அன்னை ஓர் அதிசயம் – இயேசு சபையினரின் வழித்துணை மாதா
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அன்புக்குரியவர்களே, ஆண்டவராம் கடவுள் நமக்கு அருளிய மிகப்பெரும் கொடை எதுவெனில் அது நம் அன்னை கன்னி மரியாதான். கடவுளின் மீட்புத் திட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட அன்னை, மனித குலத்தை காப்பாற்றி இறைவனிடம் சேர்க்கும் பணியை அவர் இன்றும் ஆற்றி வருகின்றார் என்றால் அது மிகையாகாது. நாம் வழிமாறி அலகையின் பக்கம் சென்று விடாமல் அவர் நம்மை பாதுகாத்து வழிநடத்துகிறார். குறிப்பாக ஒரு வழித்துணை அன்னையாக அனைத்து ஆபத்துகளில் இருந்தும் அவர் நாளும் நம்மைக் காப்பாற்றி நடத்திச் செல்கின்றார். அவ்விதத்தில் இன்றைய நாள் அன்னை ஓர் அதிசயம் நிகழ்ச்சியில் இயேசு சபையினரின் வழித்துணை மாதா கோவில் குறித்துச் சிந்திப்போம்.
இத்தாலி மொழியில் "மடோனா டெல்லா ஸ்ட்ராடா" என்று அழைக்கப்படும். சாலையோர மாதாவின்மீது இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இக்கோவில் இயேசு சபையின் முதல் கோவில். இவ்வாலயத்தை மையமாக வைத்தே புனித இஞ்ஞாசியாரும், அவர் தம் தோழர்களும் தங்களது ஆன்மீக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாலயத்தில் மன்றாடிவிட்டு சென்றபோது செய்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிப்பெற்றன. இதனால் இந்தச் சிற்றாலயம் இன்று வரை தனிச்சிறப்பு பெற்று வருகின்றது.
கி.பி. 1538-ஆம் ஆண்டின் இறுதியில் புனித இனிகோ தம் தோழர்களுடன் இந்தக் கோவிலுக்கு அருகில் கிடைத்த ஒரு வீட்டில் தங்கிருந்து தமது பணிகளில் ஈடுபட்டார். இந்தக் கோவிலில் ஆலயத்தில் அடிக்கடி திருப்பலி நிறைவேற்றுவது, மறையுரை ஆற்றுவது, ஒப்புரவு அருட்சாதனம் அளிப்பது, மறைக்கல்வி போதிப்பது என பல பணிகள் இவர்களின் முதன்மை பணிகளாக அமைந்தன. அக்கோவிலில் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் கொடாசியோவுக்கு (Peter Codasio) இயேசு சபையினர் ஆற்றிய நற்பணிகள் மிகவும் பிடித்திருந்தன . அப்போது 1538-ஆ,ம் ஆண்டு டிசம்பர் முதல் 1539-ஆம் ஆண்டு மே வரை உரோமையிலும், சுற்றுவட்டாரங்களிலும் கடுங்குளிரும், உணவுப்பற்றாக்குறையும் மக்களை வாட்டி வதைத்தது. புனித இனிகோ தம் சகோதரர்களுடன் 3000 மக்களின் துயர்நீக்கி, உணவும், உடையும் கொடுத்து வந்தார். அவர்களின் இப்பணிகள் பங்குத் தந்தை பீட்டர் கொடாசியோவின் நெஞ்சை நெகிழ வைத்தது. அவர்களின் தொண்டால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனால் அச்சபையில் சேரவிரும்பி, ஒருமாத தியானத்தில் ஈடுபட்டு, இறுதியில் 1539-ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். இவர்தான் இயேசு சபையில் இணைந்த முதல் இத்தாலியர் ஆவார். அதன்பின் இவர் வழியாக சட்டரீதியாக சாலையோர மாதா ஆலயம் இயேசு சபைக்குக் கிடைத்தது.
இந்தக் கோவில் மிகவும் சிறியதாகவும், குறுகலாகவும் இருந்ததால் பல மக்கள், பல ஆண்டுகளாக, அக்கோவிலின் வெளியே நின்றவாறே திருப்பலியில் பங்குக்கொண்டனர். இதனால் இயேசு சபையினர் அனைவரின் உழைப்பால் இவ்வாலயத்தின் முன்னால் திருப்பலிக்கென்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் இயேசு சபையினர், தங்குவதற்கும், பணிபுரிவதற்கும் வசதியாக தந்தை பீட்டர் தம் தந்தையின் சொத்துக்களை விற்றுப்பெரிய வீடு ஒன்றை அமைத்து கொடுத்தார். அச்சமயத்தில் இயேசு சபையில் இறந்தவர்கள் இவ்வாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். புனித பீட்டர், இவரின் தந்தை கொடாசியோ, புனித இனிகோ அனைவரும் இவ்வாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். இவர்களின் இறப்பிற்கு பின் 1565-ல் பிரான்சிஸ் போர்ஜியா (Francis Borgiya) என்பவர் இயேசு சபையின் மூன்றாவது தலைவராகப் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஜேசு(Gesu) என்ற பெயரில் பேராலயம் ஒன்று கட்டுவதற்காக முன்னிருந்த சிற்றாலயத்தை இடித்துவிட்டு, இன்று ஜேசு என்றழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டினார். இக்கோவில் உரோம் நகரில் உள்ள கோவில்களில் மிகவும் அழகும் கலைநயம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது. இன்றுவரை உலகின் எப்பகுதியிலிருந்தும் இயேசு சபை அருள்பணியாளர்கள் உரோமை நகர் வந்தாலும் இக்கோவிலில், சிற்றாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா உருவத்தின் முன், திருப்பலி நிறைவேற்றுவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.
