ஓரங்கட்டப்பட்ட மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தும் அருள்சகோதரிகள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இந்தியாவில் ஓரங்கட்டப்பட்ட விளிம்புநிலை ஏழைகள், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக அருள்சகோதரிகள் தங்களது வாழ்வை அர்ப்பணித்து பணியாற்றி வருவதாகவும், கல்வி வாயிலாக தனிநபர் கடத்தலில் இருந்து அவர்களை மீட்டு மறுவாழ்வளித்து, நம்பிக்கையில் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார் அருள்சகோதரி பென்சி மரிய சங்கீதம்.
1877-ஆம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட மரியாயின் பிரான்சிஸ்குவின் மறைபரப்புப் பணி சபையானது, சபையின் நிறுனவரான அருளாளர் பாடுகளின் மரித்தாயாரைப் பின்பற்றி எதிர்நோக்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் குணமளித்தலின் கருவியாக மக்களுக்கு பணியாற்றி வருகின்றது என்று அச்சபையின் அருள்சகோதரி சுஜிதா சுடர்விழி அவர்களிடம் வத்திக்கான் செய்திகளுக்கு தங்களது மறைப்பணி பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தபோது கூறினார் அருள்சகோதரி பென்சி மரிய சங்கீதம்.
உலகம் முழுவதும் 71 நாடுகளில் ஏறக்குறைய 5,000 அருள்சகோதரிகளைக் கொண்ட மரியாயின் பிரான்சிஸ்குவின் மறைபரப்புப் பணி சபையானது, உலகம் முழுவதும் கல்வி, நலவாழ்வு, சமூக நீதி மற்றும் மேய்ப்புப் பராமரிப்புப் பணியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வருகின்றது.
FMM சகோதரிகள் பணியாற்றும் இந்தியாவின் நான்கு மறைமாநிலங்களில் ஒன்றான புனித பிரான்சிஸ் மறைமாநிலமானது எட்டு வட இந்திய மாநிலங்களான டெல்லி, ஜம்மு & காஷ்மீர், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது என்றும், இப்பகுதிகளில் பல்வேறு கலாச்சார, மொழியியல் மற்றும் சமூக சவால்களை அருள்சகோதரிகள் தங்களது பணியில் எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்தார் டெல்லி மறைமாநிலத்தை சார்ந்த அருள்சகோதரி பென்சி.
ஒவ்வொரு பகுதியும் அப்பகுதியின் தனித்துவமான சவால்களைக் கொண்டுள்ள நிலையில், இந்த வேறுபாடுகளுக்கு பதிலளிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், பல மறைப்பணி செயல்பாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்த அருள்சகோதரி பென்சி அவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் ஏழைகள், குறிப்பாக குரலற்றவர்களுக்கான குரலாக இருந்து வருவதாகவும் எடுத்துரைத்தார்.
தங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அருள்சகோதரிகள் மாறுகிறார்கள் என்றும், வெளியாள்களைப் போலல்லாது, மக்களின் நம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் கனவுகளின் ஒரு பகுதியாகவும், நற்செய்தியின் நம்பகமான மற்றும் இறைவாக்குரைக்கும் சான்றுகளாக மாறுகின்றார்கள் என்றும் கூறினார் அருள்சகோதரி பென்சி மரிய சங்கீதம்.
திரிலோக்புரி நகரில், திஷா கேந்திரா வெளிப்புறச் செயல்பாடு திட்டத்தை அருள்சகோதரிகள் செயல்படுத்தியுள்ளனர் என்றும், இதன் வழியாக சுற்றியுள்ள குடிசைப்பகுதிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குகிறார்கள் என்றும் தெரிவித்தார் அருள்சகோதரி பென்சி.
இத்திட்டத்தின் வழியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பல வழிகளில் பயனடைகின்றார்கள் என்றும், இன்றைய உலகில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அவர்களுக்கு இத்திட்டம் வாய்ப்பளித்துள்ளது என்றும் எடுத்துரைத்தார் சகோதரி பென்சி.
ஆங்கில மொழிக் கல்வி சிறப்பு வகுப்புக்கள், தையல் பயிற்சிகள், கணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், நலவாழ்வுப் பராமரிப்புக்கான மருத்துவ முகாம்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மனித கடத்தலைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு திட்டங்களை நடத்தி வருவதாகவும் எடுத்துரைத்தார் அருள்சகோதரி பென்சி.
பறவைகள் நம்பிக்கையுடனும் எதிர்நோக்குடனும் தங்கள் கூடுகளைக் கட்டத் தொடங்குவது போல, இதயங்களில் தன்னம்பிக்கையுடனும் கடவுள் நம்பிக்கையுடனும் இத்திட்டத்தை தொடங்கியுள்ளதாகவும், தங்கள் அடித்தளமும் பலமுமானக் கடவுளே, இப்பணியை ஆதரிக்க இதயங்களையும் கைகளையும் நிலைநிறுத்துவார் என்று நம்புவதாகவும் கூறினார் அருள்சகோதரி பென்சி.
தங்களது ஒவ்வொரு இரக்கச் செயலின் வழியாக கிறிஸ்துவின் அன்பு உலகில் உயிருடனும் சுறுசுறுப்பாகவும் உள்ளது என்பதை அருள்சகோதரிகள் நினைவூட்டுகிறார்கள் என்றும், அவர்களுடைய அன்பின் வெளிப்பாடானது மறக்கப்பட்டவர்களை உயர்த்துகிறது, அநீதியான அமைப்புகளை எதிர்கொள்ள மற்றவர்களுக்கு துணிவையும், கிறிஸ்துவை அங்கீகரிக்கும் நம்பிக்கையையும் அளிக்கிறது என்றும் கூறினார் அருள்சகோதரி பென்சி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்