வாரம் ஓர் அலசல் - புனித வாரம் தரும் ஆச்சரியங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
வாழ்வு நாம் நினைப்பதுபோல் இல்லை. நம் திட்டங்களுக்கு ஏற்றாற்போல் அது தன்னை வளைத்துக் கொள்வதில்லை. அதற்கென தனி விதிகள், வினைகள் இருக்கின்றன. ஆனால் நாம்தான், இது சரி, அது தவறு என சில விதிகளை நமக்கேற்றாற்போல் வகுத்துக் கொண்டு, வாழ்ந்துகொண்டு, இறுதியில் வருந்திக் கொண்டு, வாழ நினைத்தபடி வாழாமலேயேச் சென்று விடுகிறோம்.
ஒருவன் எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டேயிருந்தானாம். அவனைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் கேட்டானாம், ‘நீ எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருக்கின்றாயே. எதற்கு?’ என்று. அவன் “‘குளிர் காய்வதற்கு” என்றிருக்கிறான். கேட்டவனோ, “நீ குளிர் காய்வதை நான் பார்த்ததில்லையே?’என்று வினா எழுப்ப, அவனோ “சுள்ளி பொறுக்கவே நேரம் சரியாக இருக்கின்றது. குளிர் காய நேரமில்லை”‘ என்றுரைத்திருக்கிறான்.
நாமும் இப்படித்தான் வாழ்ந்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு என்றறிந்து, ஓய்வின்றி உழைக்கிறோம். ஆனால் அந்தப் பணத்தால் பெறக்கூடிய சுகங்களை முழுமையாக அனுபவிக்கின்றோமா?. நல்ல வேலை என்பதில் தொடங்கி, சின்னதாக ஒரு வீடு, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, ஒரு வாகனம், சின்ன தோட்டம் என வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். போதும், இதுவரை ஆசைப்பட்டது போதும் என்று எங்காவது ஒரு புள்ளியில் நாம் நின்றிருக்கிறோமா? கேட்டால் அப்படி சிறிது நின்று சிந்திக்கக்கூட நேரமில்லை என்கிறானே மனிதன். இதை மூடத்தனம் என்பதா, அறியாமை என்று ஒதுக்குவதா? நம் வாழ்வு குறித்த இந்த பின்னணியில், இயேசுவின் புனித வாரத்தை, அதாவது அவரின் இவ்வுலக வாழ்வின் கடைசி வாரத்தை கொஞ்சம் உற்று நோக்குவோமா?
இயேசு தன் இவ்வுலகப் பணி வாழ்வின் கடைசி வாரத்தில் எருசலேமுக்குள் நுழைகிறார். அரசராக நோக்கப்பட்டவர், எதிர்பார்க்கப்பட்டவர், உரோமைய ஆட்சியிலிருந்து விடுதலை தரவல்லவராக கருதப்பட்டவர், மன்னர்கள் போல் குதிரையில் அல்ல, மாறாக கழுதையில் வருகிறார். “ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரிக்கின்றது கூட்டம். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரிக்கின்றனர். ஆனால், இந்த வாரத்திலேயே அவரின் ஆடைகள் களையப்பட்டு, மேலிருந்து கீழ்வரை தையலில்லாமல் இருந்த உடைக்கு சீட்டு குலுக்கிப் போடப்படுகிறது. ஓசன்னா என்று பாடிய கூட்டம்தான் ‘இவனை சிலுவையில் அறையும்’ என கத்தப்போகிறது. ‘இதோ யூதர்களின் அரசன்’ என்று பிலாத்து கூறியபோது, எங்களுக்கு சீசரைத் தவிர வேறு மன்னரில்லை என்கிறது. அதாவது, தங்கள் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்கிறது. தாவீதின் வழிவந்தவருக்கு ஓசான்னா என்று பாடிய கூட்டம், பரபா என்ற கொள்ளைக்காரனை இவருக்குப் பதிலாக விடுவிக்கக் கேட்கிறது. எத்தனை பெரிய மாற்றம். எவ்வளவு பெரிய வியப்பு.
எருசலேமுக்குள் நுழைந்த இயேசுவை ஆர்ப்பரித்து மக்கள் பாடிய பாடல், அவர் பாடுகளின் முன்னறிவிப்பானது. வரவேற்ற நகரே அவரின் உயிரைப் பறித்தது. வாரத்தின் துவக்கத்தில் பிறந்த மகிழ்ச்சி, தண்டனைத் தீர்ப்பையும், சிலுவைச் சாவையும் நோக்கி இட்டுச் செல்கிறது.
