தேடுதல்

புனித தொன்போஸ்கோ புனித தொன்போஸ்கோ   (© SDB)

இந்தியாவில் சலேசிய சபையின் மறைபரப்புப் பணியின் 150-வது ஆண்டு நிறைவுதினம்

இந்தியாவில் சலேசிய சபையின் மறைபரப்புப் பணியின் 150-வது ஆண்டு நிறைவுதினம் “நன்றி கூறுங்கள், மறுசிந்தனை செய்யுங்கள், மீண்டும் தொடங்குங்கள்" என்ற கருப்பொருளுடன் கொல்கத்தாவில் டிசம்பர் 20, 2025 அன்று கொண்டாடப்பட்டது.

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

இந்தியாவிலுள்ள சலேசிய சபைக்  குழுமம், முதல் சலேசிய மறைபறப்புப் பயணம் மேற்கொண்டு 150 ஆண்டுகள் நிறைவு பெறுதலையும் மற்றும் இந்தியாவில் சலேசிய சபையின் இருத்தல் 100 ஆண்டுகள் நிறைவுருதலையும் நினைவுகூரும் வகையில், டிசம்பர் 20, ஞாயிறன்று, சலேசிய மறைபரப்புத் தினத்தைக் கொண்டாடியது.

“நன்றி கூறுங்கள், மறுசிந்தனை செய்யுங்கள், மீண்டும் தொடங்குங்கள்" என்ற கருப்பொருளுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், எளிமையான வாழ்வு, இளைஞர்பணியில் முழுமையான ஈடுபாடு, கலாச்சார ஏற்புத்தன்மை மற்றும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் மீதான பக்தியை வளர்த்தல் ஆகிய கருத்துக்களும் முன்னிலைப்படுத்தி பேசப்பட்டன.

சலேசிய சபையின் மறைபரப்புப் பணித் திட்டம் இந்தியாவில் 1906-ல் முதலில் எவ்வாறு தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது எனவும், இப்பணிகள் மேலும் வளர்ச்சியடைந்து மேற்கு வங்கம் மற்றும் அதற்கடுத்த மற்ற மாநிலங்களில், ஏறத்தாழ 460-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய சலேசியர்கள் இளையோர் பணிக்கு எவ்வாறு பங்களிப்பு செய்தார்கள் என்பதை அங்கீகரிக்கும் விதமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

கொல்கத்தா, புனித ஜான் போஸ்கோ சலேசிய மறைமாநிலத் தலைவர் அருட்தந்தை ஜோசப் பௌரியா, ச.ச, திருப்பலியின் தொடக்க உரையில், மறைபரப்புப் பணி என்பது எவ்வாறு, ஒரு தன்னலமற்ற அன்பின் செயலாகவும் மேய்ப்புப் பணியாகவும் இருக்கின்றது என்பதை மையப்படுத்திப் பேசினார்.

மறைபோதக அமல உற்பவ கிறிஸ்தவர்களின் சகாய அன்னை அருள்சகோதரிகள் சபையின் சபை நிறுவுனர் வணக்கத்திற்குறிய அருட்தந்தை ஸ்டீபன் ஃபெரான்டோ ச.ச., மற்றும் மரியாவின் அமல உற்பவ அருள்சகோதரிகள் சபையின் நிறுவுனர், ஆயர் லூயிஸ் லா ராவோயர் மோரோ, ச.ச ஆகியோரும் இவ்விழாவில் கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் இச்சபைகளின் கல்விப்பணி, பெண்களின் மேம்பாட்டிற்கான பணிகள், மற்றும் மேய்ப்புப் பணியில் அவர்களின் பங்களிப்புகள் சிறப்பாக நினைவுகூரப்பட்டு பாராட்டப்பட்டதுடன், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றிய பங்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் (வேதியர்கள்), தொன் போஸ்கோவின் சீடர்கள் குழு உறுப்பினர்கள், மற்றும் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய பணிகள் அனைத்தும் இந்நிகழ்வில் நினைவுகூர்ந்து பாராட்டப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 டிசம்பர் 2025, 13:08