தமிழகத்தில் கல்லறைத் திருவிழா தமிழகத்தில் கல்லறைத் திருவிழா  

இறந்த நம்பிக்கையாளர் விழா - மரணமில்லா பெருவாழ்வு வாழ்வோம்!

இம்மண்ணுலகில் வாழும்போது தூய வாழ்வு வாழ்வோம். நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம். நாம் வாழ்வது ஒருமுறை. நம்மை வாழ்த்தட்டும் தலைமுறை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. சாஞா 3:1-9;       II.   உரோ 6:3:-9;      III.   யோவா 11:17-27)

இன்று நாம் இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்பது வந்தே தீரும். இறப்பிலிருந்து நாம் வேண்டுமானால் சிறிது காலம் தப்பிப் பிழைக்கலாம் ஆனால் அதிலிருந்து நீண்ட காலத்திற்குத் தப்பிக்க இயலாது. “ஐயா எங்க அப்பாவை எப்படியாவது காப்பாத்திடுங்க..... ஐயா எங்க அம்மாவை எப்படியாவது காப்பாத்திடுங்க” என்று மருத்துவரிடம் நாம் கெஞ்சும் தருணங்கள் எல்லாம்  சிறிதுகால வாழ்க்கைக்குத்தான் என்பதே நிதர்சனமான உண்மை.. ஆனாலும் இந்தப் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மனிதன் போடுகிற ஆட்டம் இருக்கே.... அப்பப்பா சொல்லி மாளாது. சீடன் ஒருவன் தன் குருவிடம் கேட்டான்,  "உலகிலேயே அதிசயமான விடயம் எது? என்று.  குரு அவனிடம், "தன் கண்முன்னே உலகத்தார் ஒவ்வொருவராக இறந்தாலும், தாம் மட்டும் இறக்கமாட்டோம் என்பதுபோல் மனிதர் வாழ்வதே, உலகில் அதிசயமான விடயம்" என்றார். இதனைத்தான், "மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று... இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று..." என்று எழுதுகிறார் கவிஞர் கண்ணதாசன்.

ஒரு காட்டில் துறவி ஒருவர் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரிடம் பலர் சீடர்களாகப் பாடம் கற்று வந்தனர். துறவி எப்போதுமே மௌன விரதத்தில்தான் இருப்பார். ஆனால் ஆண்டில் ஒருநாள் மட்டும் அவர் தன் சீடர்களிடம் உரையாற்றுவார். ஒரே ஒரு சீடரின் கேள்விகளுக்கு மட்டும் அவர் பதிலளிப்பார். ஒருநாள் அந்த ஆசிரமத்திற்குப் புதிதாக ஒரு சீடன் வந்து சேர்ந்தான். அவனுக்கு ஆசிரமத்தின் நடைமுறைகள் சுத்தமாகப் புரியவில்லை. மேலும் துறவி ஆண்டு முழுக்கவே எதுவும் பேசாதபோது அவரிடம் சீடர்கள் எதற்காக இருக்க வேண்டும் என்ற கேள்வி அவனைக் குடைந்துகொண்டே இருந்தது. ஒருநாள் அந்தச் சீடன் ஒரு மண் பாத்திரத்தில் பழரசம் எடுத்துச் சென்று துறவிக்குக் கொடுத்தான். பழரசத்தை அருந்திவிட்டு அந்தப் பாத்திரத்தை அப்படியே கீழே போட்டு உடைத்தார் துறவி. பின் சீடர்களை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தார். அனைத்துச் சீடர்களும் புரிந்தது என்பதுபோல தலையை ஆட்டினர். ஆனால் புதிய சீடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிற சீடர்களிடம் வினவினான். அவனையே சுயமாகச் சிந்திக்குமாறு அவர்கள் கூறினர். மண் பாத்திரத்தைக் கீழேபோட்டு உடைப்பதில் என்ன பாடம் இருக்க முடியும்? என அவன் சிந்திக்க ஆரம்பித்தான். பல மாதங்கள் ஆகியும் அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. துறவி மௌனத்தைக் கலைத்துப் பேசக்கூடிய அந்த ஒருநாள் வந்தது. துறவியிடம் கேள்வி கேட்க மற்ற சீடர்கள் அவனுக்கு வாய்ப்பு அளித்தனர். "ஐயா, நீங்கள் பாத்திரத்தைக் கீழே போட்டு உடைத்ததன் மூலம் எங்களுக்கு என்ன கூற விரும்பினீர்கள்?" என்ற தனது சந்தேகத்தினை அவன் அப்போது துறவியிடம் கேட்டான். அதனைக் கேட்ட துறவி மென்மையாகச் சிரித்துக்கொண்டே, "இந்த உலகில் நிலையானது எதுவுமே இல்லை என்பதை விளக்கவே நான் அன்று அவ்வாறு செய்தேன்" என்றார். இங்கே இந்தக் கதையுடன் ஒத்து சிந்திக்க தாவீது அரசரின் திருப்பாடலின் வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன. “ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும். அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன். என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை; உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்; அவர்கள் வருந்தி உழைப்பது வீண்; அவர்கள் சேமித்து வைக்கின்றனர்; ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார்” (திபா 39:4-6).

