தடம் தந்த தகைமை - தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும், (மத் 7:7) என உறுதியளித்தார் இயேசு.
தட்டுதல் என்ற சொல் ஏராளம் பொருள் சுமந்தது. 1. ஒருவரைத் தட்டுதல், 2. திறக்கப்படத் தட்டுதல், 3. பொருளைக் கொட்டுதல், 4. உழைப்பாளரின் தட்டுதல் என பல அர்த்தங்களைக் கொண்டது. இயேசு சுட்டும் நேரடிப் பொருள் திறக்கப்படத் தட்டுதல் என்பதே. இது கதவு, சன்னலைத் திறப்பதற்கான தட்டுதல் அல்ல. கடவுளின் கனிவான இதயத்தைத் தட்டுதல். இந்தத் தட்டுதலில் ஆழ்ந்த நம்பிக்கையும், அசையா விடாமுயற்சியும், மன்னிக்கும் உணர்வும் இணைந்திருந்தால் நோக்கம் நிறைவாகும் என்பது நிஜம்.
இங்கே, தட்டுபவர் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே திறப்பவரும் முக்கியம். இக்காலச் சூழலில், ஏழைகள், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தோர், பட்டியலினத்தார், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளர், மாணாக்கர், மூன்றாம் பாலினத்தார் என்பவர்களெல்லாம் தங்கள் நியாயமான கோரிக்கைகளோடு அரசைத் தட்டிக் கொண்டே நிற்கின்றனர். செவிமடுக்காமலும், திறக்காமலும் காலம் தாழ்த்தும்போது ஒடுக்கப்பட்டோராலே கதவு உடைக்கப்படும் என்பதே வரலாற்றுச் செய்தி. வறியவருக்குத் திறக்காத கதவு வைத்தியருக்குத் திறக்கும்.
இறைவா! நானல்ல, நீரே என் இதயக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றீர். திறந்து உம் சாயலாம் ஏழையரைச் சந்திக்கும் துணிவு தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்