தேடுதல்

மீக்காயா, மீக்காயா,  

தடம் தந்த தகைமை – மீக்காவை சிறைபிடித்த இஸ்ரயேல் அரசன்

இதோ இறைவாக்கினர் இவர்களின் வாயில் ஆண்டவர் பொய்யுரைக்கும் ஆவியை இட்டுள்ளார். உண்மையில் ஆண்டவர் உனக்குத் தீங்கானவற்றையே கூறியுள்ளார்” என்றார் மீக்காயா.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மீக்காயா, “ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் தம் அரியணைமேல் வீற்றிருப்பதையும் விண்ணகப்படையெல்லாம் அவர்தம் வலப்புறமும் இடப்புறமும் நிற்பதையும் கண்டேன் என்றார். அந்நேரத்தில் ஆண்டவர், ‘இஸ்ரயேலின் அரசனான ஆகாபு இராமோத்து-கிலயாதிற்குச் சென்று அங்கே வீழ்ச்சியடையும்படி அவனை வஞ்சிக்கப்போகிறவன் யார்?’ என்று கேட்க, அதற்கு ஒருவன் ஒன்றைச் சொல்ல, மற்றொருவன் வேறொன்றைச் சொன்னான். அப்பொழுது ஒர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து, ‘நானே போய் அவனை வஞ்சிப்பேன்’ என்றது. ‘எவ்வாறு?’ என்று ஆண்டவர் அதைக் கேட்டார். அந்த ஆவி, ‘நான் போய் அவனுடைய இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் பொய்யுரைக்கும் ஆவியாக இருப்பேன்’ என்றது. அதற்கு ஆண்டவர் ‘நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அவ்வாறே செய்’ என்றார். எனவே, இதோ இறைவாக்கினர் இவர்களின் வாயில் ஆண்டவர் பொய்யுரைக்கும் ஆவியை இட்டுள்ளார். உண்மையில் ஆண்டவர் உனக்குத் தீங்கானவற்றையே கூறியுள்ளார்” என்றார்.

அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா மீக்காயாவின் அருகில் வந்து, அவரது கன்னத்தில் அறைந்து, “ஆண்டவரின் ஆவி என்னைவிட்டு எவ்வழியாகச் சென்று உன்னிடம் பேசிற்று என்று சொல்” என்றான். அதற்கு மீக்காயா, “நீ உள்ளறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளில் தெரிந்து கொள்வாய்” என்றார். அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் இவ்வாறு கட்டளையிட்டான்: “மீக்காயாவைப் பிடித்து, அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும், அரசன் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள். அவர்களிடம் ‘நலமாய் நான் திரும்பும்வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள்; இவனுக்குச் சிறிதளவே அப்பமும் தண்ணீரும் கொடுத்து வாருங்கள்’ என்று கூறுங்கள்” அதற்கு மீக்காயா, “நலமாய் நீ திரும்பி வந்தால், ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே, இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 அக்டோபர் 2025, 09:20