தடம் தந்த தகைமை - ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை
நான் அனுப்புகிறேன், (லூக் 10:3) என்கிறார் இயேசு.
எந்தக் கப்பலும் துறைமுகத்தில் கட்டுண்டுக் கிடப்பதற்காக உருவாக்கப்படுவதில்லை. அதுபோலத்தான் நற்செய்திப் பணியாளர்கள் ஓரிடத்தில் தங்கி, உண்டு, உறவாடி மகிழ் கொண்டாடத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. நேயத்தை நெஞ்சில் சுமந்து, நீதியை விழிகளில் ஏந்தி, எளிமையைக் கால்களாக்கி, பணிவிடையைக் கைகளாக்கக் கடமைப்பட்டவர்கள். நற்செய்தி அறிவிப்புப் பயணம் பஞ்சு மெத்தையில் புரள்வதைப் போன்றதும் அல்ல, அது முழுக்க முழுக்கக் கரடுமுரடானதும் கடினமானதும் ஆகும்.
நற்செய்தி அறிவிக்கப் புறப்படுதல் என்பது தாயின் பாதுகாப்பான கருவறை விட்டு வெளியேறிப் பிறப்பெடுத்தல் போன்றதாகும். உண்மைக்கும் நன்மைக்கும், கடையருக்கும் கதியிழந்தவருக்கும் கைகொடுத்து உதவிடவோ, உரிமைக்குரல் எழுப்பிடவோ முனைகையில் ஆதிக்கங்கள் கைகோர்த்து எதிர்க்கும் என்பதுவே எதார்த்தம். அப்போது ஓநாய் கூட்டத்திடையே அகப்பட்ட ஆட்டுக்குட்டியாவோம் என்பது இயேசுவின் முன்னெச்சரிக்கை. உண்மையான பணியாளர்களின் உடலை உடைக்கலாம், உயிரைப் பறிக்கலாம், பெயரைக் கெடுக்கலாம், உறுதிப்பாட்டைத் தீண்டக்கூட முடியாது. உறுதியுடன் செல்வதே சீடத்துவ ஆன்மிகம்.
இறைவா! உம் பணியில் தடையென எவர்தான், எவைதான் வரினும் தளராமல் பயணிக்கப் பலம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்