தேடுதல்

பேராயர் லூசியஸ் இவெஜுரு உகோர்ஜி பேராயர் லூசியஸ் இவெஜுரு உகோர்ஜி  

தெற்கு நைஜீரியாவில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் அருள்பணியாளர் காயம்!

இத்தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஓவெரி மறைமாவட்டத்தின் பேராயர் லூசியஸ் இவெஜுரு உகோர்ஜி அவர்கள் "இந்தக் கொடிய தாக்குதலில் இருந்து அவர் உயிர் பிழைத்ததற்கு நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்" என்று கூறியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தெற்கு நைஜீரியாவின் இமோ மாநிலத்தின் எம்பைடோலி உள்ளூர் அரசுப் பகுதியின் ஓக்பாகுவில் கிறிஸ்து பிறப்பு நாளன்று, கத்தோலிக்க அருள்பணியாளர் ரேமண்ட் ஜோகு அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதில் படுகாயமடைந்தார் என்று பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஓவெரி மறைமாவட்டம் அளித்த தகவலின்படி, இக்பாகுவில் உள்ள புனித கெவின் பங்குத்தளத்தின் துணைப் பங்குத்தந்தை, அருள்பணியாளர் ஜோகு அவர்கள், அன்று இரவு 8 மணியளவில் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​ஆயுதமேந்திய நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

தாக்குதல் நடத்தியவர்கள், ஒரு SUV காரில் வந்ததாகவும், அவர்கள் முன்பு அந்தப் பகுதியில் மற்றொரு நபரைக் கடத்த முயன்று தோல்வியடைந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுவதாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் உரைக்கிறது.

அருள்பணியாளர் ஜோகு அவர்களின் பங்குத் தளத்தைச் சேர்ந்த இறைமக்கள் சிலர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் என்றும், அங்கு அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருள்பணியாளர் ஜோகு அவர்கள் நலமடைந்து வருவதாகத் தெரிவித்த, ஓவெரி மறைமாவட்டத்தின் பேராயர் லூசியஸ் இவெஜுரு உகோர்ஜி அவர்கள், "இந்தக் கொடிய தாக்குதலில் இருந்து அவர் உயிர் பிழைத்ததற்கு நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்" என்றும், "அருள்பணியாளர் ஜோகுவின் கார் பல துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 டிசம்பர் 2025, 13:16