இதனையெல்லாம் அறிந்தும் கூட நாமும் ஒருநாள் இறப்போம் என்கிற உண்மை மட்டும் ஏனோ நம்மைத் தொடுவதில்லை. இந்த அர்த்தத்தில்தான் அறிவற்ற செல்வனின் உவமையை எடுத்துக்காட்டுகிறார் (காண்க. லூக் 12:13-21) நமதாண்டவர் இயேசு. பிறப்பும் இறப்பும் என்றும் இறைவன் கையில்தான் உள்ளது. பிறப்பைக் கொண்டாடுவதுபோல இறப்பையும் கொண்டாடவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ நாம் பழகிக்கொண்டால் இந்த வாழ்வு அர்த்தம் பெறுவதைக் காணலாம். ஆனால் இது சற்று கடினமானது என்பது உண்மையே. இறந்தோர்‌ நினைவு என்பதன்‌ அர்த்தமே, நம்மை விட்டுப்‌ பிரிந்தவர்‌, இறைவனோடு என்றென்றும்‌ வாழ்கிறார்‌; அந்த வாழ்வை நினைத்து, இறைவனின்‌ நிலைவாழ்வுக்கு நன்றி கூறுவதே இறந்தோரின்‌ நினைவைச்‌ சிறப்பிப்பதாகும்‌. நேற்று நம்மோடு இருந்த இவர்கள் நமக்கு வாழ்வில் வழி காட்டியவர்கள், நமக்கு வழி விட்டவர்கள் மற்றும் வழித்துணையாக வருபவர்கள். இவ்வுலக வாழ்வு கல்லறையோடு முடிவடைவதில்லை, அதையும் தாண்டி ஒரு வாழ்வு உண்டு. இறைவனோடு நாம் வாழப்போகும் அந்த வாழ்வு, இவ்வுலக வாழ்வுக்குப் பொருள் தருகிறது என்ற எண்ணத்தை, இந்த நினைவுநாள் நம் மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறது.

"பொழுது விடிந்ததும், இரவுக்காக ஏற்றிவைத்த மெழுகுதிரியை அணைப்பதுபோலத்தான் ஒரு கிறிஸ்தவரின் மரணம்" என்ற உருவகம், மறுவாழ்வில் நாம் தொடரப்போகும் உயர்ந்ததொரு வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறது. கடற்கரையின் ஒருபுறம் நாம் இறந்தவர்களுக்கு கையசைத்து வழியனுப்பி வைத்தாலும் அதன் மறுபுறத்தில் கடவுள் அவர்களை நிலைவாழ்வுக்கு வரவேற்க தன் இருக்கரங்களையும் விரித்துக் காத்திருக்கின்றார் என்பதை ஆன்மிக வழியில் நாம் புரிந்துகொள்ள முற்படுவோம். இறைவனின் நிரை ஆசிரில் அவர்கள் புதியதொரு வாழ்வைத் தொடங்கவிருக்கிறார்கள் என்பதே பேருண்மை. இந்தப் பின்னணியில் இன்றைய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம். “நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் க‌ண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்; நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர்.”

