மலேசியாவில் இடம்பெறும் எதிர்நோக்கின் திருப்பயணம் யூபிலி நிகழ்வு
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு நவம்பர் 27 முதல் 30 வரை மலேசியாவின் பினாங்கில் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற யூபிலி நிகழ்வை நடத்த உள்ளது என்றும், இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 800-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் என்றும் யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வத்திக்கானின் முயற்சியின் ஒரு பகுதியாக இடம்பெறும் இந்த நிகழ்வு, ஆசிய தலத்திருஅவையில், பணி, ஒன்றிணைந்த பயணம் மற்றும் உடன்பிறந்த உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வத்திக்கானும் தலத்திருஅவைகளின் மறைமாவட்டங்களும் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்தக் கூட்டத்தில் முக்கிய உரைகள், வழிபாடு, பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டு நற்செய்தி அறிவிப்பு, இளையோர் ஈடுபாடு, மேய்ப்புப் பணி விரிவாக்கம் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கிறது.
குறிப்பாக, பெண்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய விசுவாசிகளின் பங்கேற்புக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படுவதால், பல்வகை திறன்களைக் கொண்ட ஆசிய சமூகங்களில் திருஅவையின் பங்கு மேலும் வலியுறுத்தப்படும் எனவும் இச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசியாவில் நற்செய்தியை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இக்கூட்டத்தில் கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர்களின் தலைவர்கள் ஆழமாக சிந்திக்க இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் புதுப்பிக்கப்பட்ட சிந்தனைகளுடன் தங்கள் இல்லம் திரும்புவார்கள் என்றும் மேலும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
சிறப்பாக இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றுபவர்களில் அல்பானோவின் கர்தினால் ஆயரும், நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீடத் துறையின் தலைவருமான, லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களும் ஒருவர் என்றும் இவர் பிலிப்பீன்ஸ் நாட்டின் கர்தினால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற முதல் ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பு, ஆசிய மறைபணி பேராயக் கூட்டத்துடன் தொடங்கிய மரபை இந்தச் சந்திப்பு தொடர்கிறது எனவும், அக்கூட்டம் ஆசியக் கிறிஸ்தவர்களின் மறைபணி அடையாளத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது எனவும் இச்செய்தி நிறுவனம் எடுத்துக்காட்டுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்