தேடுதல்

சூடானில் மக்களின் அவலநிலை சூடானில் மக்களின் அவலநிலை   (AFP or licensors)

சூடான் மற்றும் தெற்கு சூடானில் மனித மாண்புகள் மதிக்கப்பட வேண்டும்!

சூடான் மற்றும் தெற்கு சூடானில் மோசமான சூழ்நிலை நிலவிவரும் போதிலும், நேர்மையான உரையாடல் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என்ற அதன் ஆயர்கள் தங்களின் நம்பிக்கை அறிக்கையொன்றில் வெளிப்படுத்தியுள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சூடான் மற்றும் தெற்கு சூடானில் உள்ள அரசியல்வாதிகள் மனித மாண்பை வியக்கத்தக்க வகையில் மதிக்கத் தவறியதற்காக அதன் ஆயர்கள் அவர்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

சூடான் மற்றும் தெற்கு சூடான் ஆயர்கள் தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டம்  முடிவடைந்த நிலையில், இரு நாடுகளிலும் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளைத் தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேய்ப்புப்பணி சார் அறிக்கையொன்றில் இந்த அழைப்பை விடுத்துள்ள அதன் ஆயர்கள், குறிப்பாக, சூடானில், வடக்கு டார்பூரில் விரைவு ஆதரவுப் படைகளால் (RSF) நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் அட்டூழியங்கள் தீவிரமடைந்து வரும் வேளை, அங்கு மோசமடைந்து வரும் நிலைமைக் குறித்துத் தங்களின் பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தெற்கு சூடானில் மோசமடைந்து வரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமையையும், அம்மக்களின் பாதுகாப்புப் படைகள் (SSPDF) சம்பந்தப்பட்ட உள் பிளவுகள் மற்றும் மோதல்களையும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், அரசியல் மாற்றங்கள் நிலைதடுமாறும்போது இரு நாடுகளும் மேலும் மோதல்களின் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அமைதி மற்றும் மனித மாண்பை மதிப்பதற்கான அரசியல் விருப்பம் இல்லாததை விமர்சித்துள்ள ஆயர்கள், இருநாட்டின் தலைவர்கள் தங்கள் மக்களின் நல்லிணக்கம், ஒன்றிப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சூடான் மற்றும் தெற்கு சூடானில் மோசமான சூழ்நிலை நிலவிவரும் போதிலும், நேர்மையான உரையாடல் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என்ற தங்களின் நம்பிக்கையையும் அவ்வறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேநாளில், ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் அவர்கள், உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும் விரோதங்களை நிறுத்துமாறும் அழைப்பு விடுத்ததுடன், சூடான் மற்றும் தெற்கு சூடான் தலைவர்கள் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு ஒரு தீர்வை எட்டவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்..

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 நவம்பர் 2025, 12:09