தேடுதல்

இறைவேண்டல் செய்யும் கிறிஸ்தவர்கள் இறைவேண்டல் செய்யும் கிறிஸ்தவர்கள்   (ANSA)

கிறிஸ்தவத் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடுங்கள்!

இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நவம்பர் 28 முதல் 30 வரை நடைபெற்ற வழக்கறிஞர்களின் தேசிய மன்றத்தின் ஏழாவது தேசிய மாநாட்டில் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நீதியின் ஆதரவாளர்களாகச் செயல்படவும் பேராயர் மஞ்சலி அழைப்பு

செபஸ்தியான் வனத்தையன் - வத்திக்கான்

இந்தியாவில் வழக்கறிஞர்களாகப் பயிற்சி பெற்ற கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதிரிகள், மதமாற்றத்திற்கு எதிராக அதிகரித்து வரும் கருத்துக்களை எதிர்க்கவும், கிறிஸ்தவர்களைக் குறிவைக்கும் அநீதியான சட்டங்களுக்கு எதிராகப் போராடவும் அழைப்பு விடுத்துள்ளார் ஆக்ராவின் பேராயர் இராபி மஞ்சலி.

இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற வழக்கறிஞர்களின் தேசிய மன்றத்தின் ஏழாவது தேசிய மாநாட்டில் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார் பேராயர் மஞ்சலி.

நவம்பர் 28 முதல் 30 வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆதரவளிக்க சட்டப் பணிக்குழுவை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நீதியின் ஆதரவாளர்களாகச் செயல்படவும் வலியுறுத்திய பேராயர் மஞ்சலி அவர்கள், பரந்த சமூகப் பிரச்சினைகளைக் கையாள பொது நல வழக்குகளில் ஒன்றாகப் பணியாற்ற வேண்டுமென கத்தோலிக்க வழக்கறிஞர்களை அவர் ஊக்குவித்தார். 

குறிப்பாக, மதமாற்றத் தடைச்சட்டங்கள் அமலில் உள்ள மாநிலங்களில் கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறைகள் அதிகரித்து வருவதால், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்திற்கு ஆதரவளிக்க கூட்டு உத்திகள் மற்றும் பொது நல வழக்குகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார் பேராயர் மஞ்சலி.

வழக்கறிஞர்களின் தேசிய மன்றத்தின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அருள்சகோதரி ஹெலன் தெரசா அவர்கள், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க, சட்ட நிபுணத்துவத்தை ஆன்மிக மேய்ப்புப்பணி உணர்திறனுடன் இணைத்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார் பேராயர் மஞ்சலி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 டிசம்பர் 2025, 14:24