தேடுதல்

திமொத்தேயு, பாக்கீதின் வீழ்ச்சி திமொத்தேயு, பாக்கீதின் வீழ்ச்சி 

தடம் தந்த தகைமை : திமொத்தேயு, பாக்கீதின் வீழ்ச்சி

யூதர்களுக்கு ஒரு பாதுகாவலர் உண்டு என்றும், அவரால் விதிக்கப்பட்ட சட்டங்களை அவர்கள் பின்பற்றுவதால் அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்றும் அறிக்கையிட்டான் நிக்கானோர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திமொத்தேயு, பாக்கீது ஆகியோரின் படைகளோடு யூதர்கள் போராடியபோது அவர்களுள் இருபதாயிரத்திற்கும் மிகுதியானவர்களைக் கொன்று, அவர்களின் மிக உயர்ந்த கோட்டைகளுள் சிலவற்றைக் கைப்பற்றினார்கள். மிகுந்த கொள்ளைப் பொருள்களுள் ஒரு பாதியைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள்; மறு பாதியைப் போரில் துன்புறுத்தப்பட்டோர், ஆதரவற்றோர், கைம்பெண்கள், முதியோர் ஆகியோருக்குப் பகிர்ந்தளித்தார்கள். எதிரிகளின் படைக்கலங்களை ஒன்றுசேர்த்து மிகக் கவனத்துடன் அவை அனைத்தையும் போர்த்திறன் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சேமித்துவைத்தார்கள்; எஞ்சிய கொள்ளைப்பொருள்களை எருசலேமுக்குக் கொண்டுசென்றார்கள். திமொத்தேயுவின் படைத்தலைவனை அவர்கள் கொன்றார்கள். அவன் மிகக் கொடியவன்; யூதர்களைக் கடுமையாகத் துன்புறுத்தியவன். தங்கள் மூதாதையரின் நகரில் வெற்றிவிழாவை அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே தூய இடத்தின் கதவுகளைத் தீக்கிரையாக்கியிருந்தோரைச் சுட்டெரித்தார்கள். இவர்களுள், ஒரு சிறு வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்ட கல்லிஸ்தேனும் ஒருவன், இவ்வாறு இவன் தன் தீச்செயல்களுக்கு ஏற்ற தண்டனையை அடைந்தான்.

யூதர்களை விலைக்கு வாங்கும்படி ஆயிரம் வணிகர்களைக் கூட்டி வந்திருந்த மாபெரும் கயவனான நிக்கானோரை, இழிந்தவர்கள் என்று அவனால் கருதப்பட்டவர்கள் ஆண்டவரின் துணையோடு தோற்கடிக்க, அவன் தன் உயர்தர ஆடையைக் களைந்தெறிந்துவிட்டு, தப்பியோடும் அடிமைபோல் அந்தியோக்கியை அடையும்வரை நாட்டினூடே தனிமையில் ஓடினான். தன் சொந்தப் படையை அழித்ததுதான் அவன் கண்ட பெரும் வெற்றி!  எருசலேம் மக்களை அடிமைகளாக விற்று, அதன் வழியாகக் கிடைக்கும் தொகையைக் கொண்டு உரோமைகளுக்குத் திறை செலுத்துவதாக உறுதி கூறியிருந்த நிக்கானோர், யூதர்களுக்கு ஒரு பாதுகாவலர் உண்டு என்றும், அவரால் விதிக்கப்பட்ட சட்டங்களை அவர்கள் பின்பற்றுவதால் அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்றும் அறிக்கையிட்டான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 நவம்பர் 2025, 13:14