துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மரியா துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மரியா 

அன்னை ஓர் அதிசயம் : துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மரியா!

பல்வேறு துன்ப முடிச்சுகளை அவிழ்த்து நாம் தேடும் பாதுகாப்பு, விடுதலை, மீட்பு, ஆறுதல், திடம், உடல் நலம், மனவலிமை போன்ற வரங்களை அன்னை மரியா இறைவனிடமிருந்து நமக்குப் பெற்றுத் தருகிறார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

1700-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட "மரியா துன்பம் என்னும் முடிச்சுகளை அவிழ்ப்பவர்” (Mary Untier of Knots/Undoer of Knots) ஓவியம், ஜெர்மனியின் பவேரியா பகுதியில் ஆக்ஸ்பர்க் நகரிலுள்ள புனித பீட்டர்ஆம் பெர்லாக் ஆலயத்தில் வணக்கத்துக்குரியதாக தோற்றமளிக்கிறது. 1985-ஆம் ஆண்டில் அருட்தந்தையாக விளங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் இத்தேவாலயத்திற்கு வருகை தந்த பின்னர், துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் மரியன்னை பக்தி, அவரின் சொந்த நாடான அர்ஜென்டினா உட்பட தென் அமெரிக்க நாடுகளில் வெகுவேகமாகப் பரவிற்று. 2001-ஆம் ஆண்டில் கர்தினாலாக நியமிக்கப்பட்ட அவர், 2005-ஆம் ஆண்டில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பொறுப்பேற்றபோது, துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னையின் திருவுருவப்படத்தை, திருப்பலியின் இரசக்கிண்ணத்தில் வடித்து பரிசாக அளித்தார்.

அன்னை தோற்றத்தின் ஆழ்ந்தபொருள்:

அன்னை மரியா விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே மாட்சியோடு காட்சியளிக்கிறார். தூய ஆவியார் புறா வடிவில் அன்னையின் மீது நிழலாடுகிறார். தூய ஆவியினால் கருவுற்ற இறைமகனை ஈன்றெடுத்த இறைவனின் தாய் என்னும் அருள் நிறைந்த நிலையை இக்காட்சி உணர்த்துகிறது. அன்னை அணிந்திருக்கும் ஆடைகள் அவரை இப்புவியின் அரசியாக சித்தரிக்கிறது. பன்னிரு திருத்தூதர்களுக்கும் தலைமைத் திருத்தூதர் தாமே என்பதன் அடையாளமாக தலையில் பன்னிரு விண்மீன்களை அடையாளமாகக் கொண்டிருக்கிறார். வானோர்களின் அரசி என்பதன் அடையாளமாக வானதூதர்கள் அவரைச் சூழ்ந்து நிற்கிறார்கள். பாம்பு வடிவில் இருக்கும் நெருக்கமான பல முடிச்சுகளை உடைய கயிறு ஒன்றை தமது கையில் வைத்திருக்கின்றார். வானதூதர் ஒருவர் சிக்கலான பல முடிச்சுகள் கொண்ட நமது வாழ்வை அன்னையிடம் ஒப்படைக்க, அதை மரியா தமது பொறுமை, முழுமையான அர்ப்பணிப்பின் மூலம் நம்வாழ்வின் சிக்கல்களை அவிழ்த்து, சிக்கல் இல்லாத மென்மையான கயிறாக மற்றொரு வானதூதரிடம் கையளிக்கின்றார். நிலவு வளையத்தின் மேல் அன்னை நிற்பது போலவும், அவரது காலின் கீழ் பாம்பின் தலை மிதிக்கப்படுவதாகவும் அமைந்துள்ள காட்சி அலகையின் மீதும், தீமைகள் மீதும் அன்னை அடைந்த வெற்றியை குறித்துக் காட்டுகிறது.

இக்கருத்தாக்கம் லியோன் நகரைச் சார்ந்த புனித இரேனியு எழுதிய "தப்பறைகளுக்கு எதிராக" என்ற அவரது குறிப்பேடுகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏவாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த வாழ்வின் முடிச்சுகள், மரியாவின் கீழ்ப்படிதலால் அவிழ்க்கப்பட்டன. ஏவாள் கொண்டிருந்த அவநம்பிக்கையால் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை, மரியாவின் நம்பிக்கையால் விடுவிக்கப்பட்டது.

