தேடுதல்

மக்கபேயர் எழுச்சி மக்கபேயர் எழுச்சி  

தடம் தந்த தகைமை : திமொத்தேயுவின் வீழ்ச்சி

யூதர்கள் தங்கள் வெற்றிக்கும் புகழுக்கும் தங்கள் வலிமையை மட்டும் நம்பவில்லை; ஆண்டவர்மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முன்பு யூதர்களால் தோற்கடிக்கப்பட்ட திமொத்தேயு எண்ணற்ற அயல் நாட்டவரைக் கொண்ட கூலிப்படையைத் திரட்டினான்; ஆசியாவிலிருந்து மாபெரும் குதிரைப்படையையும் சேர்த்துக்கொண்டு யூதேயாநாட்டைப் படைவலியால் கைப்பற்றும் எண்ணத்தோடு வந்தான். அவன் நெருங்கி வந்தபோது மக்கபேயும் அவருடைய ஆள்களும் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக்கொண்டும் தங்கள் இடையில் சாக்கு உடை உடுத்திக் கொண்டும் கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார்கள்; பலிப்பீடத்தின்முன் இருந்த படி மீது குப்புற விழுந்து தங்கள் மீது இரக்கம் காட்டவும் திருச்சட்டம் கூறுவது போலத் தங்கள் எதிரிகளுக்கு எதிரிகளாகவும் பகைவர்களாகவும் இருக்கவும் அவரை வேண்டினார்கள்.

வேண்டலுக்குப்பின் தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் நகரிலிருந்து நெடுந்தொலை சென்றார்கள்; எதிரிகள் இருந்த இடத்திற்கு அருகில் வந்ததும் அங்குத் தங்கினார்கள். பொழுது புலர்ந்ததும் இரு படையினரும் போர்தொடுத்தனர். யூதர்கள் தங்கள் வெற்றிக்கும் புகழுக்கும் தங்கள் வலிமையை மட்டும் நம்பவில்லை; ஆண்டவர்மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். மற்றவர்களுக்கு அவர்களது சீற்றமே படைத்தலைவனாய் அமைந்தது. போர் கடுமையானபோது ஒளி பொருந்திய ஐந்து மனிதர்கள் பொற் கடிவாளம் பூட்டிய குதிரைகள் மேல் அமர்ந்து யூதர்களை நடத்துவது போன்று பகைவர்களுக்கு விண்ணிலிருந்து தோன்றினார்கள். அந்த ஐவரும் மக்கபேயைச் சூழ்ந்துகொண்டு தங்கள் படைக்கலங்களால் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்து, காயப்படாதவாறு அவரைக் காப்பாற்றினார்கள்; பகைவர்கள்மீது அம்புகளையும் தீக்கணைகளையும் வீசினர். அதனால் பகைவர்கள் பார்வை இழந்து குழப்பம் அடைந்து சிதறண்டு ஓட, யூதர்கள் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள். இருபதாயிரத்து ஐந்நூறு காலாட்படை வீரர்களும் அறுநூறு குதிரை வீரர்களும் கொல்லப்பட்டார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 டிசம்பர் 2025, 13:03