துயரத்தின் பிடியில் டெல்லி குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் துயரத்தின் பிடியில் டெல்லி குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர்   (AFP or licensors)

டெல்லி குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு தலத்திருஅவைத் தலைவர்கள் இரங்கல்!

நவம்பர் 10-ஆம் தேதி இப்புதனன்று இந்திய தலைநகரின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 10-ஆம் தேதி இப்புதனன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததற்கு இந்தியத் தலத் திருஅவைத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

டெல்லியில் உள்ள கத்தோலிக்கத் தலத் திருஅவை இக்குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இறைவேண்டல் செய்தது என்றும், அருள்பணியாளர் சவரிமுத்து சங்கர் அவர்கள், அமைதிக்காகவும், இச்சம்பவத்திற்கு விரைவான தீர்வு காணவும் அழைப்பு விடுத்தார் என்றும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“திருஅவை எப்போதும் அமைதியையும், அனைத்து மதங்களுக்கிடையில் சகோதரத்துவத்தையும்  வளர்த்து வருகிறது, மேலும் அப்பாவி உயிர்கள் அர்த்தமற்ற வன்முறையில் இழக்கப்படக்கூடாது என நம்புகிறது" என்று அருள்பணியாளர் சவரிமுத்து கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

அத்துடன் இந்தியக் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ.சி. மைக்கேல் அவர்கள், சமூக நல்லிணக்கத்திற்காக அரசுடன் இணைந்து பணியாற்றுமாறு குடிமக்கள் சமூகத்தை வலியுறுத்தினார் என்றும் அச்செய்திக் குறிப்பு எடுத்துத்துக்காட்டியுள்ளது.  

நவம்பர் 10-ஆம் தேதி இப்புதனன்று, நெரிசலான பகுதியில் மாலை 6:52 மணியளவில் நடந்த இந்தக் குண்டுவெடிப்பில் 24 பேர் காயமடைந்தனர். இது CNG சிலிண்டரால் ஏற்பட்டதா அல்லது மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (IED) காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் இது பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இதன் காரணமாக தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 நவம்பர் 2025, 14:47