திருத்தந்தை பிரான்சிஸ் புலம்பெயர்ந்தோர் ஆதரவு மையத் தொடக்க விழா
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
டிசம்பர் 3, இச்செவ்வாயன்று பெங்களூரு உயர் மறைமாவட்டம் Scalabrinian மறைபரப்புப் பணியாளர்களுடன் இணைந்து யஷ்வந்த்பூர் தொடர்வண்டி நிலையம் அருகே, மத்திகிரி அருகில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் தாங்கிய புதிய புலம்பெயர்ந்தோர் ஆதரவு மையம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் புலம்பெயர்ந்தோர் மையம் மற்றும் குறுகிய கால தங்குமிடம், அங்குள்ள புலம்பெயர்ந்த குடும்பங்களுக்குப் பாதுகாப்பு, மாண்பு மற்றும் அவர்களுக்கே உரித்தான உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இம்மையம் இரக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் திரு அவையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்தத் தொடக்க விழாவில் கர்தினால் சில்வானோ மரியா தோமாசி, பேராயர் பீட்டர் மச்சாடோ மற்றும் பிற திருச்சபைத் தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் இவ்விழாவில் கலாச்சார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் இடம்பெற்றன.
இத்தொடக்க விழாவில், "வரவேற்கும் செயல்பாடுகளின் வழியேதான் திரு அவையின் பணி மேலும் வளரும்" என்று குறிப்பிட்ட கர்தினால் தோமாசி அவர்கள், "இந்த மையம் செயல்களை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையின் உயிருள்ள சான்றாகத் திகழ்கிறது" என்றும் கூறினார்.
இந்தியத் கத்தோலிக்க ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர்,பேராயர் விக்டர் ஹென்றி தாக்கூர் அவர்கள் உட்பட இவ்விழாவில் உரையாற்றிய திரு அவைத் தலைவர்கள் அனைவரும், இம்மையமானது புலம்பெயர்ந்தோருக்குப் பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்கும் ஓர் இல்லமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
Scalabrinians மறைபரப்புப் பணியாளர்கள் சபையின் தலைமை அதிபர் அருள்பணியாளர் Leonir Chiarello அவர்கள், "புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளிக்கும் தங்களின் நீண்டகாலப் பணியின் ஓர் அங்கமே இம்மையம்" என்று கூறியதுடன், "இது சட்டம் தொடர்பான உதவி, திறன் மேம்பாடு, சமூகத்தை கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பலதரப்பட்ட சேவைகளை வழங்குகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் புலம்பெயர்ந்தோர் மையம் என்பது ஒரு கட்டிடம் மட்டுமன்று, அது ஒவ்வொரு புலம்பெயர்ந்தோருக்கும் நம்பிக்கை, மாண்பு மற்றும் ஓர் இல்லத்தை வழங்கக் கூடிய புகலிடமாகத் திகழ்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்