திறந்த இதயங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட அமைதிக்குத் திரும்புங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் தொடரும் துயரங்கள், பலவீனமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஆழமான காயங்கள் இன்னல்கள் அனைத்தும் விதியின் விளைவாக அல்ல, மாறாக, மனித மற்றும் அரசியல் தேர்வுகளின் விளைவாக ஏற்பட்டவை என்று கூறினார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திட்சா பித்சபாலா.
டிசம்பர் 24 புதன்கிழமையன்று, பெத்லேகமிலுள்ள கிறிஸ்து பிறப்புப் பெருங்கோவிலில் இடம்பெற்ற கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவுத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறிய கர்தினால் பித்சபாலா அவர்கள், காசாவில் தனது மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், அதன் தற்போதைய துயர நிலைக் குறித்தும் மக்களிடம் பகிர்ந்துகொண்டார்.
பரந்த அளவில் இடம்பெற்று வரும் மோதலைப் பற்றி குறிப்பிட்ட கர்தினால் பித்சபாலா அவர்கள், கிறிஸ்து பிறப்பு விழா, மக்கள் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்திற்கு அப்பால் சென்று, அன்பு, ஒன்றிப்பு மற்றும் நீதியை மீண்டும் கண்டறிய அழைப்பு விடுக்கிறது என்று எடுத்துக்காட்டினார்.
இன்றைய பாலஸ்தீனியர்கள் அனுபவித்து வரும் துயரங்களை அன்னை மரியா மற்றும் யோசேப்புடன் ஒப்பிட்டு, இயேசு நிச்சயமற்ற தன்மை மற்றும் அச்சத்தின் மத்தியில், இருளை வெல்லும் ஒளியாகப் பிறந்தார் என்று கூறினார் கர்தினால் பித்சபாலா.
மக்கள் தங்கள் இதயங்களில் அமைதியை வரவேற்கவும், உறுதியான செயல்கள் மூலம் அதைப் பாதுகாக்கவும் தயாராக இருக்கும்போது மட்டுமே அமைதி உண்மையானதாக மாறும் என்று குறிப்பிட்ட அவர், ஒப்புரவை ஊக்குவிப்பதற்கும் வெறுப்பை நிராகரிப்பதற்கும் அரசியல் தலைவர்கள், அனைத்துலகச் சமூகம் மற்றும் மதத் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வையும் கோடிட்டுக் காட்டினார்.
காசாவில் தொடர்ச்சியான பதட்டங்கள் இருந்தபோதிலும், பெத்லகேம் புதுப்பிக்கப்பட்ட பெருமகிழ்வுடன் இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடியது. இந்தத் திருப்பலியில் அதிக எண்ணிக்கையிலான விசுவாசிகள் பங்குபெற்றனர்.
மேலும் ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சிகள், வண்ண விளக்குகள் மற்றும் கிறிஸ்துமஸ் கடைகள் தீவனத் தொட்டி சதுக்கத்தை (Manger Square) நிரப்பியது. குறிப்பாக, இப்பெருவிழா கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றாக இணைத்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்