தேடுதல்

பாக்ஸ் கிறிஸ்டி இயக்கத்தின் இயக்குநர் மேரி டென்னிஸ் பாக்ஸ் கிறிஸ்டி இயக்கத்தின் இயக்குநர் மேரி டென்னிஸ் 

ஆயுதமற்ற மற்றும் ஆயுதங்களைக் களைகின்ற அமைதிக்கு அழைப்பு!

"அகிம்சை என்பது ஒரு நடைமுறை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாதையாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் திருத்தந்தையின் அமைதி நாள் குறித்த செய்தி வழங்குகிறது" : பாக்ஸ் கிறிஸ்டி இயக்கத்தின் இயக்குநர் மேரி டென்னிஸ்

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

ஜனவரி 1, வியாழக்கிழமையன்று, உலக அமைதி நாளை சிறப்பிக்க திருஅவை தயாராகி வரும் வேளையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் விடுத்துள்ள தனது செய்தியில், ஆயுதமற்ற மற்றும் ஆயுதங்களைக் களைகின்ற ஓர் அமைதியை வலியுறுத்தியுள்ளதை வரவேற்றுள்ளார் மேரி டென்னிஸ்.

ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெறும் பாக்ஸ் கிறிஸ்டி (Pax Christi) எனப்படும் அனைத்துலகக் கத்தோலிக்க அமைதி இயக்கத்தின் இயக்குநரான மேரி டென்னிஸ் அவர்கள், திருத்தந்தையின் இந்தச் செய்தியை மோதல்களும் அச்சமும் அதிகரித்து வரும் இவ்வுலகில் பணிவு, விடாமுயற்சி மற்றும் நற்செய்தி வழி அகிம்சைக்கான ஓர் அழைப்பு என்பதை  எடுத்துரைத்துள்ளார்.

இராணுவ பலத்தையோ அல்லது கட்டாயப்படுத்துதலையோ சார்ந்து அமைதி அமையக்கூடாது என்றும், எதிரிகளாகக் கருதப்படுபவர்களுடனும் உறவுகளைக் கட்டியெழுப்புவதன் மூலமே அமைதி ஏற்பட வேண்டும் என்ற திருத்தந்தையின் வலியுறுத்தலை எடுத்துக்காட்டியுள்ளார் டென்னிஸ்.

மேலும் உரையாடல், நீதி மற்றும் மன்னிப்பைப் போற்றி வளர்க்கும் அமைதித் தலங்களாக சமூகங்கள் உருவெடுக்க வேண்டும் எனவும் அறைகூவல் விடுக்கிறது திருத்தந்தையின் அமைதி நாள் குறித்த செய்தி என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் டென்னிஸ்.

உக்ரைன் முதல் சூடான் வரை உலகளாவியப் பதற்றங்கள் நிலவி வரும் வேளையில், திருத்தந்தையின் இந்தச் சிந்தனை ஏற்கனவே உலகம் முழுவதும் அமைதி மற்றும் நம்பிக்கைக்குரிய வழிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள டென்னிஸ் அவர்கள், அகிம்சை என்பது ஒரு நடைமுறை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாதையாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் இது அளிக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

அதேவேளையில், திருத்தந்தையின் இந்தச் செய்தி, ஒரு மாற்று வழிக்கான வலுவான வெளிப்பாடாகும் என்றும், நற்செய்தி அகிம்சையை (Gospel nonviolence) அடிப்படையாகக் கொண்ட அமைதி இன்னும் சாத்தியமாகும் என்ற துணிச்சலான வலியுறுத்தல் என்றும் கோடிட்டுக்காட்டியுள்ளார் டென்னிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 டிசம்பர் 2025, 14:35