தடம் தந்த தகைமை - திருக்காட்சியாளர் அனானியும் ஆசாவின் இறப்பும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அக்காலத்தில் திருக்காட்சியாளர் அனானி, யூதா அரசனான ஆசாவிடம் வந்து அவனிடம், “உன் கடவுளாகிய ஆண்டவரை நீ நம்பாமல் சிரியா மன்னனை நம்பியதால், அவனது படை உனது கையினின்று நழுவிப்போயிற்று. எத்தியோப்பிருக்கும் லிபியருக்கும் மிகுதியான தேர்களும் குதிரை வீரர்களும் கொண்ட பெரும் படை இருக்கவில்லையா? அப்படியிருந்தும், நீ ஆண்டவர்மேல் நம்பிக்கை கொண்டிருந்ததால், அவர் அவர்களை உனது கையில் ஒப்படைத்தார். உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றன. அவர் தம்மை முழு மனத்துடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல் அளிக்கிறார். நீயோ இதன் மட்டில் மதியீனமாய் நடந்துகொண்டாய்; எனவே, இன்றுமுதல் நீ போர்களைச் சந்திக்க வேண்டும்” என்றார். இதைக் கேட்ட ஆசா, திருக்காட்சியாளர்மேல் கடும் சினமுற்றான். அவன் எவ்வளவு எரிச்சலுற்றான் எனில், அவரைச் சிறையிலிட்டதோடு, மக்களுள் சிலரையும் கொடுமைப்படுத்தினான்.
ஆசாவின் செயல்கள், தொடக்க முதல் இறுதிவரை, யூதா இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. தன் ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் ஆசாவுக்குப் பாதங்களில் ஒரு கொடிய நோய் ஏற்பட்டது. ஆனாலும், அவன் ஆண்டவரை நாடாது, மருத்துவர்களையே நம்பினான். அவன் தன் ஆட்சியின் நாற்பத்தோராம் ஆண்டில் இறந்து, தன் மூதாதையரோடு துயில் கொண்டான். திறன்மிக்கோர் தயாரித்த நறுமணப் பொருள்கள், மூலிகைகள், தைலங்கள், செறிந்த பாடையின் மேல் அவனது சடலத்தைக்கிடத்தி, தாவீதின் நகரில் ஆசா தனக்கென வெட்டிய கல்லறையில் அடக்கம் செய்தனர். மேலும், அவனுக்கு அஞ்சலியாக மாபெரும் நெருப்பு வளர்த்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்