மரணம் நிகழாத நாளில்லை, மரணம் நிகழாத வீடில்லை என்றே சொல்ல வேண்டும். மரணம் என்பது ஓர் எதார்த்தம். மரணம் வாழ்வில் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றது. இறப்பு என்றால் வாழ்க்கை முடிந்து விட்டது என்பதல்ல. இறப்பு என்பது ஒரு வெற்றிடம் ஆகிறது. இங்கு இறக்கக்கூடிய ஒவ்வோர் ஆன்மாவும் விண்ணுலகில் பிறக்கிறார்கள். மண்ணுலகில் மறையக் கூடிய ஓர் ஆன்மா விண்ணகத்தில் புதிதாகப் பிறக்கிறது. இதுவே நமது திருஅவை நமக்கு கற்பிக்கக் கூடிய ஆழமான மறையுண்மையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் நமது இறப்பை எதிர்நோக்கிச் சென்று கொண்டுதான் இருக்கிறோம். நாம் அனைவரும் கண்டிப்பாக ஒருநாள் இந்த மண்ணை விட்டு  மறைந்துபோவோம். மறைவதற்குள் நாம் கண்டிப்பாக பலவிதமான நல்ல செயல்களை செய்தாக வேண்டும். நமது சாவை அழிவாகப் பார்ப்பதைவிட நிலை வாழ்வுக்குச் செல்லும் வழியாகப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். இதனைத்தான் இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடியார் எடுத்துரைக்கின்றார். "திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா?இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு, பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில், இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்."

நாம் இறந்தாலும் உயிர் வாழ்வோம் என்பதற்கு நற்செய்தி நூல்களில் ஆண்டவர் இயேசு நிகழ்த்தும் மூன்று அருளடையாளங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. முதலாவதாக தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவரின் மகளை உயிர்பெற்று எழச்செய்தல் (மாற் 5:21-23;35-43). இந்நிகழ்வில், “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்”  (வச.39) என்ற இயேசுவின் வார்த்தைகள், இறப்பு என்பது முடிவல்ல, அதற்குப் பிறகு ஒரு வாழ்வு உண்டு என்பதை எடுத்துக்காட்டுகிறது. இரண்டாவதாக, நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல் நிகழ்வு (லூக் 7:11:16). இந்நிகழ்வில்,  “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” (வச. 14) என்ற வார்த்தைகள் இயேசு நமக்கு உயிர்ப்பை அதாவது நிலைவாழ்வை வழங்குவார் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகின்றது. மூன்றாவதாக, இறந்த இலாசரை உயிர்பெற்று எழச்செய்தல் (யோவா 11:1-44). குறிப்பாக இந்நிகழ்வில், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" (வச. 25) என்ற இயேசுவின் வார்த்தைகள் அவர் வழங்கப் போகும் நிலைவாழ்வின் மேன்மையை நமக்கு உணர்த்துகின்றன. சிறப்பாக, “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்று மார்த்தாவிடம் இயேசு மொழியும் வார்த்தைகள் உயிர்தெழுதலின் மேன்மையை நமக்கு உணர்த்துகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமதாண்டவர் சாவை வென்று வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்து நிலைவாழ்வில் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பது நாம் பெறப்போகும் நிலைவாழ்விற்கான நம்பிக்கையின் உச்சமாக அமைகின்றது.

உன்னத வாழ்க்கை வாழ்வோம்

நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் படிப்பினைகளையும் கட்டளைகளையும் கடைப்பிடித்து ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழும்போது நாம் இந்த மண்ணுலகிலேயே உண்மையான நிலைவாழ்வைக் காண முடியும் என்பது திண்ணம். நாம் இறந்த பிறகு பிறர் நம்மைக் குறித்து முன்வைக்கும் கருத்துக்கள் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றோம் என்பதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லும். எடுத்துக்காட்டாக நாம் இறந்த பிறகு, “ஒரு நல்ல மனிதரை நாம் இழந்துவிட்டோமே, இவரால் எத்தனைப்பேர் பயன்பெற்றனர், இவர் தனது வாழ்நாளில் எத்தனைப் பேரை வாழ வைத்திருக்கிறார், இவரைப்போல் இனி ஒருவரைக் காண்பது அரிதுதான்" என்று சிலர் சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் வார்த்தைகள் நாம் வாழ்ந்த உன்னதமான வாழ்கைக்குச் சான்றுகளாக அமைகின்றன. அதேவேளையில், "அப்பாடா.... சனியன் செத்து ஒழிந்தது. இனி ஊரே நல்லா இருக்கும். இவன் எத்தனைபேர் குடியைக் கெடுத்திருப்பான்.... எத்தனை நல்லவங்க சாவுக்கு காரணமா இருந்திருப்பான்" என்று நம்மைக் குறித்துப் பலர் தூற்றினால் அவர்களின் வார்த்தைகள் நாம் வாழ்ந்த  அர்த்தமற்ற வாழ்க்கையைப் பறைசாற்றும். ஆகவே, இம்மண்ணுலகில் வாழும்போது தூய வாழ்வு வாழ்வோம். நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம். நாம் வாழ்வது ஒருமுறை. நம்மை வாழ்த்தட்டும் தலைமுறை. இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 நவம்பர் 2025, 16:11