுத்தாமல் இந்தச் சவாலான வாழ்க்கையில், என் பக்கத்தில் ஒரு நிழலை போல நீ நின்று கொண்டிருக்கிறாய். எப்படி ஒருவர் தன் நிழலில் தவறுகளைக் கண்டுபிடிக்க முடியும்?" இதனை வாசித்து முடித்தபோது மனைவியின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. தன் தவற்றை உணர்ந்தவளாக அவள் தன் கணவனின் கையில் இருந்த தன் புகார் நாள்குறிப்பேட்டை வாங்கி கிழித்து எரிந்துவிட்டு அவரை வாரி அணைத்துக்கொண்டாள்.  

குடும்ப உறவில் ஆண்-பெண் சமத்துவம்

ஒரு குடும்பத்தின் வளர்ச்சியைப் பொறுத்துதான் ஒரு ஊரின், நகரின், நாட்டின் வளர்ச்சி அமையும். ஏனென்றால் மனிதர்கள் எப்போதும் தனிமரம் கிடையாது. அவர்கள் கூட்டாக இணைந்தே வாழ வேண்டும். இதன் அடிப்படையில்தான் தனிமரம் ஒருபோதும் தோப்பாகாது என்று கூறினார்கள் நம் முன்னவர்கள். ஆண்டவராகிய கடவுள்,'‘ மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்'’ என்றார் (காண்க. தொநூ 2:18) என்று நாம் தொடக்க நூலில் வாசிக்கின்றோம். ஆக குடும்பங்கள் செழித்தால்தான் திருஅவையும் வளமை பெறும். பல குடும்பங்கள் இணைந்ததுதான் திருஅவை என்னும் மாபெரும் குடும்பம். அப்படியென்றால், இதற்கு அடிப்படையாக அமைந்துள்ள கணவன்-மனைவி உறவும் வளம் பொருந்தியதாக அமைய வேண்டும்.

கணவன் மனைவி உறவு என்பது புரிதல், அன்பு, தியாகம் விட்டுக்கொடுத்தல், ஒருவருக்கொருவர்மீதான மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இன்றைய குடும்பங்களில் அவை காணாமல் போய்விட்டன என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. குடும்பங்களில் ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ மேலோங்கி இருப்பதற்கு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமையே முக்கிய காரணம். இதனால்தான் இன்றையச் சூழலில் பல குடும்பங்களை உடைத்து சிதைத்திருக்கின்றன. கடவுள் படைப்பில் இந்த வேறுபாடுகள் கிடையாது. இருவருக்குமே ஆண்மைப் பெண்மைப் பண்புகளை சரியாகப் படைத்திருக்கிறார். மறைந்த மாமேதை பீடு கிரிபித்ஸ் (Bede Griffiths) என்பவர் கிழக்கிற்கும் மேற்கிற்கும் திருமணம் (The Marriage of East and West) என்ற தனது நூலில் ஆண்மைப் பெண்மைப் பண்புகள் (ஆணாதிக்க பெண்ணாதிக்கப் பண்புகள்) குறித்து தெளிவுபட விளக்குகிறார். அதற்கான ஆதாரங்களையும் அவர் முன்வைக்கின்றார். இந்த உலகின் அனைத்து உயிரினங்களும் வளங்களும் ஆண்மைப் பெண்மைப் பண்புகளின் இணைவின் விளைவே. ஒரு முதிர்ச்சியடைந்த மனித வாழ்வும் ஆண்மைப் பெண்மைப் பண்புகளின் சரியான பிணைப்பே. ஒரு முதிர்ச்சியடைந்த ஆண் 15 விழுக்காடு ஆண்மைக்குரிய பண்புகளையும் 49 விழுக்காடு பெண்மைக்குரிய பண்புகளையும் கொண்டிருக்கிறார். அவ்வாறே ஒரு முதிர்ச்சியடைந்த பெண் 51 விழுக்காடு பெண்மைக்குரிய பண்புகளையும் 49 விழுக்காடு ஆண்மைக்குரிய பண்புகளையும் கொண்டிருக்கிறார். வேகம், வீரம், தன்முனைப்பு, அடைக்கியாளுதல், கோலோச்சுதல், வெற்றி இலக்கை நோக்கிய ஓட்டம், அறிவை மையப்படுத்திய சிந்தனை ஆகியவை ஆணுக்குரிய சிறப்புப் பண்புகள்.  அவ்வாறே, விவேகம், வேகம்,  அடுத்தவரை மையப்படுத்துதல், தோல்வியைத் தாங்குதல், விட்டுக்கொடுத்தல் (விதிவிலக்குகள் உண்டு), அன்பை மையப்படுத்திய வாழ்க்கைநெறி, மூளை தரும் அறிவைவிட உட்தூண்டுதல் (intuition) தரும் அறிவு ஆகியவை பெண்ணுக்குரிய சிறப்புப் பண்புகள். ஆணின் பண்புகள் கோலோச்சும் இடத்தில் வாழ்க்கை வயப்படும். ஆனால் பெண்மையின் பண்புகள் மேலோங்கி நிற்கும்பொழுது மட்டுமே வாழ்க்கை வசப்படும். இந்த இருவருக்குமான இந்தப் பண்புகளை நாம் திருக்குடும்பத்தில் காண முடிகின்றது.

"நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கு இசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் கணவனுக்கும் மனைவிக்குமிடையே இருக்க வேண்டிய பண்புநலன்களைப் பட்டியலிடுகின்றார் புனித பவுல். கணவனும் மனைவியும் இந்தப் பண்புகளைக் கொண்டிராவிடில் பிள்ளைகளை அத்தகைய வழியில் உருவாக்க முடியாது என்பது திண்ணம். பெற்றோர் எவ்வழியோ பிள்ளைகளும் அவ்வழி. மேலும், "பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள்" என்றும் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துகின்றார் பவுல். மேலும் "அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டிவைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்; அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்; ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். தலைவர்கள் கீழ்ப் பணியாளர்கள்போல் அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள்" என்று இன்றைய முதல் வாசகமும் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்குகின்றது.

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்

‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று குடும்ப விளக்கின் முன்னுரையில் பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக் கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளைக் கொண்ட பல துறைகள் இருக்கும். ஒவ்வொரு துறையும் அந்தப் பாடம் தொடர்பான அறிவுக் கருவூலமாக விளங்கி அம்மாணவர்களுக்குப் பயன் தரும். அது போலவே நல்ல குடும்பத்திலும் தந்தை, தாய், கணவன், மனைவி, குழந்தைகள் என்று பலர் இருப்பார்கள். ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தால் அன்பும் அறிவும் அந்த வீட்டில் எப்போதும் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்லவர்களாக இருந்தால் அந்தக் குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும் என்கிறார் பாரதிதாசன். "நான் நல்லவன்; என் மனைவி நனி நல்லள்; நாங்கள் என்றும் மனநலம் உடையோம்; ஆதலினால் அன்றோ, எம்மக்கள் நல்லவர்கள்; எம்மக்கள் கொண்ட பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர் நனிநல்லர் பொலியும் இனியும் குடும்பம்"  (குடும்ப விளக்கு “முதியோர் காதல்”) என்னும் வரிகளில் நல்ல குடும்பத்தை எடுத்துக்காட்டும் பாரதிதாசன் அவர்கள், எதிர்காலத்திலும் அக்குடும்பம் சிறந்து விளங்கும் என்று குறிப்பிடுகிறார். இங்கே ‘பொன்னுறவைப் பெற்றோர்’ என்பது, மகளின் கணவனையும் மகனின் மனைவியையும் பெற்றவர்கள் என்று அர்த்தப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்பத் தலைவி என்பவள் முதன்மையான இடத்தைப் பெறுகிறாள். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அவள் தன்னலம் கருதாமல் பிறர்நலம் கருதி அக்குடும்பத்தின் அனைத்து நலன்களுக்காகவும் உழைக்கிறாள். “இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை” (குறள் 53) என்ற குறளில், நல்ல பண்பு கொண்ட ஒரு பெண், ஒரு குடும்பத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் இல்லாதது எதுவும் இல்லை; நல்ல பண்பு இல்லாத ஒரு பெண், ஒரு குடும்பத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் எல்லாச் செல்வமும் இருந்தாலும் அவற்றால் எந்தப் பயனும் இருக்காது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.  