ஓவியம் உருவான பின்னணி:

ஜெர்மனி நாட்டைச் சார்ந்த உல்ஃப் காங்லாங்கன் மண்டல் (1586-1637) சோபியா ரென்ட்ஸ் (1590-1649) தம்பதியருக்குள் ஏற்பட்ட பிணக்கு மணமுறிவுவரை போனநிலையில், மிகுந்த வருத்தத்துக்கு உள்ளான உல்ஃப் காங், இயேசு சபை குருவானவரும், மரியன்னைமீது ஆழ்ந்த பக்தி கொண்டவருமான ஜேக்கப்ரேம் என்பாரின் உதவியை நாடினார். இருவரும் சந்தித்தபோதெல்லாம் அன்னையிடம் இணைந்து செபித்தார்கள்.

1615-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதியன்று, இருவரும் இறுதியாகச் செபித்தார்கள். அன்றைய தினம் உல்ஃப் காங்-சோபியா தம்பதியர் திருமண நாளன்று மணமக்களின் கரங்களை இணைக்கவும், அவர்களின் திருமண ஒன்றிப்பை சுட்டிக் காட்டவும் பயன்படுத்திய முடிச்சுகள் நிறைந்த ரிப்பனை அருட்தந்தை ரேம் அன்னையின் திருவுருவத்திற்கு முன்பாக உயர்த்தி, செபித்த வண்ணம் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்தார். முடிச்சுகள் நீக்கப்பட்ட நிலையில் அந்த ரிப்பன் வெண்மையானது. அவர்களுடைய செபமும் கேட்கப்பட்டது. உல்ஃப் காங் தன் மனைவி சோபியாவுடன் திருமண வாழ்வில் மீண்டும் இணைந்தார். தம்பதியர் வாழ்வில் நிகழவிருந்த கசப்பான ஆபத்து மறைந்து போனது. சில ஆண்டுகள் கழித்து அவர்கள் பேரன் அம்புரோஸியஸ் குருவாக மாறினார். அவர் தம்முடைய தாத்தா-பாட்டி நினைவாக ஜெர்மனியில் ஆக்ஸ்பர்க் நகரில் இருந்த புனித பீட்டர் ஆம் பெர்லாக் ஆலயத்திற்கு ஒரு பீடம் உபயம் வழங்கினார். அப்பீடம் அன்னை மரியா தங்கள் குடும்பத்திற்கு செய்த அற்புதத்தை நினைவூட்ட வேண்டும் என்று விழைந்தார். உல்ஃப் காங்-சோபியா தம்பதியர் வாழ்வில் தந்தை ரேம் அவர்களின் துணையில், அன்னை மரியா நிகழ்த்திய அற்புதத்தை ஓவியமாக வரைவதற்கு யோகன் ஜார்ஜ் மெல்கியோர் ஸ்மித்னர் பணிக்கப்பட்டார். யோகன் ஜார்ஜ் கைவண்ணத்தில் உருவானதுதான் துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மரியா  ஓவியம். 1700-ஆம் ஆண்டில் இந்த ஓவியம் புனித பீட்டர் ஆம் பெர்லாக் ஆலயத்தில் நிறுவப்பட்டது.

பக்திமுயற்சி:

18-ஆம் நூற்றாண்டிலிருந்தே மரியா, துன்பமென்னும் முடிச்சுகளை அவிழ்ப்பவர் என்ற நம்பிக்கை மிகுந்த பக்தி முயற்சி மக்களிடையே பரவலாயிற்று. அர்ஜென்டினா, பிரேசில் போன்ற நாடுகளில் அன்னைக்கு பல ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. நவநாள் பக்தி முயற்சிகளும், திருப்பயணங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2013-ஆம் ஆண்டு மே 31 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் தோட்டத்தில் துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னையின் ஓவியத் தோற்றத்திற்கு முடி சூட்டினார்.

