தடம் தந்த தகைமை : அரசர் நெபுகத்னேசர் குறித்து தானியேல் விளக்கிக்கூறல்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அந்நாள்களில் அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: “உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்; உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன். அரசரே! உன்னதரான கடவுள் உம் தந்தையாகிய நெபுகத்னேசருக்குப் பேரரசையும் சிறப்பையும் மேன்மையையும் மாண்பையும் அளித்தார். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பின் காரணமாய் எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவருக்கு அஞ்சி நடுங்கினர்.
அவர் தம் விருப்பப்படி யாரையும் கொன்றுவிடுவார்; தம் விருப்பப்படி யாரையும் வாழவிடுவார். தம் விருப்பப்படியே யாரையும் உயர்த்துவார்; தம் விருப்பப்படியே யாரையும் தாழ்த்துவார். ஆனால் அவருடைய உள்ளம் இறுமாப்புற்று, அவருடைய மனம் செருக்கினால் கடினப்பட்டது. உடனே அவர் அரசின் அரியணையிலிருந்து தள்ளப்பட்டார்; அவரிடமிருந்து அவரது மேன்மை பறிக்கப்பட்டது. மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார். மேலும் அவரது உள்ளம் விலங்குகளின் மனமாக மாற்றப்படவே, அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்துவந்தார். மனிதர்களின் அரசுகளை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அவற்றை வழங்குகின்றார் என்றும் உணரும்வரை, அவர் மாடுபோல் புல்லை மேய்ந்தார்; அவரது உடல் வானத்துப் பனியில் நனைந்து கிடந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்