இறைவேண்டலில் ஈடுபட்டுள்ள இந்தியக் கிறிஸ்தவர் இறைவேண்டலில் ஈடுபட்டுள்ள இந்தியக் கிறிஸ்தவர்  (AFP or licensors)

கோவா முதல்வருக்கு எதிராகக் குரல் எழுப்பும் எதிர்க்கட்சியினர்!

இந்தியாவின் சிறிய கடலோர மாநிலமான கோவாவில் வாழும் 14 இலட்சம் மக்களில் ஏறத்தாழ 25 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள். அவர்கள் இன்றுவரை மத நல்லிணக்கத்துடன் வாழ்வதாகக் கூறுகின்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கோவாவின் முதலமைச்சர் பிரமோத் சாவாந்த், "கட்டாய மதமாற்றம்" மற்றும் "லவ் ஜிஹாத்" இரண்டையும் தடுக்கும் விதத்தில் ஒரு சட்டத்தை முன்மொழிந்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியினர் அவரின் இந்தச் செயலுக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர்.

உத்தரபிரதேசம் போன்ற பல பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளதைப் போலவே, இங்கும் மதமாற்றத் தடைச் சட்டத்திற்கான அவரது அழைப்பு, எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது என்றும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கோவாவில் இதுபோன்ற மதமாற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், இந்தப் பிரச்சனை கோவாவின் மதச்சார்பற்ற அடையாளத்தையும் தனித்துவமான போர்த்துகீசிய கால குடியுரிமை சட்டத்தையும் அச்சுறுத்துவதாக உள்ளது என்றும் எதிர்க்கட்சியினர் குறைகூறி உள்ளனர்.

கோவாவின் மத நல்லிணக்க வரலாற்றையும் அதன் கணிசமான கத்தோலிக்க மக்களையும் எடுத்துக்காட்டி அவரின் குற்றச்சாட்டிற்கான தரவுகளை வழங்குமாறும் முதலமைச்சர் சாவாந்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சவால் விடுத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் கட்டாய மதமாற்ற மோசடியை நடத்தியதாகக் கூறப்படும் ஒரு பெண் கைது செய்யப்பட்ட அண்மைய வழக்குடன் இந்த விவாதம் தொடர்புடையது என்று இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்து சார்பு பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் சாவாந்த் அவர்கள், “இது ஒருமித்த மதமாற்றத் திருமணங்களை அல்ல, கட்டாய மதமாற்றங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறி, சட்டமியற்றுபவர்கள் இந்தச் சட்டத்தை ஆதரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

1961-ஆம் ஆண்டு வரை, 450 ஆண்டுகளாக லிஸ்பனால் (போர்த்துக்கீசிய தலைநகர்) நிர்வகிக்கப்படும் போர்த்துகீசிய காலனியாக கோவா இருந்தது. மேலும் இந்தச் சிறிய கடலோர மாநிலத்தின் 14 இலட்சம் மக்களில் ஏறத்தாழ 25 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள். அங்கு இன்றுவரை மத நல்லிணக்கத்துடன் வாழ்வதாக அம்மக்கள் கூறுகின்றனர்.

குறிப்பு : "லவ் ஜிஹாத்" (love jihad) என்ற சொல் முஸ்லிம் ஆண்கள் பிற மதங்களைச் சேர்ந்த பெண்களை மணந்து இஸ்லாத்திற்கு மாற்றுவதைக் குறிக்கிறது. (UCAN news)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜூலை 2025, 12:06