தேனி வழித்துணை மாதா கோவில்
அன்பர்களே நமது தமிழகத்தின் தேனி மாவட்டத்திலும் வழித்துணை மாதா கோவில் ஒன்று இருப்பதாக இணையத்தில் படித்தேன் அதுகுறித்தும் நாம் அறிந்துகொள்வோம். தேனி லோயர் கேம்ப் முதல் குமுளி செல்லும் மலைச்சாலையின் கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள வழித்துணை மாதா கோயில் இரண்டு பெரிய விபத்துகளை தடுத்ததன் நினைவாக உருவாகியது எனவும், இன்றளவும் மலைப்பகுதியில் ஏற்படுகின்ற விபத்துகளை தடுக்கக்கூடிய ஆலயமாக வழித்துணை மாத ஆலயம் உள்ளதாக பாதிரியார்கள் தெரிவித்து வருகின்றனர்
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு செல்வதற்கு குமுளி மலைப்பாதையை பெரும்பாலானோர் பயன்படுத்துவர். லோயர் கேம்பில் இருந்து ஏறத்தாழ 8 கிலோமீட்டர் மலைப்பாதை வழியாக செல்லும் பொழுது கேரள மாநிலம் குமுளியை சென்றடையலாம்.
வழித்துணை மாதா ஆலயம்
தமிழக பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் குமுளி வழியாக கேரளா மாநிலத்தை சென்றடைகின்றன. 8 கிலோமீட்டர் மலைப்பாதை பல்வேறு வளைவுகளையும், ஆபத்தான பள்ளங்கள் நிறைந்த பாதையைக் கொண்டுள்ளதால் உள்ளதால் வாகனங்களில் குமுளி மலை பாதை வழியாகச் செல்வோர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக வழிவிடும் முருகன் கோயில், வழித்துணை மாதா ஆலயம், வன காளியம்மன் கோயில் என மூன்று கோயில்கள் மலைப்பாதையில் அமைந்துள்ளன. இதில் லோயர் கேம்பில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வழி விடும் முருகன் கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயில் இருந்து அடுத்து வரக்கூடிய முதல் கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ளது வழித்துணை மாதா கோவில். இதன் வரலாறு மிகவும் சுவையானது. அதன்படி, முல்லைப் பெரியாறு அணை கட்டும் பொழுது தமிழக பகுதியில் இருந்து ஏராளமான வேலை ஆட்கள் அணை கட்டுமான பணிகளுக்குச் சென்றனர். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிலிலிருந்து ஏராளமானோர் சென்றனர். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து முல்லைப் பெரியாறு அணை கட்டுமான பணிகளுக்காக வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மலைப்பாதை வழியாக செல்லும் பொழுது மலை பாதையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கொண்டை ஊசி வளைவில் ஒரு சிலுவயை நட்டு வழிப்படத் தொடங்கியுள்ளனர்.
உயிர் சேதம் தடுப்பு
பின்னால் நாள் போக்கில் குமுளி மலைப்பாதை வண்டி பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பின் இரண்டு பெரிய விபத்துகளை வழித்துணை மாதா ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் இருந்த பெரிய மரம் தடுத்ததாகக் கூறப்படுகிறது. பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்று கொண்டை ஊசி வளைவில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி நின்றதாகவும் இதன் காரணமாக பல்வேறு உயிர் சேதம் ஏற்பட வேண்டியது தவிர்க்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
அதே பகுதியில் மற்றொரு வேன் விபத்துக்குள்ளாகும் பொழுது அதில் இருந்த பொதுமக்கள் அனைவரும் எந்த உயிர் சேதம் இன்றி உயிர் பிழைத்ததன் நினைவாக கொண்டை ஊசி வளைவில் மரத்திற்கு அடியில் உள்ள சிலுவையை மக்கள் வழித்துணை மாதாவாக வழிபடத் தொடங்கி உள்ளனர். அன்று முதல் இது வழித்துணை மாதா கோவிலாக உருவெடுத்துள்ளது.
பராமரிப்பு பணிகள்
கொண்டை ஊசி வளைவில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து வழித்துணை மாதாவை வழிபட வேண்டி வழித்துணை மாத கோவிலின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அக்கோவிலுக்கு விளக்குகள் மேற்கூரைகள் அமைத்துக் கொடுத்துள்ளனர். அன்று முதல் குமுளி மலைப்பாதை வழியாக செல்வோர் தங்களின் பாதுகாப்பு பயணத்திற்காக வழித்துணை மாதாவை வணங்கி செல்கின்றனர். இந்தக் கோவிலில் ஒவ்வொரு வாரமும் வழிபாடு நடைபெறுகிறது எனவும் புனித வெள்ளி, உயிர்ப்பு ஞாயிறு போன்ற சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன என்றும் கூறப்படுகிறது.
இன்றைக்கும் தமிழக பகுதியில் இருந்து குமிளி மலை பாதை வழியாக கேரள மாநிலத்திற்குச் செல்வோர் சாதி, மத வேறுபாடிகள் இன்றி வழித்துணை மாதாவை வழிபட்டு செல்கின்றனர். நாள்தோறும் தமிழகப் பகுதியில் இருந்து கேரளாவில் ஏலத்தோட்ட வேலைக்குச் செல்லும் பெண்கள், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் உட்பட பலரும் இந்தக் கோவிலில் உள்ள வழித் துணை மாதாவை வணங்கி செல்கின்றனர்.
பேருந்தில் இப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் வழித்துணை மாதா கோவிலைக் கடக்கும் பொழுது தங்களிடம் இருக்கும் சில்லறை காசுகளை மாதா ஆலயத்தில் வீசுவதும் வாடிக்கையாக தான் உள்ளது. (நன்றி : இணையதளம்)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்