காங்கோ ஜனநாயகக் குடியரசில் பயங்கரவாதிகள் தாக்குதல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவுவில் தலத்திருஅவையால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனை ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டனர் என்றும், மகப்பேறு பிரிவில் இருந்த பெண்கள் உட்பட நோயாளர்கள் அனைவரும் இத்தாக்குதலில் பலியாயினர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
IS (Islamic State) எனப்படும் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதுடன், மருத்துவப் பொருட்களையும் கொள்ளையடித்துவிட்டு காட்டுக்குள் தப்பிச் சென்றனர் என்றும், இதுபோன்ற மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் அடிக்கடி நடப்பதாகவும், ஆனால் அவை மிகக் குறைந்த அளவே கவனத்தைப் பெறுகின்றன என்று மறைப்பணியாளர்கள் தெரிவித்தனர் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
இந்தத் தாக்குதல் காரணமாக, அங்குள்ள கிராமத்தினர் பலர் வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர் என்றும், புதிதாகப் பிறந்த பல குழந்தைகள் இத்தாக்குதலின்போது கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் கூறும் அச்செய்திக் குறிப்பு, இச்சூழலில் மருத்துவமனையை நடத்தும் அருள்சகோதரிகள் தற்போது உயிர் பிழைத்தவர்களுக்கு வெளியில் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் உரைக்கிறது.
திருத்தந்தை லியோ அவர்கள் உட்பட, தலத்திருஅவைத் தலைவர்கள் பலரும் இந்த வன்முறையைக் கண்டித்து, அனைத்துலக நடவடிக்கைக்கு வலியுறுத்தியுள்ள அதேவேளை, உள்ளூர் மறைப்பணியாளர்கள் இதனை உலகளாவிய சமூகத்தின் "வெட்கக்கேடான அமைதி" என்று விமர்சித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்