நைஜீரியாவில் நடந்த கடத்தல் சம்பவம் பணம் பார்ப்பதற்காகவே!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நைஜீரியாவில், நவம்பர் 21, வெள்ளியன்று, பாபிரி சமூகத்தில் உள்ள புனித மரியன்னை கத்தோலிக்கப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, 239 குழந்தைகள் உட்பட 265 பேர் இன்னும் கடத்தல்காரர்களின் கைகளில் உள்ளனர் என்று கூறியுள்ளது பீதேஸ் எனப்படும் செய்தி நிறுவனம்.
இந்நிலையில் நவம்பர் 21 மற்றும் 22-ஆம் தேதிக்கு இடையில் 50 குழந்தைகள் தப்பித்து தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைந்ததாக கோன்டகோரா மறைமாவட்டம் தெரிவித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
இந்தப் பள்ளியில் மொத்தம் 629 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர் என்றும், அவர்களில் 315 பேர் இந்தத் தாக்குதலின் போது பிடிபட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் உரைக்கிறது அச்செய்தி.
இதுகுறித்து பீதேஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய கோண்டகோரா மறைமாவட்டத்தின் ஆயர் புலுஸ் டவுவா யோஹன்னா அவர்கள், "தாங்கள் பிடித்து வைத்துள்ள குழந்தைகளை விடுவிப்பதற்காகப் பிணைத்தொகை கோருவதன் மூலம் கடத்தல்காரர்கள் சட்டவிரோத இலாபம் தேடும் குற்றவாளிகள் என்பது ஏறக்குறைய உறுதியாகத் தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள பிணையக்கைதிகள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக மறைமாவட்டம் பாதுகாப்புப் படையினருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்றும், மேலும் இத்துயரமான சூழலில், பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், கடத்தப்பட்டவர்களை மீண்டும் வீட்டிற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து ஆதரிக்கவும் மறைமாவட்டம் வலியுறுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்