தடம் தந்த தகைமை – இஸ்ரயேலின் அரசரான ஆகாபின் அழிவு
மெரினா ராஜ் – வத்திக்கான்
இஸ்ரயேலின் அரசனும் யூதாவின் அரசர் யோசபாத்தும் இராமோத்து- கிலயாதின்மீது படையெடுத்துச் சென்றனர். இஸ்ரயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, “நான் மாறுவேடத்தில் போருக்குச் செல்வேன்; நீரோ உம் அரச உடைகளை அணிந்து வாரும்” என்று சொல்லிவிட்டு, மாறு வேடத்தில் போருக்குச் சென்றான். சிரியா மன்னன் தன் தேர்ப்படைத் தலைவர்களை நோக்கி. “நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் போர் புரியாமல், இஸ்ரயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்” என்று கட்டளையிட்டிருந்தான். ஆதலால், தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், “இவன்தான் இஸ்ரயேலின் அரசன்!” என்று அவனோடு போரிடும்படி அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அப்பொழுது யோசபாத்து ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட, அவரும் அவருக்குத் துணையாக வந்து, எதிரிகள் அவனைவிட்டு விலகும்படி செய்தார். தேர்ப்படைத்தலைவர்கள், இவன் இஸ்ரயேலின் அரசன் இல்லையென்று கண்டு, அவனைத் துரத்தாமல் அகன்று போனார்கள். ஆனால், ஒரு மனிதன் தனது வில்லை நாணேற்றி குறி வைக்காமல் அம்பெய்தான். அது இஸ்ரயேல் அரசன் கவசத்தின் இடைவெளியே பாய்ந்தது. ஆகாபு தன் தேரோட்டியிடம், “நான் காயமடைந்துள்ளேன், ஆதலால், நீ தேரைத் திருப்பி என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ” என்றான். அந்நாள் முழுவதும் கடும் போர் நடந்தது. இஸ்ரயேலின் அரசன் சிரியருக்கு எதிராகத் தன் தேரிலேயே நின்றுகொண்டு மாலைவரை போரிட்டான்; கதிரவன் மறையும் வேளையில் உயிர்விட்டான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்