மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தை   (ANSA)

காசா சிறுவர்களின் சிகிச்சை அனுமதியை வலியுறுத்தும் திருச்சபைத் தலைவர்கள்!

எருசலேம் திருச்சபை தலைவர்களும், மத்திய கிழக்கு அமைதிக்கான திருச்சபைகள் அமைப்பினரும் , இந்த சிறுவர்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய உலக நாடுகளும் அனைத்துலகச் சமூகமும் விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

எருசலேமில் உள்ள பல்வேறு திருச்சபைகளின் தலைவர்கள், காசாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள  சிறுவர்கள் கிழக்கு எருசலேமில் உள்ள அகஸ்தா விக்டோரியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலிய அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

டிசம்பர் 20, சனிக்கிழமை நிலவரப்படி, காசாவிலிருந்து புற்றுநோயாளிகள், குறிப்பாக இரத்தப் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், மேற்குக் கரை மற்றும் கிழக்கு எருசலேமில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளுக்குச் செல்வதை இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வரும் நிலையில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

எருசலேமின் முதுபெரும் தந்தையர்கள் மற்றும் பல்வேறு திருச்சபைத் தலைவர்கள், காசாவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், குழந்தைகளின் உயிரைக் காக்க அவர்களுக்குத் தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிப்பது மிக அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு எருசலேமில் உள்ள அகஸ்தா விக்டோரியா மருத்துவமனை, இஸ்ரேல் அரசிற்கு எந்தவிதச் செலவுமின்றி, நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான போக்குவரத்து மற்றும் முழுமையான சிகிச்சை வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த மனிதாபிமான முயற்சியை மத்திய கிழக்கு அமைதிக்கான திருச்சபைகள் (CMEP) அமைப்பு ஆதரித்துள்ளதுடன், சிகிச்சையில் ஏற்படும் தாமதங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் வாழ்வா-சாவா என்ற போராட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கவலை தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு அமைதிக்கான திருச்சபைகள் அமைப்பின்  நிர்வாக இயக்குநர் முனைவர். மே எலிஸ் கேனன் அவர்கள், காசா சிறுவர்களுக்குத் தேவையான மருத்துவ அனுமதிகள் கிடைக்க அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறும், அவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

எருசலேம் திருச்சபை தலைவர்களும், மத்திய கிழக்கு அமைதிக்கான திருச்சபைகள் அமைப்பினரும் , இந்த சிறுவர்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய உலக நாடுகளும் அனைத்துலகச்  சமூகமும் விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 டிசம்பர் 2025, 11:28