வங்கதேசத்தில் அமைதி ஊர்வலம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
வங்கதேசத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் அமைதியை வலியுறுத்தவும், அண்மைக் கால வன்முறையைக் கண்டிக்கவும் நவம்பர் 18, இச்செவ்வாயன்று, அதன் தலைநகர் டாக்காவில் அமைதிப் பேரணி மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளது.
டாக்காவின் துணை ஆயர் தியோடோனியஸ் கோம்ஸ் அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வு, அடிப்படைவாதத்தை நிராகரித்து, அனைத்துக் கலாச்சாரங்கள் மற்றும் மதங்களை மதிக்கும் ஓர் ஒருங்கிணைந்த நாட்டிற்காக அழைப்பு விடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
கத்தோலிக்கத் தளங்களான அன்னை மரியா பேராலயம் மற்றும் புனித வளனார் கல்லூரி அருகே அண்மையில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பின்னரே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது எனவும், இந்தக் குண்டுவெடிப்புகள் மக்களின் அச்சத்தை அதிகரித்திருந்தாலும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு, இந்தச் சம்பவங்கள் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் இதுகுறித்த செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
வங்கதேசத்தில் இஸ்லாமியக் கட்சிகள் தீவிர செல்வாக்குப் பெற்று வருவதுடன், தொடர்ந்து நடைபெறும் சட்ட வழக்குகளும், 2026-ஆம் ஆண்டில் வரவிருக்கும் தேர்தல்களுமே அங்கு அரசியல் சூழல் பதட்டமாகவே உள்ளதற்கான காரணம் எனவும், இந்தத் துன்பங்கள் மத்தியிலும், கிறிஸ்தவச் சமூகம் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்து, தொடர்ந்து அமைதியையும், தாராளமாக மற்றவர்களுக்கு உதவுவதையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்