மக்கள் மாற்றப்பட்டார்கள், மாற்றம் பெற்றார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் இயேசுவில் ஏமாற்றத்தைக் கொணர்ந்தன. உரோமையர்களை பழி வாங்குவார் என யூதர்கள் எண்ணியிருக்க, தன்னையே பலியாக்கி பாஸ்காவை நிறைவுச் செய்கிறார் இயேசு. உரோமையர்களை வாள் கொண்டு வெற்றி காண மக்கள் விரும்பும்போது, அவரோ சிலுவையை கையிலெடுக்கிறார். யூதர்களின் எதிர்பார்ப்பிற்கும் இயேசுவின் நோக்கத்திற்கும் இடையேயான முரண்பாட்டை இங்கு பார்க்கிறோம்.
இந்த வாரம் முழுவதும் நாம் ஆண்டவர் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பு என்னும் இறையுண்மைகளிலே நம் மனத்தையும், கவனத்தையும் செலுத்தவிருக்கிறோம்.
புனித வாரத்தின் திங்கள்
புனித வாரத்தின் திங்களாகிய இன்று, “பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு”, அதாவது இந்நாளில், இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வை யோவான் மிக அருமையாகச் சித்தரித்துக் காட்டுகிறார். இயேசு பெத்தானியாவுக்குச் செல்கிறார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். பெத்தானியாவிலுள்ள இலாசரின் வீட்டுக்குச் சென்ற இயேசுவுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இலாசரின் சகோதரி “மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தம் கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது”. யூதாசு இஸ்காரியோத்து, “இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்கிறான். அப்போது இயேசு “மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்” என்கிறார்.
மரியா விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடியில் பூசியதில் நாம் பார்ப்பதென்ன?. ‘விலையுயர்ந்த’ என்பதில், அன்பு விலையைப் பார்ப்பதில்லை என்பதையும், மரியா ‘கலப்பற்ற நறுமணத் தைலத்தைப் பூசினார்’ என்பதில், அவரது அன்பு கலப்பற்றதாக, பிளவுபடாததாக இருந்தது என்பதையும், ‘தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது’ என்பதில் விளக்கின் ஒளியை மறைக்க முடியாது, அது தன் ஒளியை எங்கும் பரப்புவது போலவே, உண்மையான அன்பு நறுமணம் போல எங்கும் பரவும், மற்றும் சான்றாய் விளங்கும் என்பதையும் கற்றுக் கொள்கிறோம்.
மேலும், மார்த்தாவின் சகோதரி மரியா விலையுயர்ந்த நறுமணத் தைலத்தால் இயேசுவின் காலடிகளைப் பூசியது, இயேசுவின் மரணத்திற்கு ஒரு முன்னடையாளமாக அமைகிறது. இறந்துபோனவர்களின் உடலை நறுமணத் தைலத்தால் பூசுவது வழக்கம். மார்த்தாவுக்கும் மரியாவுக்கும் சகோதரரான இலாசர் இறந்து கல்லறையில் வைக்கப்பட்டபின் இயேசு அவரை மீண்டும் உயிர்பெறச் செய்திருந்தார். ஆம். இலாசரின் உடலிலும் நறுமணம் பூசப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்டது. இப்போது இயேசுவின் உடலிலும் நறுமணம் பூசப்பட்டு கல்லறையில் வைக்கப்பட உள்ளது. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட சிறிய காலத்தில் மரியாவின் நறுமணம் பூசுதல் இடம்பெறுவது ஒரு மிக முக்கியத்துவம் நிறைந்த ஒரு செயலாக உள்ளது. தன் அடக்க நாளை முன்னிட்டு மரியா இதைச் செய்ததாக இயேசுவே கூறினார். ஆம். இவ்வாரத் துவக்கத்திலேயே முன்னுரை எழுதப்பட்டுவிட்டது, நடக்கவிருப்பது குறித்து அடையாளம் காட்டப்பட்டுவிட்டது.
புனித வியாழன்
இப்போது நாம் பெரிய வியாழன் நிகழ்வுகள் குறித்து காண்போம். இங்கு யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்கு தன்னையே விற்றுவிட்டான். ஆம். எதிரிகள் முப்பது காசு கொடுத்து அவனை தங்கள் பக்கம் விலைக்கு வாங்கி விட்டனர்.
பெரிய வியாழன். இயேசு, தான் வாழ்ந்துக் காட்டவந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்த மேற்கொள்ளவிருக்கும் சிலுவைச் சாவிற்கு முன்னுரை எழுதிய நாள்தான் இந்த நாள். தான் சிலுவைச் சாவை நோக்கி செல்லும்முன் தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்கிறார். தன் மரணத்திற்குபின் தன்னை மறந்துவிடாதவண்ணம் அந்த விருந்தாடலையே தன் நினைவாக அவர்களுக்கு கொடுத்து அதனை அவர் நினைவாகச் செய்யும்படி பணிக்கிறார். பசியால் வாடுவோருக்கு இறைவன் தோன்றினால் உணவாகத்தான் தோன்றவேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்ன வாக்கை அன்று மெய்ப்பித்துக் காட்டியதுபோல் உள்ளது அவரின் புனித வியாழன் நடவடிக்கைகள். அதோடு நில்லாமல், ‘நான் உங்களை அன்பு கூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கூருங்கள்,’ என்று ஒரு புதிய கட்டளையை வழங்குகிறார். மேலும், பந்தியிலிருந்து எழுந்து அடிமைகளேச் செய்யத் தகுந்த பாதம் கழுவும் பணியைச் செய்கிறார். அதில் நல்லவர் கெட்டவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோரையும், தன்னைக் காட்டிக் கொடுக்கவிருந்த யூதாஸின் பாதத்தையும் கழுவி முத்தமிடுகிறார்.