திருக்குடும்பத்தின் உறவு ஒன்றிப்பு

அன்னை மரியாவும் யோசேப்பும் தொடக்கத்தில் தங்களுக்கு ஏற்பட்ட சூழல் குறித்து பெரிதும் கலக்கமடைந்திருந்த போதிலும் இறைத்திட்டத்தை அறிந்துகொண்டபோது அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து ஏற்றுக்கொண்டனர். இன்று உலகெங்கிலும் பல்வேறு குடும்பங்கள் சந்திக்கும் போர்கள், சண்டைகள், மோதல்கள், கலவரங்கள், இடம்பெயர்தல்கள் புலம்பெயர்தல்கள் ஆகியவற்றை அன்றையச் சூழலில் திருக்குடும்பமும் சந்தித்தது. ஆனால் இந்த  நெருக்கடிகள் அனைத்திலும் மரியாவும் யோசேப்பும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, ஏற்றுக்கொண்டு ஒன்றித்துப் பயணித்தனர். அவர்களுக்குள் தூய அன்பும், நம்பகத்தன்மையும்  இறைநம்பிக்கையும் ஆழமாக வேரூன்றி இருந்ததால் அவர்களிடையே புரிந்துகொள்ளாமையையோ, வெறுப்புணர்வுகளையோ, கசப்புணர்வுகளையோ நாம் காண முடியவில்லை. யோசேப்பு அழைத்தபொழுதெல்லாம் மரியா கீழ்ப்படிந்து அவருடன் சென்றார். அவ்வாறே மரியா சொல்வதையெல்லாம் யோசேப்பு கீழ்ப்படிதலுடன் ஏற்றுக்கொண்டார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் இருவரும் ஒருவர்மீது ஒருவர் மிகுந்த மரியாதைக் கொண்டிருந்தனர். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

அதேவேளையில், இயேசு ஆண்டவரும் தனது பொதுவாழ்வுப் பணியைத் தொடங்கும் வரையிலும் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார் (லூக் 2:51). குறிப்பாக, தந்தை யோசேப்பின் இறப்பிற்குப் பின்பு, ஓர் இளைஞனுக்கே உரிய பொறுப்புணர்வுடன் தந்தையின் தச்சுத் தொழிலை செய்து அன்னை மரியாவுக்கு ஆதரவாக இருந்தார் இயேசு. தனது பொதுவாழ்வுப் பணியின்போதும் தன் தாய்க்கு உற்ற மகனாக வாழ்ந்தார். இன்னும் சிறப்பாக, கல்வாரியில் தனது இன்னுயிரைக் கையளிப்பதற்கு முன்பு, தனது தாயை யோவானிடம் கையளித்து அவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அளிக்கின்றார். "இதோ உன் தாய்"  மற்றும் "இதோ உம் மகன்" என்று இயேசு கூறும் வார்த்தைகள் இந்த அர்த்தங்களைத்தான் கொண்டிருக்கின்றன. இதனைத்தான்,  "இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்" (யோவா 19:26-27) என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கின்றோம். ஆகவே, கணவன்-மனைவிக்கிடையே இருக்க வேண்டிய உறவுகளையும் பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே இருக்க வேண்டிய பொறுப்புணர்வுகளையும் திருக்குடும்பத்திடம் இந்நாளில் நாம் கற்றுக்கொள்வோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 டிசம்பர் 2025, 12:20