திருமண வாழ்வில் ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்களை, துன்ப முடிச்சுகளை அன்னையிடம் ஒப்படைத்து அவற்றை அவிழ்க்கவும், அதன் வழியாக குடும்ப வாழ்வில் அமைதியும் ஒற்றுமையும் பெருகவும் வரம் வேண்டி தம்பதியர் மன்றாடுகிறார்கள். சோதனைகள், வேதனைகள், பாவங்கள், இடர்கள், வியாகுலங்கள், பயங்கள், பலவீனங்கள் போன்ற பல்வேறு துன்ப முடிச்சுகளை அவிழ்த்து நாம் தேடும் பாதுகாப்பு, விடுதலை, மீட்பு, ஆறுதல், திடம், உடல் நலம், மனவலிமை போன்ற வரங்களை அன்னை மரியா இறைவனிடமிருந்து பெற்றுத் தருகிறார் என்பது உறுதி.

ஆசியாவின் முதல் ஆலயம்:

செங்கல்பட்டு மறைமாவட்டம், தாழம்பூர் இறைமக்கள் தங்கள் பகுதியில் ஒரு தேவாலயம் எழுப்பப்பட இடம் வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, ஊர்ப் பஞ்சாயத்து தலைவர் திரு. தேவசித்தம் அவர்கள், ஆலயம் அமைத்திட சிறிய நிலம் வழங்கினார். அருட்தந்தை ஜார்ஜ் விக்டர் அவர்களின் முயற்சியால் தாழம்பூரில் துன்பமுடிச்சுகள் அவிழ்க்கும் அன்னைக்கு ஆலயம் எழுப்பப்பட்டு, 13.07.2014 அன்று செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு. நீதிநாதன் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஆசியா கண்டத்திலேயே துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னைக்கு தாழம்பூரில்தான் முதல் ஆலயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2018 முதல் 2023 ஆண்டு வரை  அருட்தந்தை செல்வம் பெல்லார்மின் அவர்கள் அவ்வாலயத்தை சிறப்பாக உருவாக்கினார்.

மன்றாட்டு

கன்னிமரியே அழகு அன்புத் தாயே! மன்றாடும் குழந்தையை ஒருபோதும் புறக்கணியாத அன்னையே! உமது திரு இதயத்திலிருந்து பெருக்கெடுத்து வழியும் அன்பினாலும் முடிவில்லாத இரக்கத்தினாலும் குழந்தைகள் எமக்காய் அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட திருவே! உமது கருணைப் பார்வையை எம்மீது திருப்பி எமது வாழ்வைத் திணறவைக்கும் முடிச்சுகளை கண்ணோக்கியருளும் எமது துன்பம் வலி செயலிழக்கச் செய்யும் துன்பமுடிச்சுக்கள் அனைத்தையும் நீர் அறிவீர். எங்கள் வாழ்க்கை என்னும் நூலில் விழும் முடிச்சுகளை அவிழ்க்க கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்ற தாயே உமது திருக்கரங்களில் எமது வாழ்வை ஒப்படைக்கின்றோம். உமது இரக்கப் பெருக்கை ஒரு போதும் ஒருவரும் நிறுத்த முடியாதென்றும் உம்மால் அவிழ்க்க முடியாத முடிச்சு உலகில் ஒன்றுமில்லை என்றும் நம்புகின்றோம்.

வல்லமையின் தாயே ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசும் உமது பலத்தினால் எம்மை வாட்டி வதைக்கும் இந்தச் சிக்கலான முடிச்சுகளை உமது தூய திருக்கரங்களில் பெற்றுக் கொள்ளும். தந்தையாம் கடவுளின் உன்னத மகிமை வெளிப்படும்படி எமது துன்ப முடிச்சுகளை இப்போதும் என்றென்றைக்கும் அவிழ்த்துப்போடும். எமக்கு ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்டவர் நீர். எமது பலவீனத்தில் எமது வலிமை நீரே. உம் திருமகன் இயேசுவிடமிருந்து என்னைப் பிரிக்கும் சக்திகளை அழிப்பவரும் நீரே. அம்மா எமக்குப் பதில் தாரும்.  எம்மைப் பாதுகாத்தருளும். எம்மை வழி நடத்திக் காப்பாற்றும் ஏனெனில் நீரே என் உறுதியான அடைக்கலம் உம்மீது என் நம்பிக்கையை வைக்கின்றேன் – ஆமென். (நன்றி : இணையதள கட்டுரை)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 நவம்பர் 2025, 15:52