பாதம் கழுவுதல் பிறரை உயர்வாக கருதிப்போற்றும் ஒரு செயலாகும். உயர்வு என்பது நமக்கு கீழ் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் ஒன்றல்ல, என்னால் எத்தனை பேர் உயர்த்தப்படுகின்றனர் என்பதைப் பொறுத்துள்ளது. பணிவிடைச் பெறுவதிலன்று பணிவிடைச் செய்வதிலேயே மேன்மை அடங்கியுள்ளதென்று நாமும் உணர்வோமா?
புனித வெள்ளி
இயேசு விடியலுக்கு முன்பே கைது செய்யப்படுகிறார்! ஒளியில் இருங்கள் ஒளியாதிருங்கள், ஒளியாய் இருங்கள் என்று கற்பித்தவர் இருளில் கைது செய்யப்படுகிறார். உரோமைய அதிகாரப் பிரதிநிதி முன்னர் அவர் கொண்டுவரப்படுகிறார்.
பிலாத்து, கூட்டத்தின் கூச்சலுக்குக் அச்சப்பட்டு, சிலுவையில் அறைய அனுமதி அளிக்கிறான். இயேசுவும் சிலுவை சுமந்து கல்வாரி குன்று நோக்கி நடைபோடுகிறார். இங்கே சிலுவை சுமந்து சென்றவர்கள் திரும்பி வந்ததாய் வரலாறு இல்லை! ஆம். சிலுவை சுமந்தவர் மீண்டு வந்ததும் மீண்டும் வந்ததும் இங்கு இல்லை. நம் பாவத்தையே சுமக்கும் பரமன் சிலுவைப் பாரத்தைச் சுமந்துச் செல்கிறார். சோகம் நிறைந்த வெள்ளியை நல்ல வெள்ளியாக மாற்றுகிறார் இயேசு.
“பிதாவே இவர்களை மன்னியும், இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்’ என்று மன்றாடி, அக்கிரமம் நிறைந்த வெள்ளியை நல்ல வெள்ளியாக்குகிறார்.
ஆம், இயேசு சிலுவையில் கொல்லப்பட்ட நாளை நல்ல வெள்ளி என்று அழைப்பது இதனால்தான்.
இயேசுவைப் பொறுத்தமட்டில் அவர் தனக்கு நேர்ந்த சாவை ஒரு சோக சம்பவமாகக் கொள்ளாமல், இறையாட்சி விழுமியங்கள் வளர்ந்து பலன்தர தன் இன்னுயிர் உரமாகிறது என்ற தெளிந்த உணர்வோடு மேற்கொண்ட அனுபவமாகும். இதன்வழி, இந்த சோகம் நிறைந்த வெள்ளி நல்ல வெள்ளியாக மாறியது.
இந்த வெள்ளியன்றுதான் நிக்கோதேமுவும், யோசேப்பும் வெளிப்படையாக வெளியே வருகின்றனர். சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு யோசேப்பின் கல்லறையில் தற்காலிகமாய் தங்க வைக்கப்படுகிறது! அதுவும் மூன்று நாளுக்குத் தான்! விதைப்பவராய் வந்தவர் இங்கு விதையாய் மாறுகிறார்! மடியாத கோதுமை மணி விடியலைத் தருவதில்லை. புதையாத விதையேதும் கனிகளைத் தருவதில்லை! என்று அவர் கூறியதே இங்கு அவரில் நிரூபணமானது. இப்போது இவ்வாரம் தரும் பாடம் நமக்கு என்ன என சிந்தித்துப் பார்ப்போம்.
வாழ்வு என்பது, நாம் எவ்வளவு கொண்டிருக்கிறோம் என்பதிலோ, நாம் என்ன சாதித்தோம் என்பதிலோ அல்ல, மாறாக நாம் அன்பு கூரப்படுவதை உணர்வதிலும், நாம் பிறரை அன்புகூர்வதில் கிட்டும் மகிழ்விலும் அடங்கியுள்ளது. நம் மீது கொண்ட அன்பிற்காக சிலுவைச்சாவு வரைச் சென்று தன்னையேக் கையளித்த இறைமகன் தரும் பாடம் அதுதான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்