ஆயுதங்களற்ற அமைதிக்கான திருத்தந்தையின் கருத்துக்கு வரவேற்பு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
ஆயுதங்களற்ற மற்றும் ஆயுதங்களை ஒழிக்கும் அமைதிக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அழைப்பு, நீண்டகாலமாகப் போரினால் பாதிக்கப்பட்ட காங்கோ ஜனநாயகக் குடியரசில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்று கூறினார் பேராயர் புல்ஜென்ஸ் முடேபா (Fulgence Muteba).
காங்கோ தேசிய ஆயர் பேரவையின் தலைவரும், லுபும்பாஷி உயர்மறைமாவட்டத்தின் பேராயருமான முடேபா அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
திருத்தந்தையின் இந்த அழைப்பு, அமைதிக்காகக் காத்திருக்கும் காங்கோ மக்களின் பெரும் விருப்பத்தோடு ஒத்துப்போவதாகவும், இது ஆப்பிரிக்காவைத் தாண்டி ஒட்டுமொத்த உலகிற்கும் பொருந்தக்கூடிய பொதுவான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
அமைதி, திருஅவையின் சமூகக் கோட்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்குத் திருத்தந்தை அளிக்கும் முக்கியத்துவத்தைப் பாராட்டிய பேராயர் அவர்கள், இது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய 'இறைவா உமக்கே புகழ்!' (Laudato si) என்ற திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் தொடர்ச்சியாக இருப்பதை எடுத்துக்காட்டினார்.
எதிர்நோக்கின் யூபிலி ஆண்டைப் பற்றி குறிப்பிட்ட பேராயர் அவர்கள், தனது மறைமாவட்டத்திலுள்ள இறைமக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இவ்விழாவில் பங்கேற்றதாகவும், இது விசுவாசத்தைப் புதுப்பித்ததோடு நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான அர்ப்பணிப்பையும் மீண்டும் தூண்டியதாகவும் கூறினார்.
மேலும், எதிர்காலத்தைக் குறித்து பேசுகையில், முடிவில்லாமல் தொடரும் வன்முறைகளுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியிலும், நாம் ஒருபோதும் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்திய பேராயர், இதற்கு தற்போதைய சூழலைச் சரியாகப் புரிந்துகொள்ளும் தெளிவும் இறைவனின் மீது கொண்ட ஆழமான நம்பிக்கையும், அமைதி நிலவத் தொடர்ந்து மேற்கொள்ளும் இறைவேண்டலும் மிக அவசியம் என்று கூறினார்.
அதேவேளையில், திருஅவைக்குள் ஒன்றிப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாக, ஒன்றிணைந்த பயணம் (synodality) அமையும் என்பதையும் முன்னிலைப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்